முருகப்பெருமானின் 108 போற்றி பாடிடுவீர்...

#spiritual #God
முருகப்பெருமானின் 108 போற்றி பாடிடுவீர்...

ஓம் முத்தமிழ் வடிவே முதல்வா போற்றி
ஓம் அகத்தியருக்கு அருளிய ஆண்டவா போற்றி
ஓம் அமரரைக் காத்த அன்பா போற்றி
ஓம் அருணகிரி பாடிய அமலா போற்றி
ஓம் அழகர் மலையில் அருள்வாய் போற்றி
ஓம் ஆறுமுகம் கொண்ட ஆதவா போற்றி
ஓம் ஆண்டிக் கோலமே கொண்டாய் போற்றி
ஓம் ஆறுபடை வீடுடைய அரசே போற்றி
ஓம் ஆறெழுத்து மந்திரம் உகந்தாய் போற்றி
ஓம் இடும்பன் காவடி ஏற்றாய் போற்றி
ஓம் இளங்குமர ஏந்தலே எந்தாய் போற்றி
ஓம் உலகை வலம் வந்த உன்னதமே போற்றி
ஓம் உருகும் அடியார் உளம் வாழ்வாய் போற்றி
ஓம் எட்டுக்குடி அழகா எம்பிரான் போற்றி
ஓம் எண் கண் இறைவா ஏகா போற்றி
ஓம் எங்கும் இருப்பாய் துணையாய் போற்றி
ஓம் ஏரகத்து அரசே எம்மான் போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே அறுமுகா போற்றி
ஓம் ஓங்காரப் பொருளே உத்தமா போற்றி
ஓம் ஔவைக்கு அருளிய பாலகா போற்றி
ஓம் கதிர்காம அருவக் கந்தா போற்றி
ஓம் கந்த கோட்டத்துறை கடவுளே போற்றி
ஓம் கந்தகிரிக் கடம்ப மார்பா போற்றி
ஓம் கந்தா குமரா கனலா போற்றி
ஓம் களிற்றூர்திப் பெருமானே கடம்பா போற்றி
ஓம் கழுகுமலை வாழ் கந்தா போற்றி
ஓம் கனலில் உதித்த கருணையே போற்றி
ஓம் கார்த்திகைப் பெண்கள் பாலனே போற்றி
ஓம் காவடி ப்ரியனே கதிர்வேலா போற்றி
ஓம் கிரவுஞ்சம் தகர்த்த கீர்த்தியே போற்றி
ஓம் குடந்தைக் குமரா குருபரா போற்றி
ஓம் குமர கூர்வடி வேலாபோற்றி
ஓம் குறிஞ்சித் தலைவா குகனே போற்றி
ஓம் குழந்தை வேல குமரா போற்றி
ஓம் குன்றக் குடிவாழ் குணாளா போற்றி
ஓம் குன்றுதோறாடும் குழந்தாய் போற்றி
ஓம் கூடற் குமரா கோமான் போற்றி
ஓம் கொடியிற் சேவல் கொண்டாய் போற்றி
ஓம் கொல்லாதருளும் கோவே போற்றி
ஓம் சொல்லிமலை வேடர் தெய்வம் போற்றி
ஓம் கோதில்லா குணத்துக் குன்றே போற்றி
ஓம் கௌமாரத் தலைவா கௌரி மைந்தா போற்றி
ஓம் ஞானத்தின் வடிவே நாயகா போற்றி
ஓம் ஞான தண்டாயுதபாணி போற்றி
ஓம் சக்திவேல் பெற்ற ஷண்முகா போற்றி
ஓம் சங்கத் தலைவா சதுரா போற்றி
ஓம் சடாட்சர மந்திரமே சரவணா போற்றி
ஓம் சரவணபவ சக்கரம் உறைவாய் போற்றி
ஓம் சங்கரன் பாலா சற்குணா போற்றி
ஓம் சரவணத் துதித்த சிவமைந்தா போற்றி
ஓம் சஷ்டி நோன்பேற்கும் சதுரா போற்றி
ஓம் சிங்கமுகனை வென்ற சீலா போற்றி
ஓம் சிந்தை நிறையும் சிங்கார வேலனே போற்றி
ஓம் சிகி வாகனா உன் சீர்த்தாள் போற்றி
ஓம் சிவகிரிச் செல்வ சிவகுமாரா போற்றி
