எம்.ஆர்.ராதாவின் நல்ல குணம் யாருக்கு வரும்?
ஒருநாள், ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து, கையில் பணத்தைக் கொடுத்து, 'இளங்கோவனைத் தெரியுமா?' என்று கேட்டார் ராதா.
'நல்லா தெரியும்ண்ணே...' என்றார் கஜபதி.
'அப்படியா... சரி அந்தப் பணத்தைக் குடு...' என்று கஜபதியிடம் இருந்து பணத்தை வாங்கி, தன் டிரைவரிடம் கொடுத்து, இளங்கோவனிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பினார்.
கஜபதிக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. அவரின் முகம் மாறுவதைக் கண்ட ராதா, 'என்னய்யா ஒரு மாதிரி இருக்க?' என்றார்.
'இல்லண்ணே... நான் கொடுத்துட மாட்டேனா... அவ்வளவு நம்பிக்கை இல்லையா...' என்றார் கஜபதி.
'இளங்கோவன் எவ்வளவு பெரிய வசனகர்த்தா. கொடி கட்டிப் பறந்தவரு. செட்டுல வசனத்துல ஒரு வார்த்தை மாத்துறதுன்னாக் கூட, அவரைத் தேடிப் போய் அனுமதி வாங்கித் தான் மாத்துவாங்க.
'அவரு ஒஹோன்னு இருக்கறப்போ நீ பாத்துருக்க; அவரை நல்லாத் தெரியும்ன்னு வேற சொல்லுற. இப்ப அவரு நிலைம சரியில்ல; அவர் வீட்டை ஜப்தி செய்யப் போறாங்களாம். நீ போய் பணம் கொடுக்குறப்போ என்ன நினைப்பாரு... 'நம்ம நிலைம இப்படி ஆயிருச்சே'ன்னு வருத்தப்படு வாருல்ல... அதான் தெரியாதவங்க மூலம் கொடுத்தேன். அவரு அவமரியாதையா நினைக்கக் கூடாதுல்ல...' என்று தெளிவுபடுத்தினார்.
பொதுவாகவே ராதா ஏராளமான தர்ம காரியங்கள் செய்வார்; கேட்டவர்களுக்கு எல்லாம் இயன்ற அளவு உதவுவார். எந்த உதவியையுமே வெளியில் தெரியாமல் செய்ய வேண்டுமென்று நினைப்பார்.
'மாசத்துல ரெண்டு நாள் மட்டும் ப்ரீயா விட்டுரு; மத்தபடி சினிமாவுக்கு கால்ஷீட் கொடுத்துரு...' என்று கஜபதியிடம் சொல்வார்.
ஒரு நாளைக்கு மூன்று கால்ஷீட் கொடுத்து, இரவு, பகலாக நடித்து வந்த நேரத்திலும், மாதத்தில் இரண்டு நாட்களாவது, நாடக மேடையில் நடித்தால் தான், ராதாவுக்கு நிம்மதியாக இருக்கும்.
'அந்த தேதியில நாடகம் இருக்கே... அன்னிக்கு வேண்டாமே...' என்பார். நாடகத்துக்காக ஒதுக்கிய நேரத்தில், எக்காரணம் கொண்டும், சினிமாவுக்கு கால்ஷீட் தர மாட்டார்.
தன்னை நம்பியிருந்த தன் நாடகக் குழுவினருக்கு செய்யும் சிறு உதவியாக அதை நினைத்தார் ராதா. அவ்வப்போது அவரைத் தேடி, நாடகக் குழு ஆட்கள் உதவி கேட்டு வருவர்.
அப்போது, ராதா கேட்கும் முதல் கேள்வி,'சாப்பிட்டியா...' என்பதாகத் தான் இருக்கும். 'முதல்ல போய் சாப்பிட்டு வா...' என்று தன் வீட்டுக்குள் அனுப்புவார்.
தினமும், அவரது வீட்டில் குறைந்தது, 10 நாடகக் கலைஞர்களாவது சாப்பிடுவர். சாப்பிட்டு வந்த பின், 'என்னடா...' என்று விசாரிப்பார்.
'ரொம்பக் கஷ்டமா இருக்குண்ணே... கொஞ்சம் பண உதவி...'
'என்னடா நீ... இதெல்லாம் கேட்டேனா... சினிமாக் கம்பெனியில எங்கடா ஒழுங்கா பணம் தர்றாங்க! இப்ப என்னத்த தர்றது... சாப்டேல்ல, அப்புறமா வா; பாத்துச் செய்யறேன்...' என்று சொல்லியபடி உள்ளே சென்று, பணத்தை எடுத்து, தன் பனியனுக்குள் வைத்தபடி வருவார்.
அந்த நபரின் அருகில் வந்து, பணத்தை வெளியே எடுத்து, கையில் திணித்து, 'போடா போடா... இப்ப எங்கடா பணம்... அப்புறம் பாக்கலாம்...' என்று சொல்லி, அந்த நபரை அனுப்பி விடுவார்.
ஒருவருக்கு தான் செய்யும் உதவி, மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது என்று நினைத்தவர் ராதா.