03. 02. 22 முதல் சுவிசில் புதிய தளர்வுகள்...வீட்டில் இருந்தபடி பணியாற்றப் பணிக்கப்பட்ட ஆணை சுவிசரசால் நீக்கப்படுகின்றது.
வீட்டில் இருந்தபடி பணிசெய்ய வாய்ப்புள்ளோருக்கு (Homeoffice), வீட்டில் இருந்தபடி பணியாற்றப் பணிக்கப்பட்ட ஆணை சுவிசரசால் நீக்கப்படுகின்றது.
அதுபோல் 17. 02. 2022 முதல் தடுப்பூசி சான்று மற்றும் சுகாதார முகவுறை அணியும் கட்டாயத்தில் இருந்து விடுப்பு அறிவிக்கப்படலாம்.
பெருநோய்த்தொற்றுப்பரவியத்தின் நிலத்திணை (endemic) கண்பார்வைக்குத் தெரிவதாக சுவிற்சர்லாந்து நடுவனரசின் நலவாழ்வு (சுகாதார) அமைச்சர் திரு. அலான் பெர்சே தெரிவுத்துள்ளார். இதன் பயன் சுவிஸ்அரசு தற்போது கடைப்பிடிக்கும் சிறுமுடக்க நடவடிக்கைகள் முழுமையாக நீக்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மகுடநுண்ணித்தொற்றுக்கு (கோவிட்-19) ஆட்பட்டோர் தொகை அளப்பெரியதாயினும், தொற்றுக்கு உள்ளானவர்கள் தொகையில் மருத்துவமனையில் தங்கி பண்டுகம் (வைத்தியம்) பெற்றோர் விகிதம் மிகக் குறைவு என்ற அடிப்படையிலும், மருத்துவமனைகள் அதிக அழுத்தத்திற்கு ஆளாகாத சூழல் நிலவுவதாலும், இத்தளர்வு வர வாய்ப்புள்ளதாக இன்றைய ஊடக சந்திப்பில் சுவிஸ் அரசால் கருத்து இயம்பப்பட்டது.
நலவாழ்வு அமைச்சர் திரு. பெர்சே மேலும் பேசுகையில் இந்த கும்பத்திங்கள் (பெப்பிரவரி) 2022 உடன் நாம் ஈராண்டுகளாக பெருந்தொற்று இக்கட்டு நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றோம். தற்போதுதான் இதிலிருந்து விடுபடும் காட்சி தெரிகின்றது என்றார்.
தற்போதைய தளர்வுக்கான நம்பிக்கைக்கு சுவிஸ்வாழ்மக்கள் மகுடநுண்ணித் தொற்று நோய்க்கு எதிரான எதிர்ப்புத் திறனை பெற்றிருப்பதே ஆகும். கடந்த ஈராண்டுகளில் நோய்த் தொற்றுக்கு ஆட்பட்டு குணமடைந்தவர்களும், தடுப்பூசி மற்றும் ஊக்கி (Booster) ஊசி பெற்றுக் கொண்டு பெருமளவு மக்கள் நோய் எதிர்ப்புத் திறனூட்டப்பட்டவர்களாகஉள்ளார்
திரிவடைந்த மகுடநுண்ணிகளில் ஒமிக்குறோன் வகை விரைந்து பரவினும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறைவாக உள்ளது.
ஆகவே தற்போதைய நிலையை சுவிற்சர்லாந்து அரசு தொற்றுப் பரவியத்தின் நிலத்திணையாக, அதாவது பெருந்தொற்று நிறைவடையும் காலமாக நோக்குகின்றது.
முடக்க வெளியேற்றக்கால அட்டவணை
எதிர்வரும் வியாழக்கிழமை முதல் வீடுகளில் இருந்து பணிசெய்யும் ஆணை (Homeoffice) மீளப் பெற்றுக் கொள்ளப்படுகின்றது.
அதுபோல் நோய் தொற்றுக்கு ஆளானவர்களுடன் தொடர்பு ஏற்பட்டால் ஒருவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் எனும் விதியும் நீக்கப்படுகின்றது.
ஆனால் வீடுகளில் இருந்து பணி ஆற்றும் ஆணை எனும் முறையில் இருந்து முன்மொழிவு எனும் பதமாக சுவிஸ் அரசால் மாற்றப்படுகின்றது. இதன் பொருள் ஒவ்வொரு நிறுவனமும் தாமாக தன்விருப்பில் முடிவெடுக்கலாம்.
உரிய நலவாழ்வு முறைகளைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தும், நுண்ணி நீக்கிகளை பயன்படுத்தி தமது பணியாளர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகாது காக்கும் பொறுப்பும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தொடர்ந்தும் இருக்கும்.
மறு அறிவுப்பு வரும்வரை பணியிடங்களிலும் முகவுறை தொடர்ந்து அணிந்திருக்க வேண்டும்.
நோய்த்தொற்றுக்கு ஆளானவருடன் தொடர்பு இருந்திருப்பின் தனிமைப்படுத்தப்படவேண்டும் எனும் விதியும் விலக்கப்படுகின்றது. இவ்விதி முன்னர் (12.01.22ல்) சுவிஸ்சர்லாந்து அரசினால் 5 நாட்களாக குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்து.
ஒருவர் மகுடநுண்ணித்தொற்றிற்கு ஆளானது எதிர்ப்புத் திறனூட்டி (அன்ரிக்கென்) பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பின், நோயாளர் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் விதி தொடரும்.
முடக்கத்திலிருந்து சுவிஸ் வெளியேறும் இருவகை நிகழ்நி
09. 02. 2022 வரைமாநில அரசுகளுடனும் துறைசார் வல்லுனர் குழுவுடனும் கலந்து ஆய்ந்து உரிய முடிவு 16. 02. 2022 அறிவிக்கப்படும்.