ஓம் சுப்பிரமணியாய் ஒப்பிலாய் போற்றி
ஓம் சூரனை வென்ற சுப்ரமண்யா போற்றி
ஓம் சென்னிமலைச் செல்வா சிவன்சேயே போற்றி
ஓம் சேவற் கொடியோய் செவ்வேள் போற்றி
ஓம் சேனாதிபதியே செழுஞ்சுடரே போற்றி
ஓம் சைவக் கொழுந்தே சடாட்சரா போற்றி
ஓம் தார காந்தகா தயாபரா போற்றி
ஓம் திருச்செந்தூர் வாழ் தேவா போற்றி
ஓம் திருப்பரங் குன்றம் உறைவாய் போற்றி
ஓம் திருப்புகழ் பெற்ற தெய்வமே போற்றி
ஓம் திருப்போரூர் அருள் தேவா போற்றி
ஓம் திருமாலின் மருகா திருமுருகா போற்றி
ஓம் திருத்தணிகை வாழ் தெய்வமே போற்றி
ஓம் திருவருள் தருவாய் தேவ சேனாபதி போற்றி
ஓம் திருவிடைக்கழி அருள் தலைவா போற்றி
ஓம் திருவினும் திருவே திருவேலா போற்றி
ஓம் தித்திக்கும் வாழ்வருள் திவ்யா போற்றி
ஓம் திவ்ய சொரூப தேவனே போற்றி
ஓம் தேன் தினை மாவேற்கும் திருவே போற்றி
ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
ஓம் தேவயானை நாயகா போற்றி
ஓம் தேவாதி தேவனே தண்டபாணி போற்றி
ஓம் நக்கீரனைக் காத்த நல்லருள் போற்றி
ஓம் நந்தா விளக்கே நன்மையே போற்றி
ஓம் நவவீரர் நாயகா நல்லோய் போற்றி
ஓம் பராசக்தி பாலகா அறுமுகா போற்றி
ஓம் பழநிமலை பாலா வேலா போற்றி
ஓம் பழமுதிர் சோலை பரனே போற்றி
ஓம் பன்னிருகரமுடை பாலகா போற்றி
ஓம் பாலசுப்ரமண்ய பழமே போற்றி
ஓம் பிரணவம் உறைத்த பெரியோய் போற்றி
ஓம் பிரம்மன் வணங்கும் பாலனே போற்றி
ஓம் பொன்னாய் ஒளிரும் உன் திருவடி போற்றி
ஓம் மயிலேறி வரும் மாணிக்கமே போற்றி
ஓம் மயிலம் மலையிலருள் மரகதமே போற்றி
ஓம் மயூகிரி அமர்ந்த கோவே போற்றி
ஓம் மலைதோறும் அருளும் வள்ளலே போற்றி
ஓம் மலையைப் பிளந்த மால்மருகா போற்றி
ஓம் மனதைக் கவர்ந்தோய் போற்றி
ஓம் முருகெனும் அழகே முதல்வனே போற்றி
ஓம் மூவினை களைந்திடும் முருகனே போற்றி
ஓம் வடிவேலைப் பெற்ற வடிவழகா போற்றி
ஓம் வள்ளி மணாளா வடிவேலா போற்றி
ஓம் வல்லமை மிக்க வள்ளலேபோற்றி
ஓம் வயலூர் வாழும் வடிவேலா போற்றி
ஓம் விசாகத்துதித்த வேலனே போற்றி
ஓம் விருத்தனாய் வள்ளி முன் நின்றாய் போற்றி
ஓம் வீரபாகு சோதரா வெற்றிவேலா போற்றி
ஓம் வேடனாய் வந்த வேலவா போற்றி
ஓம் அல்லல் போக்கி அருளும் ஆண்டவா போற்றி
ஓம் ஆனந்த வாழ்வு தரும் ஆறுமுகா போற்றி
ஓம் பற்றினேன் உந்தன் திருவடி போற்றி!
ஓம் பதம் தந்து கத்திடுவாய் பன்னிரு கையனே போற்றி போற்றி!
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே ஒரு கை முகன்
தம்பியே உன்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கைத்தொழுவேன் நான்

