விரட்டி விட்ட பிள்ளைகள்: சொத்துக்களை மீட்டுத்தரக் கோரி தாயார் கோரிக்கை!
தன்னிடமிருந்து அபகரிக்கப்பட்ட சொத்துக்களை மகன்களிடமிருந்து மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் மூதாட்டி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ள சம்பவமொன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இடம்பெற்றுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்த 94 வயதுடைய அலமேலு என்பவருக்கு 5 மகன்கள், 3 மகன்கள் உள்ளனர்.
மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு அருகே சொந்த இடத்தில் வீடு, குடோன், கடைகளை கட்டி வசித்து வந்தனர்.
இவரது கணவர் மகாதேவன் உயிரிழந்த நிலையில் தனது வீடு மற்றும் தனது கணவர் கட்டி விட்டு சென்ற கடை உள்ளிட்டவற்றை வாடகைக்கு விட்டு அதில் வரும் பணத்தை வைத்து இந்த மூதாட்டி தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.
ஆனால் வீடு மற்றும் குடோனை வாடகைக்கு விட கூடாது என அவரது மூத்த மகன் ஏழுமலை பிரச்சனை செய்து வந்ததாக தெரிகிறது.
இதனால் போதிய வருமானம் இல்லாமல் உண்ண உணவு இல்லாமல் அலமேலு மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்த நிலையில் அவரது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
மேலும், அவரிடம் இருந்து கடை குடோன் வீடு ஆகியவற்றை மூத்த மகன் ஏழுமலை பறித்துக் கொண்டதாக கடந்த 4 ஆண்டுகளாக அதை மீட்டுத் தரக்கோரி மீஞ்சூர் காவல் நிலையம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் என அலைந்து அலைந்து வந்துள்ளார்.
ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் வாழ்க்கையை வெறுத்த அலமேலு, கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளாக எங்கும் நியாயம் கிடைக்காத அலமேலு, இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் தனது சொத்தை அபகரித்து மூத்த மகன் ஏழுமலை வசமிடமிருந்து அதனை பெற்றுத் தரும்படி கோரிக்கை மனு அளித்துள்ளார்.