இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரேநாளில் 1,733 பேர் கொரோனாவால் இறப்பு.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,61,386 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் 1,67,059 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்த நிலையில், இன்று பாதிப்பு சற்று குறைந்திருக்கிறது.
கடந்த சில தினங்களாகவே தினசரி கொரோனா தொற்றாளர்கள் இந்தியாவில் குறைந்துவரும் நிலையில், கொரோனாவிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை உயர்ந்தும் வருகிறது. அந்தவகையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,81,109 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை இந்தியாவில் 3,95,11,307 என்றாகியுள்ளது. மேலும் தற்போது சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 16,21,603 என் குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 17,42,793 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் 1.61 லட்சம் பேருக்குத்தான் கொரோனா உறுதியாகியிருந்தது. இதன்மூலம் தினசரி கொரோனா உறுதியாவோரின் எண்ணிக்கை விகிதம், 9.26% என்றாகியுள்ளது. குணமடைவோர் விகிதம், 94.91% என்று உள்ளது. இதுவரை இந்தியாவில் 73.24 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா உயிரிழப்பை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 1,733 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 1,192 பேர் உயிரிழந்த நிலையில் இன்று அது சற்று குறைந்திருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,97,975 என்று உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு இதுவரை 164.89 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தகவல். தேசிய அளவில் இதுவரை மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் தொகுப்பிலிருந்து 1,64,89,60,315 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மாநில அரசுகளின் வசம் 11,48,99,956 டோஸ்கள் இருப்பு உள்ளன.
தேசிய அளவில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் தகுதிவாய்ந்த நபர்கள் 75 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று ஒரேநாளில் 57.42 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்திருக்கிறது.
இவற்றுடன் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் 15-17 வயதுக்குட்பட்ட சிறார்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாத அவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.