நாளென் செயும் வினைதானென் செயும் எனை நாடிவந்த
கோளென் செயும் கொடுங் கூற்றென் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னேவந்து தோன்றிடினே

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தா குலமானவை தீர்த்து எனையாள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறைநாயகனே

ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறுபட அசுரரை வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று
ஆறுமுகம் ஆனபொரும் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
சதாபாலன் ஆனாலும் வினைவெற்பு டைப்பான்
பெருயானை ஆனாலும் சிவச்சிங்கச் செல்வன்
சதாநான் முகன் இந்திரன் தேடுசோதிக்
கதிர்மா கணேசக் கரி என்னுள் வாழி.

கதைகானம் பாடல்களில் வல்லன் அல்லேன்
உரை காவியம் பாடியும் வல்லன் அல்லேன்
சிதானந்தம் ஆறுமுகம் கொண்ட வீறு
உளம் வாழ்வதால் யான் கவிபாடுகின்றேன்.

மயில்ஏறு செல்வன் மறைசொல்லு முதல்வன்
மனம் ஈர்க்கும் மேனி மகான்போற்று மானி
அயிற்செங்கை வேலன் அரன்தந்த பாலன்
அரும்வேதசீலன் குகன்பாதம் போற்றி.

இம்மானுடர் என்றும் எம்முன்னே வந்தால்
இமைப்போதில் மாந்தர் கரையேறி உய்வார்
கைம்மான் பரன் தந்த அம்மான் குகன்தான்
சொல்வான் கடல்மோது கோயில் வளர்ந்தே.

அலைமோதி மோதி அடங்கும் அதேபோல்
நிலைகெட்டு மாந்தர் தறிகெட்டு ஓட
அலைபோல ஆட்டும் விதி என்முன் மங்கும்
மலைமங்கை பாலன் இதைச் சொல்வான் போலும்.

சகம்தந்த வெற்பில் சுகந்தப் பொருப்பில்
உவந்தேறினால் கீர்த்தி சிலம்பேறுவார்கள்
குகன் சொல்லவென்றே அவன் வாழும்வெற்பே
சுகந்தபிராட்டி மகன் கந்த வெற்பே.

வினைக்காடு மாய்க்கும் இருட்பாடு தேய்க்கும்
தனைத்தான் விளக்கும் தனிப் பேறளிக்கும்
முனிக்கூட்டம் மொய்க்கும் மூதறிவாளர் துய்க்கும்
பனிக்காட்டுப் பௌவத் தனிக் கோயில் வாழ்வான்

மணிக்கோயில் மாட்டுவரைக் கோயில் பாட்டுத்
தணிக்காட்டு மத்தி விளங்கும்பொற்கட்டில்
அணிப்பட்டுப் போத்தி அரும்பூக்கள் சார்த்தி
அதன்மீதிருப்பான் குகன் கந்த வெற்பான்.

சலங்கை பொற்றண்டை சரம் முத்து வெண்டை
குலுங்கும் சிலம்போ புலம்பும் புலம்பும்
இலங்கும் நலங்காத் துளங்கும் விளங்கும்
 பொலம்பூ மலர்பொற் கழல்போற்றி போற்றி.

பொன்வண்ணப் பட்டு புரண்டாடு கட்டு
நிறைந்தாடு மேகலை மணிமுத்து விட்டே
அனந்தாடு காஞ்சி அதன்மேல்பொன் கத்தி
திகழ்ந்தாடு கந்தன் இடைபோற்றி போற்றி.

வேடர் தலைவன் மகள்வள்ளி கும்ப
பாரத் தனங்குங்கு மச்சாந்து தோய்ந்த
ஆடப்பொன் னணியின் னகல் மார்பு கந்தன்
நாடாண்டு நமைகாக்கும் பீடொன்றே போற்றி.

மறையோனைக் குட்டிவெம் மதயானை முட்டிச்
சிறைமீட்டுத் தேவர் குறைகேட்டு வாட்ட
முறையீட்டை ஈட்டி எதிரிதலை வீட்டி
நிறை உன் ஈராறும் கரம் போற்றி.

சரத்கால சந்திரன் இருப்பானேல் ஆறு
 குறையாது தேயாது நிற்பானேல் வானில்
பதினாறு கலையோடு பகற்பொழுதுகூட
உரைப்பேன்யான் கந்தா உன் முகங்களுக்குவமை.

முத்தாடு மூரல் முகிழ்த்தெங்கும் சோதி
முத்தத் திருக்கோவை நித்தம் பழிக்கும்
புத்தம் புதுச்சோதி பூங்குமுதச் செவ்வாய்
நித்தம் நிலா எறிஉன் ஆறுமுகம் போற்றி.

வித்தாரமாய்ச் செவ்வரியோடி நீண்டு
புத்தம் புதுக்கமல மலர் அழகை வென்று
நித்தம் மரகதநீல மணிச்சோதி வென்று
சித்தம்கவர் கடைவிழியை எனக்கருளில் என்ன?

சிரன் சீவியாகென்றரன் நித்தம்கூறும்
முறைமுறை முக்கண் முதல்வன் ஓர் ஆறு
முகைகூறி முத்தாடி மோந்துமகிழ் காந்த
சிறந்தொளி பரந்த உனது ஆறுதலை போற்றி.

ஆரம் அணி கேயூரம் மரகத முத்தாரம்
கூறுபடை நீறுபடச் சீறுக் கரவேலும்
ஏறுமயில் வாகனமும் இடையில் இளம்படுச்
சீரை ஒளி சோதிவிட வா முருகா என்முன்.

