அற்புதங்கள் நிகழ்த்தும் ஆஞ்சநேயர்
ராமருக்கும் ராவணனுக்கும் பயங்கர யுத்தம் நடந்து கொண்டிருந்தது. ராவணன் மகனான இந்திரஜித் விடுத்த நாகபாசத்தால் லட்சுமணன் மூர்ச்சையுற்றான். அரண்மனை வைத்தியர் ஒருவர், ‘‘சஞ்சீவகரணி, விசல்யகரணி, சந்தானகரணி எனும் தெய்வீக மூலிகைகள் திருப்பாற்கடல் நடுவே சந்திரா மலையில் உள்ளன. அவற்றைக் கொண்டு வந்தால் போதும்; லட்சுமணன் உயிர் பிழைத்துவிடுவார்’’ என்று கூறினார். மூலிகைகளைக் கொண்டுவரும் பொறுப்பை ஆஞ்சநேயர் ஏற்று, உடனே, திருப்பாற்கடலை அடைந்தார்.
அங்கே அவரால் மூலிகைகளை அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை. அதனால், சஞ்சீவி மலையை அப்படியே பெயர்த்துத் தூக்கி வந்தார். வழியில், ஐயங்கார்குளம் என்ற ஒரு தலத்தில், சிறிது நேரம் தங்கி மலையைத் தோள்மாற்றி எடுத்துச் சென்றாராம். அப்போது மலையினின்று ஒருபாகம் இத்தலத்தில் விழுந்தது. சஞ்சீவி மலையின் ஒரு பகுதி விழுந்த இடம் என்பதால், அதன் மருத்துவ குணங்கள் காற்றில் கலந்து, அதனூடே ஆஞ்சநேயரின் அருளும் இத்தலத்தில் நிலைபெற்று இன்றளவும் பரிமளிக்கின்றன.
இப்படி சஞ்சீவிராயர் சற்று நேரம் தங்கியிருந்த தலம் என்பதால் இங்கு உருவாகியிருக்கும் ஆலயம் சஞ்சீவிராயர் கோயில் என்று வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் சிறிது நேரம் அமர்ந்தாலும்கூட நோய் நிவர்த்தியும் மன நிம்மதியும் வெகு எளிதில் கைகூடுகிறது என்பது மக்களின் நம்பிக்கை. வரலாற்று கல்வெட்டுக்கள் இவ்வூரை ராஜிய காளியூர் கோட்டத்து ஐயன்குளம் எனத் தெரிவிக்கின்றன. திருக்கோயில், விஜயநகரப் பேரரசின் கட்டிடக்கலைப் பெருமையை பறை சாற்றுகின்றன.
ராஜகோபுரமும் பின் கோபுரத்தை அடுத்துவரும் மண்டபமும் அமைந்துள்ளன. தண்ணீர் வெளியேறுவதற்கு வசதியாக கோபுர கட்டமைப்பின் மேலிருந்து குழாய்கள் நிறுவியுள்ளனர். ஐயங்கார்குளம் எனும் இக்கோயில் தீர்த்தம் திருமகளின் சாந்நித்தியம் நிறைந்திருப்பதால் இதனை லக்ஷ்மீசரஸ் என அழைக்கிறார்கள். சஞ்சீவி பர்வதத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும் இக்குளத்து புனித நீருக்கு உண்டு என்கிறார்கள்.
பொதுவாகவே அனுமன் ஆலயங்களுக்கு ராஜகோபுரம் இருக்காது. பல கோயில்களில் அனுமனுக்கு உட்புறம் தனிச்சந்நதி இருக்கும். சில தனி ஆலயங்களில் அனுமனே விஸ்வரூபனாக இருப்பதால், அந்த உயரத்துக்கும் மேலே கோபுரம் எழுப்புவது இயலாததாக இருக்கிறது. ஆனால் இத்தலத்தில், மூன்றுநிலை ராஜகோபுரம் அமைத்துள்ளார்கள். மூன்று விமானங்கள், மூன்று பிரதட்சிணம் என்பது இத்திருக்கோயில் அமைப்பாகும்.
திருக்கோயில் முகப்பு மண்டபத்தில் ஒரே கல்லில் வடித்த தூண்கள் நான்கும் அழகுடன் அமைந்துள்ளன. நுழைவாயில் இடைக்கழியாய் அமைய இருபக்கங்களிலும் சிற்பத் தூண்கள் அணி செய்யும் நீண்ட மண்டபம் உள்ளது. உட்பிராகாரம் கடந்து மகாமண்டபம். அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறையில், அனுமன், பக்த ஆஞ்சநேயராக வடக்கு திருமுகமாக வணங்கும் திருக்கரங்களுடன் அயோத்தி திக்கை நோக்கி ராமபிரானை தொழுதபடி உள்ளார். ஆஞ்சநேய மூல மூர்த்திக்கு எதிரில் சீதா-லட்சுமண சமேதராக ராமபிரான் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
திருமடப்பள்ளியில் தண்ணீர் வசதிக்கு கிணறு போன்ற அமைப்பு உள்ளது. இது தவிர ஏரிக்கரைக்கு அருகில் வேறொரு கிணறும் உண்டு. அதன் அமைப்பும் சிற்பத் தொழில்நுட்பமும் நம் முன்னோர்களின் சிற்பத் திறனுக்குச் சான்றாக உள்ளது. நடைவாவியின் முகப்பு வளைவின் இரு தூண்களிலும் அதிநுட்பமான சிற்ப வேலைப்பாடு. மூடப்பெற்ற பெரிய கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கும் அமைப்பும் அதனுளே படிக்கட்டுகளும் மிக சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன.
