முன்னாள் அமைச்சர் தங்கமணி பிட்கொயின் கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு - சோதனையில் வெளிவரவு
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததால் அவருடைய மகன் மற்றும் மனைவி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2016ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் அவர் தன்னிடம் 1கோடி ரூபாய் அளிவில் சொத்துக்கள் இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தார். 2020ம் ஆண்டு 7 கோடி வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகன் எர்த்ஸ் நிறுவனத்தில் தங்கமணியும், அவரது மகனும் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. 2016-2020ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக 7கோடி ரூபாய் சொத்து சேர்த்தது மட்டுமல்லாமல், முறைகேடாக சேர்த்த சொத்துக்களை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கமணி எந்தெந்த நிறுவனத்தில் இயக்குநராக இருக்கிறார் என்ற தகவலும் முதல் தகவல் அறிக்கையில் பதிவாகியுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனையில் சிக்கியுள்ள 5வது அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி என்பது குறிப்பிடத்தக்கது.