தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு.

#India
தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு.

விபத்து நடந்தவுடன் எவ்வளவு சீக்கிரமாகப் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறோமோ?.. அதுதான், உயிரைக் காப்பாற்றும். அதுபோல, சைபர் க்ரைம் சம்பவங்கள் நடந்த 72 மணி நேரத்துக்குள் தகவல் கொடுத்தால், துரிதமாக நடவடிக்கை எடுக்கமுடியும்.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் சைபர் குற்றங்கள் எனப்படும் இணையவழிக் குற்றங்களும், மோசடிகளும் அதிகரித்துள்ளன.

கடந்த 2020-ம் ஆண்டில் தமிழகத்தில் சைபர் குற்றங்கள் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கின்றன. இதுகுறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டில் 385 ஆக இருந்த குற்றங்கள், 2020-ம் ஆண்டு இரண்டு மடங்கு உயர்ந்து 782 -ஆக அதிகரித்திருக்கின்றன. கொரோனா பொது முடக்கக் காலமான 2020-ல் இந்தியாவில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில், 11,097 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறது.

தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 385 சம்பவங்கள் தொடர்பாக எஃப்.ஐ.ஆர். போடப்பட்டிருக்கின்றன. அடுத்து, 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் 2021-ம் ஆண்டு நவம்பர் இடையிலான காலகட்டத்தில் 1,125 சம்பவங்கள் தொடர்பாக எஃப்.ஐ.ஆர். பதிவாகியிருக்கின்றன. இந்தியாவைப் பொருத்தவரை, 2016ல் 12,317 குற்றங்களும், 2017ல் 21,796 குற்றங்களும், 2018ல் 27,248 குற்றங்களும், 2019ல் 44,735 குற்றங்களும், 2020ல் 50,035 குற்றங்களும் பதிவாகியிருக்கின்றன. மத்திய அரசின் புள்ளிவிவரப்படி கடந்த சில ஆண்டுகளாக சைபர் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில், நிதி மோசடிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான குற்றங்கள் மட்டுமல்ல, ஏ.டி.எம், டெபிட்கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை மையமாக வைத்து நடக்கும் நூதன திருட்டுகளும் அதிகரிக்க முக்கிய காரணம், வங்கி வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களுடன் அனைத்து வங்கிகளும் கணக்கை இணையவழி மூலம் இணைக்கப்பட்டிருப்பதே என்கிறார்கள் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள்.

இதைத் தெரிந்துவைத்திருக்கும் கிரிமினல்கள், வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். ஏதாவது ஆசை வார்த்தைகளைப் பேசி, செல்போனின் உள்ளே புகுந்துவிட்டால், அதை வைத்து வங்கிக்கணக்கின் உள்ளே போய் பணத்தை அள்ளிவிடுகிறார்கள்.

இப்படி ஏமாந்தவர்கள் மூலம் பதிவாகும் விவரங்கள் அதிகம். லேட்டஸ்ட்டாக பிட்காயின். இந்த வகை கிரிப்டோ மோசடி தமிழகத்திலும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. இப்படியாக இணையவழி மோசடிகள் ஏராளமாக நடக்கின்றன. மக்களும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுவருகிறார்கள்.

அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் மிகவும் குறைவானவையே என கூறலாம். இதைவிடப் பல மடங்கு இண்டர்நெட் தொடர்பான க்ரைம் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை 2016ல் 144 குற்றங்களும், 2017ல் 228 குற்றங்களும், 2018ல் 295 குற்றங்களும், 2019ல் 385 குற்றங்களும், 2020ல் 782 குற்றங்களும் பதிவாகியிருக்கின்றன.

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் அதிகளவு சைபர் குற்றங்கள் நடைபெற்ற முதல் 5 மாநிலங்களை எடுத்துக் கொண்டால் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள உத்தரப் பிரதேசத்தில் 11,097 குற்றங்களும், இரண்டாவது இடத்தில் உள்ள கர்நாடகாவில் 10,741 குற்றங்களும், மகாராஷ்டிராவில் 5,496 குற்றங்களும், தெலங்கானாவில் 5,024 குற்றங்களும், அஸ்ஸாமில் 3,530 குற்றங்களும் நடைபெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகத்தை எடுத்துக் கொண்டால், 12வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்களைப் பார்த்தால் விரைவில் முதல் 10 இடங்களுக்குள் வந்து விடலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.