இங்கு வருவாய் பாலா என்றரனார் கூற
மங்கை சிவகாமி உடைத் தங்க மடி இருந்து
பொங்கொளி சலங்கைமணிக் கங்கணம் குலுங்க
சங்கரன் கரம்தாவும் மங்களனே போற்றி.

குமரா குழந்தாய் குகாவெற்றி வேலா
மயில் வாகனா மா மனோமோகன வா
மகாமாரி கௌமாரி மைந்தா ஏ கந்தா
வரந்தா வரந்தா வளர் வள்ளி காந்தா.

புலன்கள் நலம் கெட்டொடுங்கி அடங்கிக்
கபம் தொண்டையில் வந்திறுக்கி முறுக்கிப்
பயம் வந்து கவ்வி உடல் நைந்துடைந்து
யமன் வந்திழுத்தால் குகா வந்து காப்பாய்.

இவன் நெஞ்சில் பாசக் கயிறு பூட் டிறுக்கு
விடாதே பிடி குத்துடம்பை நொறுக்கு
அவன் ஆவி பற்று என எமன் தூதர் வந்தால்
சிவன் மைந்த நீவந்தெனையாள வேண்டும்.

மலர்ச் சேவிக்கென் வணக்கம்  வணக்கம்,
உடல் பூமி தோய விழுந்தே எழுந்தேன்
யமன் வந்தபோதில் உரைசெய்ய ஆற்றேன்
அவன் வந்து நின்றால் மயில்மீது தோன்று.

நூறாயிரம் அண்டம் வீறோடு நின்று
மாராமல் ஆண்டான் மகாவீரனாக
சூராதி சூரன் கொடுங்கோல் ஒழித்தாய்
குமரா என் கோரக் குறை ஏனோ கேளாய்

தாராசுரன் சேனை தன்னோடும் அண்ணன்
சிங்கன் எனும்பேர் ஈராயிரம் கண்ணன்
வேரோடு நீறாக்கும் சூரா குமரா.
மாராபி ராமா என் மனக்கவலை தீராய்.

வலிப்போடு பீளை இழுப்போடு காய்ச்சல்
துடிக்கும் தொழுநோய் உருக்கும் வெங்காசம்
உலுக்கும் குலைக்கட்டி சூலோடு குன்மம்
நடுக்கம் எடுத்தோடும் உன்பன்னீர் நீறால்.

கண்கந்தன் ரூபம் காதுன்றன் கீர்த்தி
வாய்கந்தன் காதை கைகந்தன் தொண்டு
எண்சாண் உடம்புன் திருப்பாத சேவை
என்செய்கையாவும் உன்மயமே ஆக,

முனிக்கும்பலுக்குக் கணக்கற்ற நன்மை
வரம்பின்றி ஈயும் பலதெய்வம் கோடி
குறவர்க்கும் மறவர்க்கும் பரவர்க்கும் முக்தி
தரும் தனிப்பெருந்தெய்வம் குகன் அன்றி யாரோ.

மனைமக்கள் நண்பர் உறவினர் மற்றோர்
கனைகால் நடைகிள்ளை பூவை புறாவும்
மனைவாழ் இருபாலர் ஆண்பெண் அடங்கல்
குகா உன்னையே எண்ண வாழத் துதிக்க.

பொல்லா விலங்கு புழுப்பூச்சி பொட்டு
நல்லார் நலிகிருமி வண்டுடன் நண்டு
பொல்லாத நோயாவும் இல்லாது போக
வல்லாள உனது வடிவேற் சோதி பட்டு.

தான் பெற்ற பிள்ளை தவறேதும் செய்தால்
தாமே பொறுப்பர் நற்றந்தையும் தாயும்
வான் வண்ண வேலா, நீயே என் பெற்றோர்
கோன் நீ என் குற்றம் பொறுத்தாள் என்னப்பா.

வணக்கம் வடிவேல் தனக்கும் உனக்கும்
வணக்கம்  வளர்பொன் மயில்சேவலுக்கும்
வணக்கம் கிடாவண் கடற்கும் கரைக்கும்
வணக்கம் வணக்கம் என் கந்தப்பனுக்கே.

ஜயிப்பாய் ஜயானந்த பூமானே சீமான்
ஜயிப்பாய் ஜயிக்கொணா வில்லாள மல்லா,
ஜயிப்பாய் களிப்புக் கடல் ஏழை பங்கா
ஜயிப்பாய் நடிப்போன் குமாரா மாதீரா

புஜங்க பிரயாத விருத்தச் சந்தத்தில்
புஜங்கப் பெருமான் புதல்வன் துதியை
நிஜங் கற்பவர் கேட்பவர் பத்தி செய்வோர்
பெரும்பேறு பெற்று குகன்நாடு சேர்வார்.