அதிகரிக்கும் இணையவழி குற்றங்களில் அகப்படாமல் அவதானம் பேணுவோம்!
நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் பயனை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதன் விளைவுதான் இன்று எம்மில் பலரை அடிமை நிலைக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறது. உலகம் உள்ளங்கைக்குள் ஆட்பட்டு விட்டது என்று சொல்வது போல் ஐந்து கைவிரல்களின் நடுவே ஆறாவது விரலாய் கைத்தொலைபேசிகள் மாறி உள்ளன எனலாம்.
இன்று நாம் இருந்த இடத்தில் இருந்து உலகின் மூலைமுடுக்குகளில் உள்ள அனைவருடனும் தொடர்பு கொள்வதோடு தகவல் பரிமாற்றமும் இடம்பெறுகிறது. அத்தோடு தமது உற்பத்திகள் வியாபார பொருட்களை விளம்பரப்படுத்த விற்பனை செய்ய பொழுது போக்க தகவல் பெற என பல தேவைக்கு இன்று இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களான கணினிகள். மடிக்கணனிகள் டெப் மூலம் இணையத்தைப் பயன்படுத்தினாலும் ஒப்பீட்டு அளவில் இணையப்பயன்பாடு கைத்தொலைபேசி மூலமே கூடுதலாக இடம்பெறுகிறது. இன்று கைத்தொலைபேசிகள் மலிவான விலைகளில் பலவகைகளில் இலகுவாக கிடைப்பதே இதற்கு காரணம் எனலாம்.
உலக சனத்தொகையான 7.83 பில்லியனில் 5.22 பில்லியன் மக்கள் கைத்தொலைபேசியை பாவிக்கின்றனர். இது 56.4% ஆக காணப்படுகின்றது. இது உலக சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் 66.6% ஆகும். 64% ஆண்களும் 36% பெண்களுமாக காணப்படுகின்றனர்.
இவர்கள் தமது பொழுதைப் போக்கவும் தமக்கு தேவையான தகவல்களை பெறவும் தொடர்புகளை பலப்படுத்தவும் சமூக வலைத்தளங்களை பின்தொடரவும் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறாக இணையத்தளத்தை பயன்படுத்தும் போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதாவது தகவல்கள் திருடப்படுதல், இணையவழி குற்றச் செயல்களில் ஈடுபடல், நிதி மோசடி என்பவவைகளுக்கு ஆட்பட நேரிடும். இதுவே இணையவழி குற்றம் (Cyber Crime) எனப்படுகிறது.
இத்தகையை இணையவழி குற்றமானது 1910 களிலே முதன் முதலில் ஏற்பட்டது. ஜோசப் மேரி ஜெக்கு ஆட் என்பவரால் பிரான்ஸ் நாட்டு கைத்தறி சம்பந்தமான தகவல்களை திருடியதில் இருந்து இணையவழி குற்றம் ஆரம்பித்தது.
உலகில் இணையத்தளக் குற்றத்தில் ஈடுபடும் முதல் 20 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. சீனா இரண்டாம் இடத்திலும் இறுதி 20 ஆம் இடத்தில் இஸ்ரேலும் உள்ளன. அமெரிக்காவில் 25% உம் சீனாவில் 9% உம் காணப்படுகின்றன.
இந்தியாவில் மட்டும் சுமார் 42 மில்லியன் மக்கள் இணையத்தள குற்றத்திற்கு ஆட்பட்டுள்ளனர். இவ்வாறான குற்றங்களில் தரவுகள் திருடப்படல், தகவல்களை அவரது அனுமதி இன்றி முடக்குதல், பண மோசடி என்பன அடங்கும். இது இருவகையில் இடம்பெறலாம்.
