காது வலிக்கு அதிக திறன் கொண்ட மாத்திரையை வழங்கிய வழக்கு: ரூ.1 லட்சம் இழப்பீடு
சிகிச்சையின் போது அதிக திறன் கொண்ட மாத்திரையை வழங்கியதால் உடல் உபாதை ஏற்பட்டதாக மருத்துவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவர் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ஜோசப் என்பவர், 2015ஆம் ஆண்டு காது வலிக்காக சீனிவாசன் என்ற மருத்துவரிடம் பரிசோதனை செய்து மருந்து வாங்கி உள்ளார். அதனை உட்கொண்ட பின்னர் காது வலி அதிகரித்ததால், ஜோசப் வேறு மருத்துவரிடம் மருந்து வாங்கி எடுத்துக்கொண்ட பிறகு பிரச்னை தீர்ந்துள்ளது.
இதனையடுத்து தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு வழங்கிடக் கோரி மருத்துவர் சீனிவாசனுக்கு எதிராக தேனி மாவட்ட நுகர்வோர் நீதி்மன்றத்தில் ஜோசப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர், மதுரையில் உள்ள மாநில நுகர்வோர் ஆணையத்தின் கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அதனை விசாரித்த நீதிபதி, மனுதாரர் ஜோசப்பின் குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்கள் இருப்பதால் அவருக்கு மருத்துவர் சீனிவாசன் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட்டார்.