16. 02. 2022ல் நிலவும் மீமுகடு (நோய்த்தொற்று உச்சநிலை) சூழலிற்கு ஏற்ப அறிப்பு அமையும்.
வகை 1
அனைத்துவகையான மகுடநுண்ணித் தொற்று நடவடிக்கைகளும் உடனடியாக நீக்கப்பட்டு முழுத்தளர்வு 17. 02. 2022 முதல் அறிவிக்கப்படும்.
பெருந்தொற்று உச்சம் முழுமை அடைந்து இதனைத்தாண்டி இன்னும் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை எனும் நிலையிலும், சுவிஸ் வாழ் மக்கள் அனைவரும் போதிய நோய் எதிர்ப்புத் திறனைபரவலாக கொண்டுள்ளார்கள், மருத்துவமனைகள் அனைத்து நெருக்கடிகளையும் தாண்டிவிட்டன, நலவாழ்வுத்துறை அமைப்புக்கள் அழுத்தமற்று இயல்பான நிலையில் உள்ளன எனும் உறுதியும் கிடைத்த நிலையில் இவ்வாறான அறிவிப்பு அறிவிக்கப்படலாம்.
இவ்வாறான நிலையில் தளர்த்தப்பட்டு நீக்கப்படும் முடக்கக்கட்டுப்பாடுகள் இவை ஆகும்:
உணவகங்களில், நிகழ்வுகளில் அல்லது பொழுதுபோக்கு-, பண்பாட்டு நிறுவனங்களில் தற்போது உள்ள தடுப்பூசிச்சான்று காட்டவேண்டிய கட்டாயம் முழுமையாக நீக்கப்படும்.
பொதுப்போக்குவரத்திலும், அனைத்துக் கடைகளிலும் பொது இடங்கிலும், உள்ளரங்குகளிலும் தற்போது நடைமுறையில் உள்ள முகவுறை அணியும் கட்டாயம் நீக்கப்படும்.
தனி ஆட்கள் தனிப்பட்டு ஒன்றுகூடுவதற்கு தற்போது நடைமுறையில் உள்ள ஆட்தொகைக்கட்டுப்பாடு நீக்கப்படும்.
நிகழ்வுகளுக்கு அரசிடம் ஒப்புதல் பெறவேண்டிய நடைமுறை நீக்கப்படும்.
மிகப்பெரும் நிகழ்வுகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் என்பன தொடர்ந்து இருக்கும், அதற்கான சிறப்பு விதிகள் உருவாக்கப்படவேண்டியிருக்கும்.
மகுடநுண்ணித்தொற்றுப் பரிசோதனையில் நோய் உறுதி செய்யப்பட்டவர்கள்தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய விதியும் தொடரப்படும், அதுபோல் பிறநோயின் பாதிப்பில் இருப்பவர்களுக்கு மகுடநுண்ணித் தொற்று ஏற்படாது பாதுகாத்துக்கொள்ள புதிய விதிகள் அமைக்கப்படும்.
வகை 2
முடக்கநடவடிக்கைகள் படிப்படியாக தளர்த்தப்படும்.
16. 02. 2022 முழுமையாகமுடக்கங்களை நீக்க முடியாத சூழல் நிலவுமானால், இவ்வகை முறையில் சுவிற்சர்லாந்தின் நடுவனரசு இவ்வாறு தளர்வுகளை 17. 02. 2022 முதல் அறிவிக்கும்:
உணவகங்களில், நிகழ்வுகளில், பொழுதுபோக்கு-, மற்றும் பண்பாட்டு நிறுவனங்களில் தடுப்பூசிச்சான்று காட்டத்தேவையில்லை. ஆனால் உணவகங்களில் இருக்கையில் இருந்தபடியே உணவு உண்ண ஒப்புதல் வழங்கப்படும்.
தனிஆட்களின் விழாக்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் நடைமுறைகள், ஆட்தொகைக் கட்டுப்பாட்டு வரைமுறைகள் நீக்கப்படும்.
பொதுவெளியரங்கில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள அரச இசைவாணை (பெர்மிற்) பெறவேண்டிய கட்டாயம் நீக்கப்படும்
தற்போது 2ஜி பிளஸ் (2G+) நடைமுறையில் உள்ள இடங்களுக்கு (நடனவிடுதி, நீச்சல்தடாகம், தீவிர விளையாட்டுப்பயிற்சி, ஊதும் இசைக்கருவிப்பயிற்சி போன்ற) 2ஜி (2G) முறைப்படுத்தப்படும். இதன் பொருள் தடுப்பூசிஇட்டிருக்க வேண்டும் அல்லது மகுடநுண்ணி நோய்த்தொற்றுக்கு ஆளாகி குணமடைந்திருக்க வேண்டும்.
இதன் பிறகு காலச் சூழலிற்கு ஏற்ப மீண்டும் ஆய்ந்து, ஏனைய முடக்கங்கள் பிறிதொரு காலத்தில் படிப்படியாக நீக்கப்படும்.
மகுடநுண்ணித் தனிவகை அமைவு விதிச் சட்டம் (Covid-19-Verordnung besondere Lage) இறுதியாக நீக்கப்படும்.
சுவிசில் முழு முடக்கம் நீக்கப்படுமா? இரண்டுஆண்டுகள் கடந்து இயல்பு மீண்டும் திரும்புமா? 16. 02. 2022 பதில் கிடைக்கும், இதுவரை பொறுத்த நாம் - அதுவரை பொறுத்திருப்போம்!