சாய்பாபா கையில் இருந்து கங்கா நீர் பாய்ந்து வந்த அதிசயம் .
என்னுடைய பெயரை ஒருவன் அன்புடன் உச்சரித்தால் அவனுடைய விருப்பங்களை நான் நிறைவேற்றுவேன். அவனுடைய பக்தியை நான் மேலும் அதிகரிப்பேன். அத்துடன் என் சரித்திரத்தை படிப்பவர்கள், பாடுபவர்கள் அனைவரினதும் உள்ளத்திலும் குடியிருப்பேன் என்று சொன்னவர் சாய்பாபா சுவாமிகள்.
அல்லா மாலிக் (இறைவனே பெரியவன்) என்று சாய்பாபா வாய் முணுமுணுக்கும் போதெல்லாம் மக்களை ஈர்க்கும் வகையில் மேற்சொன்னது போன்ற தத்துவங்களை அவர் சொல்லத் தவறியதில்லை. ஆனால் சீரடி மக்கள் முதலில் சாய்பாபா சொன்ன நல்ல கருத்துக்களை காது கொடுத்து கேட்கவில்லை.
‘‘சின்னப் பையன் ஏதோ பிதற்றுகிறான்’’ என்றே பெரும்பாலான சீரடி மக்கள் முதலில் நினைத்தனர். மக்கள் இப்படி இருக்கிறார்களே என்று சாய்பாபாவும் ஒரு போதும் சலித்துக் கொண்டதில்லை. தொடர்ந்து சீரடி மக்களுக்கு சாய்பாபா நல்லது செய்து வந்தார். அவரை புரிந்து, முழுமையாக உணர்ந்து கொண்டவர்களின் எண்ணிக்கை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து வந்தது.
இந்த சமயத்தில்தான் புண்தாம்பே எனும் இடத்தில் இருந்து பிரபல ஞானி கங்காகீர் வந்திருந்தார். அவர் சாய்பாபாவை சந்திக்க செல்கிறார் என்பதை அறிந்ததும் சீரடி மக்கள் திரண்டனர்.சாய்பாபாவுக்கும் கங்காகீருக்கும் ஆன்மீக ரீதியாக விவாதம் ஏற்பட்டு சண்டை வரும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்கு மாறாக கங்காகீரை சாய்பாபா நன்கு உபசரித்ததும் மக்களுக்கு ஏமாற்றமாகி விட்டது.
சகல ஞானமும் பெற்று, இந்த உலகின் எந்த மூலையில், என்ன நடந்தாலும் அறிந்த சாய்பாபா, தன் சக்தியை வெளிப்படுத்தவே இல்லை. கங்காகீரிடம் மிக, மிக பணிவுடன் நடந்து கொண்டார். இதனால் கங்காகீருக்கு அவரையும் அறியாமல் கர்வம் உண்டானது. சிறந்த ஞானி என்று போற்றப்பட்ட அவர் சாய்பாபாவை புகழ்ந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் சற்று தற்பெருமையுடனே காட்சியளித்தார். அதைப் புரிந்து கொண்ட சாய்பாபா அடுத்த வினாடி ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினார்.
கங்காகீரின் கால்களை நோக்கி தன் இரு கைகளையும் நீட்டினார். கங்காகீருக்கு மிகவும் அதிர்ச்சியாகி விட்டது. ‘‘இந்த இளைஞன் பார்ப்பதற்கு இஸ்லாமியர் போல காட்சித் தருகிறான். இவன் நம் கால்களைத் தொட்டு விட்டால் அது மிகப் பெரும் தீட்டு ஆகி விடுமே. அந்த தீட்டைப் போக்க நாம் மீண்டும் குளித்து, பரிகார பூஜைகள் செய்ய வேண்டுமே’’ என்று நினைத்தார்.
மறுவினாடி அவர் தனது கால்களை வேகம், வேகமாக மடக்கிக் கொண்டார். அதைக் கண்டு சாய்பாபா மெல்ல புன்னகைத்தார். பிறகு அவர் கங்கையை மனதில் நினைத்தார்.
