அனுமன் கவசம் கிடைக்கும் நேரங்களில் படித்திடுங்கள்.
அனுமன் கவச அருமந்திரத்தின்
முனைவன் இராமச்சந்திர மூர்த்தியே
ஆசிரியத்துள் அடங்கும் யாப்பே
மந்திரத்து இலக்கு மாருதி ஆகும்
காற்றின் புதல்வனே காத்திடும் வித்து
அஞ்சனைச் செல்வனே மிஞ்சிடும் ஆற்றல்
நெஞ்சின் ஆவல்கள் நிறைவேறிடவே
பராவும் வேண்டுதல் பற்றுகள் அனைத்தும்
இராம தூதனே இணைப்பின் பினைப்பு!
எண்ணி எண்ணி இராமன் இசைப்பான்
கீழ்பால் இருந்தெனை அனுமன் காக்க!
மேற்பால் கேசரி மைந்தன் காக்க!
கடலைக் கடந்தவன் வடக்கில் காக்க!
காற்றின் களிமகன் தெற்கில் காக்க!
திருமால் பக்தன் திசைதொறும் காக்க!
என்றும் எல்லா இடர்களிலிருந்தும்
பொன்றும் ஐயம் போக்குவோன் காக்க!
சுக்ரீவன் கொளும் தக்க அமைச்சன்
மிக்குயர் வளிமகன் மேல்தலை காக்க!
அரும்பெறல் மறவன் இருபுருவத்தெழும்
வெற்றி மிகுந்த நெற்றியைக் காக்க!
குறைநிழல் அகற்றும் குரக்கினத் தலைவன்
நிறைவிழி இரண்டையும் நேர்வந்து காக்க!
இராமனின் தொண்டன் என்கவுள், இருசெவி
விராய் எப்போழுதும் வேட்புடன் காக்க!
மூக்கை அஞ்சனை புதல்வன் காக்க!
மாக்குரங்கரசன் மணிமுகம் காக்க!
அரக்கரை வென்றோன் எருத்தம் காக்க!
அருக்கனைத் தொழுவோன் அருந்தோள் காக்க!
ஆழியை நீந்தியோன் அகலம் காக்க!
நீள்நெடுங் கையன் பக்கம் காக்க!
சீதையின் துயரைச் சிதைத்தவன் என்றன்
மார்பகம் இரண்டையும் சீருறக் காக்க!
இலங்கை நடுக்கினோன் இடைப்புறம் காக்க!
இலங்கு கொப்பூழ் எம் மாருதி காக்க!
காற்றின் புதல்வன் இடுப்பைக் காக்க!
அறிவின் சிறந்தவன் செறிவிடம் காக்க!
விடையவன் உகந்தோன் தொடையைக் காக்க!
இலங்கை வாயிலை எரித்தவன் முழந்தாள்
வலங்கொளக் காக்க! குரங்கிற் கீர்த்தியன்
மேற்கால் காக்க! ஆற்றல் மிகுந்தவன்
கணுக் கால்களினைக் கண் எனக் காக்க!
மாமலை நிகர்த்தவன் மணிக்கதிர் நிகர்த்தவன்
கால்கள் இரண்டையும் சால்புறக் காக்க!
கடுவலி மிக்கவன் கால்விரல் காக்க!
ஐந்தவித் தோன் என் மைம்முடி காக்க!
உறுப்புகள் அனைத்தையும் உரவோன் காக்க!
திறமையும் கல்வியும் திகழப் பெற்றோர்
உற்வுடன் அனுமன் கவசம் ஓதுவோர்
மாந்தருள் மாந்தராய் மாண்புடன் விளங்குவர்
ஏந்து நற்பேறும் வீடும் எய்துவர், நாள்தொறும்
ஒருமுறை இறுமுறை மும்முறை நாள் தொண்ணூறு
வேட்புடன் ஓதுவோர் பகை ஒழிந்திட்டுத் தகைபெற
நிற்பர், சீரும் சிறப்பும் வேருற ஓங்குவர்
அகநோய் புறநோய் மனநோய் அனைத்தும்
புகவே புகாமல் போற்றும் மருந்திது!
அரசடி இருந்திதை நிரல்பட ஓதுவோர்
குறவிலாச் செல்வம் நிறைவுடன் பெறுவர்!
வெற்றி எம்முனையிலும் பற்றிச் சிறப்பர்! இராமன்
காப்புடன் இனைந்திதை அணிபவர் உறாஅர்
எந்நோயும் நீடுவாழ்ந்து உயர்வர்! எல்லாத்
துறையிலும் வெல்வார் வாழ்வார்! உள்ளும் புறமும்
வெள்ளத் தூய்மையாய் அல்லும் பகலும் அனுமன்
கவசம் சொல்லுவார் அச்சம் துடைப்பார்!
வெல்லுவார்! சிறை விடுபடுவர் சிறுபெருங்குற்றக்
கெடுதலை அழிப்பர்! விடுதலை பெறுவர்!