இலங்கையில் மின் திட்டங்களை கைவிட்டது சீனா - இந்தியா எதிர்ப்பு
இலங்கையின் யாழ்ப்பாணத்தை ஒட்டியுள்ள நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய 3 தீவுகளில் சூரிய மின்சக்தி திட்டங்களை நிறுவுவதற்கு சீனாவைச் சேர்ந்த சினோ சோர் ஹைபிரிட் டெக்னாலஜி நிறுவனத்துக்கு கடந்த ஜனவரியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த 3 தீவுகளும் தமிழகத்துக்கு நெருக்கமாக இருப்பதால், பாதுகாப்பு கருதி இந்தியா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த மின்திட்டங்களை சீன நிறுவனம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இலங்கையின் 3 வடக்கு தீவுகளில் மின்திட்டங்களை தொடங்கும் பணியை மூன்றாம் தரப்பின் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன நிறுவனம் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலில் இந்தியாவின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், இந்திய எதிர்ப்பின் காரணமாக இந்த மின்திட்டத்தில் இருந்து சீன நிறுவனம் பின்வாங்கியதாக கூறப்படுகிறது.