அடுத்த வினாடி சாய்பாபா கைகளில் புனித கங்கை தோன்றினாள். கங்கை நீரால் கங்காகீரின் கால்களை சாய்பாபா கழுவினார். பாபா கையில் இருந்து கங்கைநீர் பாய்ந்து வரும் அதிசயத்தைப் பார்த்ததும் கங்காகீர் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தார். அங்கு திரண்டிருந்த சீரடி மக்கள் பாபா செய்த அந்த அற்புதத்தைப் பார்த்து பயத்தில் மிரண்டு போனார்கள்.
ஞானிகளான ஜானகி தாசர், தேவிதாசர் இருவரும் பாபா கையில் பொங்கி வந்த கங்கை புனித நீரைப் பார்த்து பேசுவதறியாமல் மெய் மறந்து நின்றனர். அப்போது சாய்பாபா பேசத் தொடங்கினார்….
‘‘சுவாமிகளே….. நீங்கள் மூவரும் மிகப் பெரிய துறவிகள். நான் சிறியவன்.
உங்களால்தான் சீரடி புனிதம் பெற்றுள்ளது. என்னிடம் எந்த சக்தியும் இல்லை. எனவேதான் சங்கராச்சாரியாருக்கு நிகரான கங்காகீருக்கு பாதங்களை கங்கையால் நனைத்து காட்டினேன். வேறு எதுவும் செய்வதற்கு என்னிடம் சக்தி இல்லை’’ என்றார்.
சாய்பாபா இவ்வாறு சொன்னதைக் கேட்டதும் கங்காகீர் கண்களில் இருந்து தாரை, தாரையாக கண்ணீர் வழிந்தது. அவர் கண்ணீரை துடைத்தப்படி சாய்பாபாவை பார்த்து….
உத்தமரே… உம் சக்தியை நாங்கள் நேரில் பார்த்து விட்டோம். தவமே உருவான நீர் சகல சித்திகளும் பெற்றிருக்கிறீர். உமக்கு நிகராக அருளை வெளிப்படுத்த இப்போது யாருமே இல்லை. நீவிர் துறவிகளுக்கும் எல்லாம் துறவி ஆவீர்.
எங்களால் சீரடி புனிதம் அடையவில்லை. உமது பாதம்பட்டதால்தான் சீரடி நகரம் புனிதம் அடைந்துள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
உமது அற்புதத்தால் இந்த சீரடி மண் உலகப் புகழ் பெறப் போகிறது. நீர் பாக்கியசாலி. உமது அருளால் நல்லவர்கள் தீமையில் இருந்து காப்பாற்றப்பட போகிறார்கள். உமக்கு நிறைந்த மங்களம் உண்டாகட்டும்.
– இவ்வாறு கூறிய கங்காகீர் பிறகு சாய்பாபாவிடம் அனுமதி பெற்று சீரடியில் இருந்து புறப்பட்டார்.
அப்போது அவர் சீரடி மக்களிடம், ‘‘மகா ஜனங்களே…. இவரை பித்தர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இவர் பித்தரில்லை. இவர் மிகப்பெரிய மகான். இறை அவதாரம். சீரடி செய்த பாக்கியத்தால் அவர் இந்த ஊரில் அவதரித்துள்ளார். வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் ஆற்றல் அவரிடம் நிரம்ப உள்ளது. அவரை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்
– இவ்வாறு கூறி விட்டு கங்காகீர் சீரடியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு சீரடி மக்களின் மனநிலையிலும், நடவடிக்கைகளிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டது. பாபாவின் அற்புதத்தை நேரில் கண்டு விட்டதாலும், கங்காகீர் கூறிய அறிவுரையாலும் சீரடி மக்கள் மனதில் சாய்பாபாவின் இமேஜ் உயர்ந்தது. சாய்பாபாவை கையெடுத்துக் கும்பிட்டு வணங்கத் தொடங்கினார்கள்.
