தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 23
நேற்றைய தொடர்ச்சி....
ஐங்குறுநூறு
ஐந்து திணைகளையும் பற்றித் திணை ஒன்றுக்கு 100 பாடல்களாக 500 பாடல்களைக் கொண்டது இந் நூல்.
இந் நூலில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் 3 அடிக்கு மேல் 6 அடிக்கு உட்பட்டன. இவ்வாறு குறைந்த அடிகளையுடைய பாக்களால் இயன்றமையால் இந் நூல் ஐங்குறு நூறு என்னும் பெயர் பெற்றது. தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர வேந்தன்.
கலித்தொகை
150 கலிப்பாக்களை கொண்டது.ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒரு புலவராக ஐந்து புலவர்களால் பாடப்பட்டது. பாலை-பெருங்கடுங்கோ, குறிஞ்சி - கபிலர், மருதம் - மதுரை மருதனிளநாகனார், முல்லை - சோழன் நலுருத்திரன், நெய்தல் - நல்லத்துவனார்.
இந் நூலைத் தொகுத்தவர் நல்லத்துவனார். உரை எழுதியவர் நச்சினார்க்கினியர்.
அகநானூறு
அகப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு நெடுந்தொகை என்று வேறு பெயரும் உண்டு. இந் நூற்பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்க்கை 146.
இந்நூலைத் தொகுக்குமாறு செய்தவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. தொகுத்தவர் மதுரை உப்பூரிக்குடி கிழார் மகன் உருத்திரசன்மன். இந் நூலின் முதல் 90 பாடலுக்கு பழைய உரை உள்ளது. முழுமையாக நாவலர் வேங்கடசாமி நாட்டரும், கரந்தை கவியரசு வெங்கடாசலம் பிள்ளையும் உரை வரைந்துள்ளனர்.
பதிற்றுப்பத்து
பத்துப் பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்ட நூல் ஆதலால் 'பதிற்றுப் பத்து' எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு பத்தும், தனித்தனியே, ஒவ்வொரு புலவரால், ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப் பெற்றதாகும். நூலின் முதற் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கப்பெறவில்லை. நூலை தொகுத்தார், தொகுப்பித்தார் பற்றி அறியப்படவில்லை.
தொடரும்