கடுமையான கோடை காலத்தில், காஞ்சிபுர பேரழகனாம் வரதராஜன் இங்கே வசந்தோற்சவம் காண்கிறார். சித்ரா பௌர்ணமி தினத்தில் பாலாற்றில் திருவூரல் எனும் இடத்தில் திருமஞ்சனம் கண்டருளும் சின்ன காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், இத்தலத்திற்கும் வந்து நடைவாவி உற்சவம் ஏற்று, திரும்பும்போது வேதாந்த தேசிகர் சந்நதியில் எழுந்தருளி, விசேஷ மரியாதையையும் பெற்றுக் கொள்கிறார்.
கோடி கன்னிகாதானம் லட்சுமி குமார தாதா மகாதேசிகன் எனும் மகான் ஒருசமயம் அளவற்ற பொன்னை எடுத்துக்கொண்டு தமது சீடர்களுடன் யாத்திரை மேற்கொண்டார். ஐயங்கார்குளம் தலத்தை அடைந்த அவரை வழிப்பறி கொள்ளையர்கள் சூழ்ந்துகொண்டார்கள். அந்த சமயத்தில் எம்பெருமானைப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். அவ்வளவுதான்.
எங்கிருந்தோ வானரங்கள் பட்டாளம் பட்டாளமாக வந்தன! அரசு, ஆல், புரசை என்னும் மரங்களிலிருந்து குரங்குகள் தொப்பென கொள்ளையர் முன்பாக குதித்தன. சீறிப் பாய்ந்து எதிரில் தென்பட்ட கொள்ளையரின் மேல் விழுந்து கடித்துக் குதறின. தப்பித்தோம் பிழைத்தோம் என்று திருடர்கள் குதிரையில் ஏறிப் பறந்தனர். லட்சுமிகுமார தாததேசிகரின் மனம் ஆஞ்சநேயரின் மீதுள்ள பரம பக்தியால் உருகியது.
ஆபத்து காலத்தில் வானர சேனையோடு வந்து கொள்ளையரை விரட்டி தம்மைக் காப்பாற்றியதை கண்டு அவர் அனுமனைப் போற்றலானார். ஆஞ்சநேயருக்கு தாமும் ஒரு கைங்கர்யம் செய்ய வேண்டுமென்று உளங்கொண்டார். சோளிங்கபுரத்தை மனதில் வைத்து, அவர் ஆஞ்சநேய சுவாமிக்கு பிரமாண்டமான திருக்குளம் வெட்டி கோயிலும் நிர்மாணித்தார். இதுதான் இன்று தாதசமுத்திரம், ஐயங்கார் குளம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. மிக அற்புதமாக ஆஞ்சநேய சுவாமிக்கு திருச்சந்நதியை நிர்மாணித்தார்.
இந்த தடாக ஆஞ்சநேயரின் பெயரில் ஸ்ரீஹனுமத்விம்சதி எனும் அழகிய ஸ்தோத்திர பாடல்களை அருளிச் செய்தார். இந்தப் பாடல்களை பக்தியுடன் சொல்பவர்களுக்கு என்றும் மங்காத செல்வம், பெரும் புகழ், வலிமை, மக்கட்செல்வம், நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் என்று அனைத்து நன்மைகளும் தேடி வரும் என்று அவரே இப்பாடல்களில் பல இடங்களில் கூறுகிறார்.
ஐயங்கார்குள ஆஞ்சநேயர் முன் பக்தியுடன் பஜனை செய்வது என்பது ராமச்சந்திர பிரபுவின் திவ்ய பாதுகைகளில் சரணாகதி செய்வதைப் போன்றது என்றும் அவர் தெரிவிக்கிறார். ஒவ்வொரு மூலம் நட்சத்திரத்தன்றும் திருமஞ்சனம், புஷ்பாஞ்சலி, புஷ்பாங்கி, வெண்ணெய் காப்பு, புறப்பாடு என்று நிகழ்ச்சிகள் நடந்தேறுகின்றன. அனுமத் ஜெயந்தி மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஐயங்கார்குளம், காஞ்சிபுரம்-கலவை பாதையில் பாலாற்றை அடுத்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது
மேலும் ஆன்மீகம் தொடர்பான தகவல்களை பார்வையிட இதில் கிலிக் செய்யவும்.