பண்டிகையைத் தொடர்ந்து இனி ஆபத்தின்றி எல்லாம் நடக்க இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லுங்கள்.
அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இந்த அபய ஆஞ்சநேயர் திருக்கோயில் இருக்கிறது. கோயிலின் பிரதான தெய்வமான ஆஞ்சநேயர் அபய ஆஞ்சநேயர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தீர்த்தம் அனுமன் தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. கோயிலின் தலவிருட்சமாக அத்தி மரம் இருக்கிறது.
தல புராணங்களின் படி இலங்கை வேந்தனான ராவணனனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் விலக ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட விரும்பினார் ஸ்ரீராமசந்திர மூர்த்தி. சிவபூஜைக்கான லிங்கத்தை காசியிலிருந்து கொண்டுவர சென்றார் அனுமன். அனுமன் லிங்கத்தை கொண்டுவர தாமதமானதால் சீதா தேவி கடற்கரை மணலில் லிங்கத்தை செய்ய, அந்த லிங்கத்திற்கே பூஜைகள் செய்து வழிபட்டார் ராமர்.
பிறகு தாமதமாக வந்த அனுமன் நடந்த அனைத்தையும் கேள்விப்பட்டு கோபம் கொண்டு தான் கொண்டுவந்த லிங்கத்திற்கு பதிலாக கடற்கரை மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் லிங்கத்தை தனது வால் கொண்டு உடைக்க முயன்றார். ஆனால் அனுமனின் இச்செயலால் அனுமனின் வால் அறுந்தது. இதன் பிறகு தான் செய்த தவரை உணர்ந்த அனுமன் சிவஅபச்சாரம் செய்ததற்கு பரிகாரமாக இங்கு தீர்த்தத்தை உண்டாக்கி சிவனை வழிபட்டார்.
அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில் சிறப்புக்கள் இக்கோயிலின் மூலஸ்தானத்தில் அபய ஆஞ்சநேயர், வால் அறுந்த ஆஞ்சநேயர் என்று இரண்டு மூர்த்திகள் உள்ளனர். சிவலிங்கத்தை உடைக்க முயன்று வால் அறுந்ததால் இங்குள்ள ஆஞ்சநேயர் வால் அறுந்த கோலத்திலேயே காட்சியளிக்கிறார். இந்த ஆஞ்சநேயர் கடல் மணலில் உருவான ஒரு சுயம்பு ஆஞ்சநேயர் என்பது கூடுதல் சிறப்பு. அபய ஆஞ்சநேயர் பீடத்திற்கு கீழே கோடி ராமாரக்ஷச மந்திர எழுத்துகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஆஞ்சநேயருக்கு முன்புறம் ராமர் பாதம் இருக்கிறது.
இக்கோயிலில் இருக்கும் தல விருட்சமான அத்தி மரத்தில் இளநீரை கட்டி ஆஞ்சநேயரை வேண்டிக்கொள்கின்ற வழக்கம் பின்பற்றப்படுகிறது. உக்கிரமடைந்து சிவலிங்கத்தை உடைக்க முயன்ற ஆஞ்சநேயர் என்பதால் இவரை குளிர்விக்கும் விதமாக இவ்வாறு இளநீர் கட்டி வைத்து வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் வேறு இளநீர் வாங்கி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
புரட்டாசி கடைசி சனிக்கிழமை, ஆஞ்சநேயர் ஜெயந்தி, ஆனி ரேவதி நட்சத்திரம் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் இங்கு ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் செய்து வழிபடுகின்றனர். வழிபடும் பக்தர்களுக்கு பயத்தை போக்கி காத்தருள்பவராக இருப்பதால் இவருக்கு அபய ஆஞ்சநேயர் என்ற பெயர் ஏற்பட்டது. குழந்தை பாக்கியம், பயம் மற்றும் மனக்குழப்பம் நீங்க, ஆபத்துகளிலிருந்து காத்து கொள்ள போன்ற பல காரணங்களுக்காக பக்தர்கள் இங்கு வழிபட்டு பலனடைகின்றனர்.
கோயில் அமைவிடம் அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ளது. கோயில் நடை திறப்பு காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும், மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். கோயில் முகவரி அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில் ராமேஸ்வரம் ராமநாதபுரம் மாவட்டம் – 623526 தொலைபேசி எண் 4573 – 221093.