108 வயதிலும் வயலில் வேலை செய்யும் பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி!
மளிகைக் கடை, உணவகம் நடத்தியவர் இன்று 108 வயதிலும் வயலில் வேலை செய்து வருகிறார்... பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் பாட்டி!
மத்திய அரசின் பத்ம விருதுகள் 2021 அறிவிக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த விருதுகள் கிடைத்தது. மறைந்த மக்கள் மனதில் நிறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் பத்ம விபூசண் விருதுக்குத் தேர்வாகி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
ஐந்து ரூபாய் டாக்டர் என்று அழைக்கப்படும் திருவேங்கடம் வீரராகவன், குறைந்த விலையில் உணவுகளை தரமாக வழங்கிவந்த கோவை சாந்தி கியர்ஸ் பி. சுப்ரமணியன், வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா...இப்படி கவனிக்கத்தக்க பலரும் பத்மஸ்ரீ விருதுகள் பெற்றிருக்க இதனூடாக பாப்பம்மாள் என்ற பெயரும் இடம்பெற்றிருந்தது. யார் இந்த பாப்பம்மாள்? இதில் கவனம் ஈர்க்கும் விதமாக இடம்பெற்றிருந்த பாப்பம்மாள் தமிழகத்தைச் சேர்ந்த 108 வயது மூதாட்டி. பாப்பம்மாள் என்கிற ரங்கம்மாள் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்-காரமடை அருகே உள்ள தேவனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்.
1915ஆம் ஆண்டு பிறந்த பாப்பம்மாள், சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்து பாட்டியின் நிழலில் வளர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர். தாய், தந்தையை இழந்து தனியாக இருந்த பாப்பம்மாளை தேவனாபுரம் கிராமத்தில் இருந்து தேக்கம்பட்டிக்கு அழைத்துச் சென்று வளர்த்துள்ளார் அவரின் பாட்டி.
தாய், தந்தை செய்த மளிகைக் கடை தொழிலை பாப்பம்மாளும் சிறுவயதில் செய்யத் தொடங்கியுள்ளார்,அதுவும் தன்னிடம் இருந்த 3 பவுன் நகையை அடமானம் வைத்து. 20 வயதில் திருமணம் முடிந்துள்ளது. பாப்பம்மாளின் கணவா் ராமசாமி. இவர்களுக்கு குழந்தை இல்லை. எனினும் ஒன்றாகவே வாழ்ந்துவந்துள்ளனர்.
கணவா் ராமசாமி கடந்த 1992ஆம் ஆண்டு உயிரிழந்தாா். இதனால் அன்றில் இருந்து இன்று வரை ஒண்டிக்கட்டையாக வாழ்க்கையை நடத்தி வருகிறார். மளிகைக் கடை, ஹோட்டல் என தொழில் நடத்தி வந்த பாப்பம்மாள், அதில் கிடைத்த வருமானத்தின் மூலம், அப்பகுதியில் விவசாய நிலம் வாங்கியிருக்கிறார். இவர் முதல் முறை 4 ஏக்கர் 29 சென்ட் விவசாய நிலத்தை வெறும் 700 ரூபாய்க்கும், 2 ஏக்கர் 7 சென்ட் 3,000 ரூபாய்க்கும் வாங்கியிருக்கிறார். பாப்பம்மாள் கைவசம் இருந்தது 10 ஏக்கர் நிலம். வயது மூப்பின் காரணமாக 10 ஏக்கர்களையும் நிர்வகிக்க முடியவில்லை, எனவே அதில் ஒரு பகுதியை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு விற்றுள்ளார்.
எனினும் சுமார் 2.5 ஏக்கர் நிலத்தை தொடர்ந்து தன்வசம் வைத்து இந்த தள்ளாத வயதிலும் இந்த நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். சிறுவயதிலிருந்தே, பாப்பம்மாள் விவசாய முறைகளில் ஆர்வம் கொண்டிருந்தார், அதைப் பற்றி அறிய நேரத்தைச் செலவிட்டார்.
நிலம் வாங்கியபோது, சோளம், பல்வேறு வகையான பருப்பு வகைகள் மற்றும் ஒரு சில பழங்கள் மற்றும் காய்கறிகளை அவர் குடும்பத்திற்காகப் பயிரிட்டு பயன்படுத்தத் தொடங்கினார். எனினும் விவசாயத்தை முறையாக கற்க தமிழக வேளாண்பல்கலைக்கழகத்திலும் சேர்ந்தார். பின்னர் இதே பல்கலைக்கழகத்தில் விவாதக் குழு அமைப்பாளராக இருந்தது தனிக்கதை. கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார் பாப்பம்மாள்.
விவசாயம் மட்டுமல்ல, பாப்பம்மாள் அரசியல்வாதியும்கூட. ஆம், அவர் திமுக உறுப்பினர். விவசாயத்தை போலவே அரசியலிலும் பாப்பம்மாளுக்கு ஆர்வம் வர திமுகவில் தன்னை சிறு வயதிலேயே இணைத்துக் கொண்டு தற்போதும் செயல்பட்டு வருகிறார்.
1959ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகவும், 1964ஆம் ஆண்டு யூனியன் கவுன்சிலராகவும், மாதா் சங்கத் தலைவியாக பதவிகளை வகித்துள்ளாா் இந்த பாப்பம்மாள். கடந்த நூற்றாண்டில், பாப்பம்மாள் இரண்டு உலகப் போர்கள், இந்தியாவின் சுதந்திரம், பல இயற்கைப் பேரழிவுகள் மற்றும் இப்போது கொரானா தொற்றுநோய் என பலவற்றைக் கண்டு வாழ்ந்து வருகிறார். இன்றைய தலைமுறை 50 வயதிற்குள் ஓய்வு பெறுவதைப் பற்றி சிந்திக்கும்போது, பாப்பம்மாள் பாட்டி ஒரு எடுத்துக்காட்டு மட்டுமல்ல, ஒரு உத்வேகமும் தான். ஏனென்றால் இன்றும் கூட, ஒவ்வொரு நாளும் இந்த பாட்டி தனது நிலத்திற்குச் சென்று அதில் வேலை செய்கிறார். அவரின் இந்த சாதனைகள் காரணமாகத் தான் 107 வயதில் பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது