பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பது ஏன்?
சாதாரணமாக எக்காரியம் தொடங்கு முன்னும் தேங்காய் உடைப்பது வழக்கம். இது தடைகள் எல்லாம் நீங்கி செய்யும் காரியம் வெற்றி பெறவே மேற்கொள்ளப்படுகிறது. கவனிக்க வேண்டியது இங்கு என்னவென்றால் பிள்ளையாருக்கு மட்டும் தேங்காய் உடைப்பது இல்லை.
பல பகுதிகளில் முருகனுக்கும், மாரியம்மனுக்கும் கூட சிதறு தேங்காய் உடைப்பார்கள். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் வீட்டை விட்டு கிளம்பும்போது ஒரு தேங்காய், பயணத்தைத் துவக்கும்போது ஒரு தேங்காய், எரிமேலி சாஸ்தா ஆலயத்தில் ஒரு தேங்காய், கன்னி மூலை கணபதி சந்நதியில் ஒரு தேங்காய், பதினெட்டாம் படியில் ஏறுவதற்கு முன்னால் ஒரு தேங்காய், பயணம் முடித்து திரும்பவும் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் ஒரு தேங்காய் என்று சிதறு தேங்காய் உடைப்பதை வழக்கத்தில் கொண்டிருப்பார்கள்.
கருப்பண்ண சுவாமிக்கும் சிதறு தேங்காய் உடைப்பது என்பது வழக்கம். திருஷ்டி சுற்றி போடும்போதும் சிதறு தேங்காய் உடைப்பார்கள். மொத்தத்தில் கண் திருஷ்டியாக இருந்தாலும் சரி, வேறு ஏதேனும் தோஷம் பீடித்திருந்தாலும் சரி, காரியத்தடை ஆக இருந்தாலும் சரி, எல்லாவிதமான இடையூறுகளும் தகர்ந்து எளிதில் வெற்றி கிட்ட வேண்டும் என்பதே சிதறு தேங்காய் உடைப்பதன் நோக்கம்.
எனவே, விக்னங்களை போக்கி தடைகளை தகர்த்து விமோசனம் அளிக்கவே பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கப்படுகிறது.