01. சமூக தேவைக்காக அரசு மற்றும் நலன்விரும்பிகள் முடக்குவது (Ethical Hacking)
02. தனிப்பட்ட தேவைக்காக முடக்குவது (illegal hacking)
இவ்வாறான முடக்கங்கள் சமூக நலன் சார்ந்து இடம்பெறும் போது பல்வேறு வகையிலான சமூக குற்றங்கள், இனமோதல்கள் திருட்டு சம்பவங்கள் என்பன தடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் தனிப்பட்ட ரீதியில் முடக்குவது சட்டவிரோதமாகும். இவ்வாறான திருட்டில் பின்வருவன அடங்கும்.
தகவல் தொழில்நுட்ப சேவைகளை திருடுவது, தகவல்களை அழிப்பது, இணையத்தில் முகம் தெரியாதவர்களை ஏமாற்றுவது, கணிணி உட்பட தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து தகவல்களை திருடுவது, மற்றவர்களின் தகவல்களையோ புகைப்படங்களையோ தவறாக பயன்படுத்துவது, சட்டத்திற்கு புறம்பான பாலியல் குற்றங்களை இணையம் மூலம் ஏற்படுத்துவது, மின்னஞ்சல் மற்றும் இணைய அழைப்பு மூலம் கொலை மிரட்டல்கள் இடம்பெறுவது, மற்றவர்களின் மின்னஞ்ஞல் மற்றம் சமூக வலைத்தள கணக்குகளை திருடி அவதூறு பரப்புவது, முகப்புத்தகத்தில் போலியான படங்களைப் பேட்டு மானபங்கப்படுத்தல், வைரஸ் மென்பொருளை பயன்படுத்தி கணணி உபகரணங்கள சீர்குலைத்தல் என பலவகையில் அடங்கும்
இன்றைய காலத்தில் இவ்வாறான இணையவழி குற்றங்கள் மூலம் அதிகம் பாதிக்கப்படுவது சிறுவர்களும் பெண்களுமாக காணப்படுகின்றனர். தமது அன்புக்குரியவர்களை நம்பி ஏமாந்து போகின்றனர்.
இவ்வாறான குற்றங்களுக்கு தமது அன்புக்குரியவர்களிடம் நம்பி ஏமாறுவதே காரணமாக உள்ளது. தாம் மகிழ்ச்சியாக இருக்கையில் உள்ள உரையாடல்கள் புகைப்படங்கள் குரல் பதிவுகள் என்பவற்றை கைப்பேசிகளில் பத்திரப்படுத்தி வைத்துள்ளனர்.
தமது கைப்பேசிகள் பழுதடைந்ததும் கடைகளில் திருத்தக் கொடுப்பதால் அதில் உள்ள தகவல்கள் சில சமயங்களில் களவாடப்பட்டு இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுகின்றன.
இதன் காரணமாக இன்று எமது சமூகத்தில் தற்கொலைகளும் குடும்ப முரண்பாடுகளும் அதிகரித்துள்ளன. இது மாத்திரமன்றி அண்மைக் காலமாக நிகழ்நிலை கல்வி முறை ஊடாக மாணவர்கள் பயன் பெற்ற போதும் முகநூல் மற்றும் போலியான நபர்களின் தொலைபேசி மூலம் தொடர்புகளை மேற்கொண்டு தமது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியவர்களே அதிகம் எனலாம்.
இதற்கு எமது நாட்டில் உள்ள வைத்தியசாலைகளின் உளநல பிரிவு மருத்துவ விடுதிகளில் சிகிச்சைக்காக வரும் அளவுகள் சான்று பகர்கின்றன.
எமது நாட்டில் இவ்வாறான குற்றச் செயல்களை கண்காணிக்க 2006 இல் CERT அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் அதேவேளை முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படுகின்றன.
இதன் மூலமும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவதால் இவ்வாறான. செயற்பாடுகளில் இருந்து விலகி இருப்பது தமது எதிர்காலத்திற்கு உகந்தது என்பதே உண்மையாகும்.
நன்றி- தினகரன்