இன்றுடன் பிள்ளையார் பெருங்கதை நிறைவு. விநாயகர் ஷஷ்டி.
கார்த்திகை மாதத்து கிருஷ்ணபட்சப் பிரதமையில் தொடங்கி, மார்கழி மாதத்து சுக்ல பட்ச சஷ்டி வரையிலான 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதம் ‘விநாயகர் சஷ்டி விரதம்’ ஆகும். விநாயகர் சதுர்த்தியை அடுத்து, விநாயகப்பெருமானை வழிபடக்கூடிய சிறப்பு மிக்க விரதத்தில் ஒன்று இது.
அவருடைய தோற்றமே தெய்வீகமானது. புனிதப் பிறவியாகிய மனிதப் பிறவி எடுத்திருக்கும் ஒவ்வொருவரும் இந்த விநாயகப் பெருமானுடைய திருவருளைப் பெறுவதற்கு வழிகாட்டுகின்ற புண்ணிய விரதம் இந்தப் பெருங்கதை விரதமேயாகும்.
இந்த விரதத்தை மிகுந்த பயபக்தியோடு கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். ஒருமுறை விக்கிரமாதித்தனின் மனைவியான இலக்கண சுந்தரி, இவ்விரதத்தைக் கடைப்பிடித்தாள். ஆணவம் மிகுதியால், இடையில் நோன்பை கைவிட்டு, கையில் கட்டியிருந்த கயிற்றை கழற்றி எறிந்தாள்.
அதன் விளைவாக, அவளது கணவன் விக்கிரமாதித்தனால் துரத்தப்பட்டு, காட்டிலேயே சில காலம் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டாள். பின்னர் காட்டில் இருந்தபடியே விநாயகர் சஷ்டி விரதத்தை கடைப்பிடித்து, பிரிந்த தனது கணவருடன் சேர்ந்தாள் என்பது புராணக் கதை.
இளநீர், கடலை, அவல், பொரி, எள்ளுருண்டை போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். மேலும் அறுகம்புல், எருக்கம்பூ, பன்னீர்பத்திரம் ஆகியவற்றால் அர்ச்சனை செய்தும் இறைவனை வழிபடலாம். விநாயகர் சஷ்டி விரத நாட்களில், வீட்டில் இருந்தபடியோ அல்லது தினமும் ஆலயங்களுக்கு சென்றோ, விநாயகரின் கதையை வாசித்தும், அவரது துதிப் பாடல்களைப் பாடியும் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
இறுதி நாளான சஷ்டி அன்று முழு உபவாசம் இருந்து, மறுநாள் காலையில் கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றைக் கழற்றிய பின்னர், விநாயகரை பாராயணம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.
21 நாட்களும் விநாயகரின் திருக்கதைகளைப் படிப்பதும், விநாயகரின் திருவிளையாடல்களைப் பேசக் கேட்பதும் மிகப் புண்ணியமாகும். விநாயகர் ஆலயங்களில் விசேஷ அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்ற பின், பவித்ரமான விநாயகப் பெருமானின் சரிதத்தைப் பாராயணம் செய்யலாம். உபன்யாசம் செய்யக் கேட்டும் பயன் பெறலாம்.
பிள்ளையார் பெருங்கதையினை வாசிக்க
21 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் சுக்லபட்சத்தில் வரும் விநாயகர் சஷ்டி அன்று மட்டுமாவது முறைப்படி விரதம் அனுஷ்டித்து விநாயகப் பெருமானின் பூரண அருளைப் பெறலாம்.
விநாயகர் சஷ்டி விரதத்தை அனுஷ்டிப்பதால் வாழ்வில் எல்லாப் பேறுகளும் கிடைக்கும். மேலும் கையில் எடுக்கும் காரியங்கள் வெற்றியாகும்.
விநாயகரை வழிபட பதினாறு மந்திரங்கள்
ஒம் என்ற சிறப்பான பிரணவத்திற்கு கணபதியே தலைவர். விநாயகரை குறிப்பாக பதினாறு மந்திரங்களைச் சொல்லி வழிபடுதல் சிறப்பு. அவை:
ஒம் சுமுகாய நம:
ஒம் ஏக தந்தாய நம:
ஒம் கபிலாய நம:
ஒம் கஜகர்ணிகாய நம:
ஒம் விகடாய நம:
ஒம் விக்னராஜாய நம:
ஒம் கணாதிபாய நம:
ஒம் தூமகேதுவே நம:
ஒம் கணாத்யக்ஷ£ய நம:
ஒம் பாலசந்த்ராய நம:
ஒம் கஜாநநாய நம:
ஒம் வக்ரதுண்டாய நம:
ஒம் சூர்ப்பகர்ணாய நம:
ஒம் ஹேரம்பாய நம:
ஒம் ஸ்கந்த பூர்வஜாய நம: