இந்தியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரோன்: இருவருக்கு தொற்று
இந்தியாவிற்குள் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளது.
ஒமிக்ரோன் கொரோனா தொற்று உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பிருந்த கொரோனாவை விட இதன் தீவிர தன்மை அதிகமாக இருக்கலாம் என அச்சம் கொள்ளப்படுகிறது. எனவே, பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறன.
இந்நிலையில், இந்தியாவில் இருவருக்கு ஒமிக்ரோன் கொரோனா தொற்று இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால்,
"தடுப்பூசியின் 2 வது தவணை அதிகளவில் செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஐரோப்பா பிராந்தியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, உலகளாவிய கொரோனா பாதிப்பில் 70 சதவிகிதம் இப்பகுதியில் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் இருவருக்கு ஒமிக்ரோன் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டும் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.
ஒருவருக்கு வயது 66. மற்றொருவரின் வயது 46. அவர்களின் தனியுரிமையை பாதுகாக்க சம்பந்தப்பட்டவர்களின் அடையாளம் வெளியிடப்படாது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அனைவரும் கண்டுபிடிக்குப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒமிக்ரோன் கொரோனா குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். ஆனால், விழிப்புணர்வாக இருப்பது முக்கியம். கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி, கூட்டம் கூட்டப்படுதவை தவிர்க்க வேண்டும்" என்றார்.