டிஜிட்டல் இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி...அரசாங்கமே களத்தில் இறங்கி விளையாடுகிறது.
இந்தியாவில் புதிய டிஜிட்டல் கரன்சியை அரசாங்கமே ரிசர்வ் வங்கியின் மூலம் வெளியிடப்படவுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக Cryptocurrency மீதான ஆர்வம் என்பது மிகப்பெரிய அளவில் இருந்து வருகின்றது. ஆர்வம் மட்டும் அல்ல கணிசமான முதலீடுகளையும் இந்தியர்கள் செய்துள்ளனர்.
எனினும் பட்ஜெட்டுக்கு முன்பு வரையில் கூட கிரிப்டோகரன்சி குறித்தான தெளிவில்லாத நிலையே இருந்து வந்தது. குறிப்பாக பல்வேறு உலக நாடுகளும் கிரிப்டோகரன்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், இந்தியா மெளனம் காத்து வந்தது.
மேலும் கிரிப்டோ மசோதா தாக்கல் செய்யபடலாம் என்ற நிலையில், அது எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தும்..? கிரிப்டோகரன்சிகள் இந்தியாவில் நிரந்தரமாக அனுமதிக்கப்படுமா? அல்லது தடை செய்யப்படுமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது.
இதற்கிடையில் சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) மூலம் இந்தியாவில் சொந்தமாக ஒரு டிஜிட்டல் கரன்சி (Digital Rupee) உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் இது குறித்த முக்கிய அறிவிப்புகள் ஏதும் வராத நிலையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்ற மிக முக்கிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்த நிலையில் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு பெரு மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாக, RBI மூலம் டிஜிட்டல் ரூபாயானது அறிமுகம் செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் கரன்சியானது, டிஜிட்டல் பொருளாதாரத்தினை ஊக்குவிப்பதோடு, மலிவான நாணய மேலாண்மை அமைப்புக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகின்றது.
பிளாக்செயின் மற்றும் பிற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இந்த டிஜிட்டல் கரன்சியானது உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களை மேற்கொண்டு முதலீடு செய்ய ஊக்குவிக்கலாம். எனினும் அரசு இதற்கு கணிசமான வரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசுக்கும் வருமானம் கிடைக்கும் என பெரிதும் நம்பப்படுகின்றது.