சுவாமி ஐயப்பனுக்கு திருமணம் ஆகிவிட்டதா?

#spiritual #God
சுவாமி ஐயப்பனுக்கு திருமணம் ஆகிவிட்டதா?

ஐயப்பனுக்கு திருமணம் ஆகிவிட்டது... அதுவும் இரண்டு மனைவி, ஒரு மகனும் உண்டு...!
ஹரி ஹர புத்திரன் ஐயப்ப சுவாமி பிரம்மச்சாரி என பலரும் நம்பி வரும் நிலையில், அவருக்கு திருமணம் ஆகி விட்டது. அவருக்கு இரு மனைவியும், அதோடு ஒரு மகனும் உள்ளார் என நம்பப்படுகிறது.

​குடும்பஸ்தனாக காட்சி தரும் ஐயப்பன்

பொதுவாக ஐயப்பனை பிரம்மச்சாரி கடவுள் என அழைப்பார்கள். ஆனால் அவர் கிரகஸ்தராக காட்சி தரும் ஆலயம் தான் ஆரியங்காவில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில். சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன் பிரம்மச்சாரியாகவும், அவரை தரிசிக்க ஆண்கள் மட்டும் சென்று வருகின்றனர். பெண்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் தம்பதியாக காட்சி தரும் ஆர்யங்காவ் சாஸ்தா கோவிலில் பெண்கள் தம்பதியராக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோயில் குறித்த முழு தகவலை இங்கு காண்போம்.
மூலவராக ஐயப்பன் தம்பதியராகக் காட்சி தருகின்றார். அருகில் சிவ லிங்கம் காணப்படுகின்றது.

கோயில் அமைந்துள்ள இடம்: கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆரியங்காவு என்ற இடத்தில் தமிழகத்தின் நெல்லை செங்கோட்டையிலிருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்திற்கு செல்லும் பேருந்துகள் இந்த கோயில் வழியாக தான் செல்லும்.

திருவிதாங்கூர் மன்னருக்கு பட்டு வஸ்திர துணிகளை நெய்து தரும் பணிகளில் மதுரையைச் சேர்ந்த சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்படி நெய்யப்படும் பட்டுத் துணிகள் பாண்டிய நாட்டிலிருந்து திருவிதாங்கூர் அரண்மனைக்குக் கொண்டு செல்லும் பணிகளில் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

ஒருநாள் அப்படி பட்டு துணிகளை திருவிதாங்கூர் அரண்மனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர், பருவ வயதை அடைந்த தன் மகள் புஷ்கலாவையும் உடன் அழைத்துச் சென்றார். பாண்டிய நாடு வழியே பயணித்த அவர்கள், திருவிதாங்கூர் கணவாய் வழியே சென்று அரண்மனையை அடைய திட்டமிட்டிருந்தனர்.

அப்படி மலை பாதை வழியாக சென்ற அவர்கள், இருட்டியதால் மிகவும் பயந்து போனால் புஷ்கலா. அதனால் அவர் அருகில் இருந்த ஆர்யங்காவு தர்மசாஸ்தா கோயில் பூசாரியின் வீட்டில் தன் மகளை தங்க வைத்து, அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள், தான் இந்த பட்டு வஸ்திரங்களை மன்னருக்கு கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று கூறி புறப்பட்டு சென்றார்.

புஷ்கலாவோ தன்னால் முடிந்த அளவு தர்ம சாஸ்தாவுக்காக பூஜைக்கு பூக்களை பறித்துக் கொடுத்தல், நீர் சுமந்து செல்லுதல், கோலமிடுதல், கோயிலை அழகுபடுத்துதல் என வேலைகளை செய்து வந்தார். ஒரு கட்டத்தில் அவளது வாழ்க்கை ஐயப்பனுடன் ஐக்கியமானது. சாஸ்தா மீது காதல் பிறந்தது.

திருவிதாங்கூர் அரண்மனை சென்று திரும்பிக்கொண்டிருந்த வியாபாரியை மதம் கொண்ட ஒரு யானை துரத்தியது. அப்போது அவரை காப்பாற்றும் பொருட்டு அங்கு யானையை வழிமறித்து ஒரு இளைஞன் யானையை அடக்கி, அங்கிருந்து துரத்தி வியாபாரியை ஆசுவாசப்படுத்தினான்.

இதனால் உயிர் தப்பித்த அந்த வியாபாரி, தான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் ஐயனே என கேட்டார். அதற்கு அந்த இளைஞன் உங்களின் மகளை எனக்கு திருமணம் செய்து தாருங்கள் என கேட்டார். அதற்கு அந்த வியாபாரியும் சம்மதித்தார். உடனே அந்த இளைஞன் அங்கிருந்து மாயமாக மறைந்துவிட்டார்.

ஆர்யங்காவுக்கு வந்து சேர்ந்த வியாபாரிக்கு ஆச்சரியம் காத்திருந்தது. காட்டில் தன்னை காப்பாற்றிய இளைஞன் எந்த ரூபத்தில் காட்சி தந்தாரோ, அதே ரூபத்தில் ஐயப்பன் அங்கு எழுந்தருளியிருந்தார். வியாபாரிக்கு ஐயப்பன் தான் தன்னை காப்பாற்றியதும், தன் மகளை கரம்பற்ற நினைத்து அங்கு வந்தது தெரிந்தது. நடந்ததை கோயில் பூசாரியிடம் கூறினார். புஷ்கலாவும் தன் நிலையை கூற ஐயப்பனுடன் மகளை திருமணம் செய்து வைக்க சம்மதித்தார்.

இதற்கு திருவிதாங்கூர் மன்னரும் அனுமதி தர, திருமண ஏற்பாடுகளை செய்த வியாபாரி, மதுரையில் இருக்கும் சொந்தங்களை அழைப்பு விடுத்தார். திருமண நாளி ஐயப்பன் நேரில் தோன்றி புஷ்கலாவை கரம் பிடித்து தன்னுள் ஏற்றுக் கொண்டார்.

ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பன் - புஷ்கலா திருமண நிகழ்வு மார்கழி மாதத்தில் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிகழ்வின் போது மதுரையைச் சேர்ந்த சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த சிலர் குலப் பெண்ணான புஷ்கலைக்கு சீதனம் எடுத்து சென்று நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஐயப்பனுக்கு பூரணி என்ற மனைவியும் உள்ளதாகவும், சத்யகா என்ற மகன் உள்ளதாக கூறப்படுகின்றது.

சபரிமலையில் பிரம்மச்சரியாக வீற்றிருக்கும் ஐயப்பன், ஆர்யங்காவ் சாஸ்தா கோயிலில் கிருகஸ்தனாக அருள்பாலிக்கின்றார். திருமணத் தடை உள்ளவர்கள் இந்த கோயிலில் வேண்டிக்கொள்ள விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ஐயப்பனுக்கு பல்வேறு கோயிலை கட்டியதாக கூறப்படும் ஸ்ரீ பரசுராமர் தான் இந்த கோயிலையும் கட்டியதாக நம்பப்படுகிறது.