பாபாவின் மகிமை தொடர்ந்தது. உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட பலர் சாய்பாபாவை தேடி வந்தனர். அவர்களுக்கு சாய்பாபா வேறு எதுவும் கொடுக்கவில்லை. வெறும் திருநீறையும் தண்ணீரையும்தான் கொடுத்தனார். அந்த திருநீறை பெற்ற மாத்திரத்திலேயே நோய்வாய்ப்பட்டிருந்த மக்கள் குணம் அடைந்தனர். நாளுக்கு நாள் பாபாவைத் தேடி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
‘‘அல்லா மாலிக்’’ என்றபடி அனைவருக்கும் பாபா சேவை செய்தார். தன்னை நம்பியவர்கள், நம்பாதவர்கள் அனைவரையும் பாபா சமமாக நடத்தினார்.
பகலில் வேப்பமரத்தடியில் அமர்ந்திருப்பார். இல்லையெனில் சீரடி ஊர் எல்லையில் உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்திருப்பார். சில நாள், சீரடி அருகில் உள்ள ஊர்களுக்கு நடந்தே போய் விட்டு வருவார். எங்கு சென்றாலும் சரி, இரவில் தூங்குவதற்கு பாபா மசூதிக்கு வந்து விடுவார்.
மக்கள் தன்னைத் தேடி வர, வர அவரது பழக்க – வழக்கங்களிலும் மாறுதல் ஏற்படத் தொடங்கியது. அந்த மாறுதல்கள் அனைத்தும் சீரடி மக்கள் மனதில் சாய்பாபா பற்றிய நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது. முழுமையான, உண்மையான துறவிகள் தமக்காக எந்த உணவுப் பொருட்களையும் சமைத்துக் கொள்ள மாட்டார்கள். சாய்பாபாவும் அப்படித்தான் இருந்தார். ஒருநாள் கூட சமைக்காத அவர் தினமும் பிச்சை எடுத்தே சாப்பிட்டார்.
சீரடியில் அவர் பிச்சை எடுத்த வீடுகள் செல்ல செழிப்புப் பெற்றன. இதனால் சாய்பாபா பிச்சை எடுப்பதற்கு நம் வீட்டுக்கு வரமாட்டாரா என்று சீரடி மக்கள் ஏங்கினார்கள். சாய்பாபாவுக்கு கேட்டதையெல்லாம் அள்ளிக் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் பாபா தம் நலனுக்காக யாரிடமும், எதையும், எப்போதும் வாய் திறந்து கேட்டதே இல்லை.
நாட்கள் செல்ல, செல்ல பாபா மற்றவர்களுடன் பேசுவதும் குறைந்தது. இதனால் பாபாவை பற்றி தெரிந்து கொள்ள சீரடி மக்களிடம் ஆர்வம் அதிகரித்தது. அவரிடம் அடிக்கடி சீரடி மக்கள், ‘‘நீங்கள் யார்? இந்த ஊருக்கு எப்படி வந்தீர்கள்? எதற்காக இந்த ஊருக்கு வந்தீர்கள்?’’ என்று கேள்விகள் கேட்டனர்.
இந்த எல்லா கேள்விகளுக்கும் சாய்பாபா ஒரே பதிலையே எப்போதும் கூறினார். ‘‘நானே அல்லா, நானே கிருஷ்ணர், நானே சிவபெருமான்’’ என்பார்.
அடிக்கடி அவர் வாய், ‘‘நானே அல்லா, நானே ஈஸ்வரன்’’ என்று முணுமுணுத்தது. இதனால் சீரடி மக்களுக்கு புதிய சந்தேகம் ஒன்று எழுந்தது.
சாய்பாபா உண்மையில் யார்? அவர் இந்துவா அல்லது முஸ்லிமா? பாபாவை விரோதியாக நினைத்த சிலர் இந்த கேள்வியை தீவிரப்படுத்தினார்கள்.
இந்த கேள்விகளுக்கு சாய்பாபா பதிலடி கொடுத்து தான் இந்துவா அல்லது முஸிலீமா என்ற கேள்விக்கு உலகிற்கு பதில் தந்தார்.