திருமணத்தன்று 18,000 விதவைகளை வரவழைத்து மகனை வாழ்த்த வைத்த தொழில் அதிபர்
என்ன தான் நாம் 21ம் நூற்றாண்டில் இருந்தாலும் இன்றும் திருமணம் போன்ற நல்ல காரியங்களில் விதவை பெண்கள் கலந்து கொள்வது விரும்பப்படுவது இல்லை.
குஜராத் மாநிலம் மெஹ்சனாவை சேர்ந்தவர் ஜிதேந்திர பட்டேல். தொழில் அதிபர். ஏழை, எளிய மக்களுக்கு உதவி வரும் அவரை அனைவரும் ஜித்து பாய் என்று அன்போடு அழைக்கிறார்கள். அவரது இளைய மகன் ரவிக்கு கடந்த புதன்கிழமை தேரோலில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு வந்து மகனை வாழ்த்துமாறு வடக்கு குஜராத்தில் உள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஆயிரம் விதவை பெண்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். திருமண நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட விதவை பெண்கள் மணமக்களை மனதார வாழ்த்தினர். அவர்களுக்கு ஜித்து பாய் போர்வை, பசுமாடு மற்றும் மரக்கன்றுகளை பரிசாக அளித்தார்.
இது குறித்து ஜித்துபாய் கூறுகையில், என் மகனை சமூகத்தால் ஒதுக்கப்பட்ட விதவை பெண்கள் ஆசிர்வதிக்க வேண்டும் என்று விரும்பினேன். சுபகாரியங்களில் விதவைகள் கலந்து கொள்வது கெட்ட சகுனம் என்று நினைக்கிறார்கள். அந்த நம்பிக்கை பொய் என்பதை நான் நிரூபிக்க நினைத்தேன் என்றார்.