தனி ஆளாக உலகம் சுற்றும் தமிழ் டிரெக்கர் யூடியூபர்!

Prasu
2 years ago
தனி ஆளாக உலகம் சுற்றும் தமிழ் டிரெக்கர் யூடியூபர்!

இன்று தன்னுடைய பயணங்களைக் காணொளியாக தமிழ் டிரெக்கர் யூடியூப் சேனலில் வெளியிட்டு கலக்கி வரும், தஞ்சாவூரைச் சேர்ந்த புவனி தரன் படித்தது ஒன்பதாம் வகுப்பு வரை தான். ஆனால், இன்று ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகள், என்று பல உலக நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். உலக மக்களோடு உறவாட மொழி ஒரு தடையே இல்லை என்பதற்கான சான்றாக அவர் திகழ்ந்து வருகிறார்.

"நான் முதன்முதலில் வாங்கிய ராயல் என்ஃபீல்ட் புல்லட்டில், அவ்வப்போது கல்லணை, ஊட்டி என்று சிறு சிறு பயணங்கள் சென்றுகொண்டிருந்தேன். அது தான் என் ஊரை விட்டு நான் வெளியே கிளம்பிய முதல் பயணம்.ஆனால், வாங்கிய ஒன்றரை ஆண்டில் அது திருட்டுப்போகவே, அடுத்த ஓராண்டுக்காலம் வேறு எங்குமே பயணிக்கவில்லை. மனதுக்குள் பயணம் தந்த குதூகலிப்பு துடித்துக் கொண்டேயிருந்தது.

கவுச் சர்ஃபிங் (Couch Surfing) என்றோர் இணையதளம் உண்டு. அதில், உலகம் முழுக்க பயணிப்பவர்கள், அவர்கள் செல்லும் இடத்தில் தங்குவதற்கு யார் வேண்டுமானாலும் இடம் கொடுக்கலாம். அந்த இணையதளத்தின் மூலம் எங்கள் ஊருக்கு வரும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த, நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு நான் தங்க இடம் கொடுத்துக் கொண்டிருந்தேன்" என்று கூறும் அவருக்கு ஒருநாள் தானும் இதுபோன்ற பயணங்களில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. கூடவே அந்தப் பயணங்களை காணொளிகளாகப் பதிவு செய்து யூடியூபில் ஒரு சேனல் தொடங்கி அதில் வெளியிடவும் முடிவு செய்தார்.

இணைய உதவியோடு பட்ஜெட் பயணங்களைப் பற்றித் தெரிந்துகொண்டவர், முழுநேரப் பயணியாக மாறுவதற்கும் அதையே தன்னுடைய வேலையாக மாற்றிக்கொண்டு வருமானம் ஈட்டவும் தயாராகிக் கொண்டிருந்தார்.

"பாகிஸ்தானில் குருத்வாரா கோயிலுக்குச் செல்வதற்காக, ஆண்டில் ஒருநாள் மட்டும் இந்தியா - பாகிஸ்தான் எல்லையைத் திறந்துவிடுவார்கள். அந்த ஒருநாள் பாகிஸ்தான் பயணிக்கத் திட்டமிட்டேன். என்னுடைய யூடியூப் பாதையில் கிடைத்த முதல் திருப்பம் அதுதான்.

உகாண்டாவில் வாழும் பழங்குடிகளுடைய வாழ்வியலில் பண்டமாற்று முறைதான், நம்மைப் போன்ற நாணயப் பரிமாற்றம் இல்லை. அங்கு ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வேலை நடக்கும். ஒருவர் உணவு சமைப்பார், ஒருவர் மதுபானம் தயாரிப்பார், இப்படியாக வீட்டுக்கொரு வேலை நடக்கும். இறுதியில் பண்டமாற்று முறையில், அவரவருக்குத் தேவையான பொருளை ஒருவரிடமிருந்து மற்றொருவர் வாங்கிக் கொள்வர். இதெல்லாமே புதிதாக இருந்தது" என்கிறார் புவனி தரன்.

யூடியூப் சேனல் தொடங்கியபோது, அவருடைய ஒருநாள் பயண பட்ஜெட்டே அதிகபட்சமாக 300 ரூபாய் தான். இன்று தன்னுடைய சேனலின் மூலமாக ஒரு லட்சத்திற்கும் மேலாக வருமானம் ஈட்டுகிறார். அதில் 75 சதவீத வருமானத்தை பயணத்திற்காக செலவு செய்கிறார்.

யூடியூப் என்பது கணிக்கமுடியாதது. எப்போது வேண்டுமானாலும் வரவேற்பு கிடைக்கலாம். சிலருக்கு உடனே கிடைக்கும், சிலருக்கு நாட்கள் பிடிக்கும். என்னுடைய யூடியூப் சேனலில் பார்வையாளர்கள் அதிகமாகி, வருமானம் ஈட்ட ஆறு மாதங்கள் ஆனது. ஒரு காணொளி திருப்புமுனையாக அமையும், எனக்கு பாகிஸ்தான் பயணமும் கென்யா பயணமும் அப்படி அமைந்தது. எதைச் செய்தாலும் அதில் தனித்துவமான அணுகுமுறை இருந்தால் நிச்சயம் வெற்றியடைய முடியும்" என்று நம்பிக்கையோடு கூறினார் புவனி தரன்.

8 மாதங்கள் 20 நாட்கள் பல நாடுகளுக்குப் பயணித்துவிட்டு கடந்த மாதம் தஞ்சாவூர் வந்து சேர்ந்தவர், இப்போது மீண்டும் இலங்கையில் இருக்கிறார்.