இந்தியாவில் புதிதாக 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. கர்நாடகாவில் 5 பேருக்கும், ஐதராபாத்தில்4 பேருக்கும் இன்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலில் பெங்களூருவில் 2 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது.
ஒமைக்ரான் திரிபு டெல்டா திரிபை விட வேகமாக பரவக் கூடியது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. எனினும், குறைவான பாதிப்பையே ஒமைக்ரான் ஏற்படுத்தும் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. ஒமைக்ரான் திரிபின் பாதிப்பு, இயல்புகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ள நாட்கள் தேவைப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் 77 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இந்நிலையில், கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. பிரிட்டனில் இருந்து திரும்பிய 19 வயது ஆண், டெல்லியில் இருந்து திரும்பிய 36 வயது ஆண், டெல்லியில் இருந்து திரும்பிய 70 வயது பெண், நைஜிரியாவில் இருந்து திரும்பிய 52 வயது ஆண், தென் ஆப்ரிக்காவில் இருந்து திரும்பிய 33 வயது ஆண் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியை இரண்டு தவணையும் செலுத்தியுள்ளனர். கர்நாடகாவில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், ஐதராபாத்தில் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தெலங்கானாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தற்போது வரை 87 பேருக்கு ஒமைக்ரான் திரிபு தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.