இரட்டையர்களுக்கு அரசு வேலை - பஞ்சாப் அரசு கவுரவம்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சோஹ்னா-மோஹ்னா என்ற ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு மின்சார வாரியத்தில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.
பிங்கல்வாரா தொண்டு நிறுவன ஆசிரமத்தில் வளர்ந்த இந்த இரட்டையர்கள், ஐடிஐ படிப்பில் மின்சாரத்துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மின் விநியோக கட்டுப்பாட்டு அறையில் பணி வழங்கப்பட்டு, மாதம் ரூ.20,000 தொடக்க சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், இருவருக்கும் மின்துறையில் சிறந்த கல்வி அறிவு இருப்பதாகவும், மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டின் கீழ் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அவர்களை தொண்டு நிறுவனத்தில் இருந்து பணியிடத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக மாவட்ட செஞ்சிலுவை சங்கம் கூறி உள்ளது.
இருவரும் வளர்ந்த பிங்கல்வாரா தொண்டு நிறுவன தலைவர் இந்தர்ஜித் கவுர் கூறியதாவது:-
18 வயதாகும் சோஹ்னாவும், மோஹ்னாவும் பிறந்தவுடனேயே பெற்றோர்களால் கைவிடப்பட்டனர். பின் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரையும் பிரித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதால் அவர்களை அப்படியே வளர மருத்துவர்கள் அறிவுறுத்தினர். பின் பிங்கல்வாரா தொண்டு நிறுவனத்தில் சேர்க்கப்பட்ட இருவரும் இங்கேயே வளர்ந்து, படித்து முன்னேறி அரசு பணியிலும் சேர்ந்துவிட்டனர்.