எண்பது வருட காலமாக தொடர்ந்த இசைப்பயணத்தின் முடிவு: பெருந்துயரில் ரசிகர்கள்

Prathees
2 years ago
எண்பது வருட காலமாக தொடர்ந்த இசைப்பயணத்தின் முடிவு: பெருந்துயரில் ரசிகர்கள்

36 மொழிகளில், தேனாக இனித்த பல்லாயிரம் பாடல்கள் தந்த இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் மறைவினால் ரசிகர்கள் பெருந்துயர்

இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று காலமானார். மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சுமார் ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுக்காலை அவரது உயிர் பிரிந்தது.

அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 11ம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது உடல் நிலை தேறி வந்தது. அவருக்கு பொருத்தப்பட்டு இருந்த செயற்கை சுவாசமும் அகற்றப்பட்டது. ஆனால் திடீரென நேற்றுமுன்தினம் மீண்டும் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்தனர். லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆஷா போஸ்லே நேரில் வந்து பார்த்துச் சென்றார். நேற்று காலையில் சிகிச்சை பலனலிக்காமல் அவர் உயிரிழந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவிற்கு பிந்திய சிகிச்சையின் போது பல்வேறு உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் காலை 8.12 மணிக்கு லதா மங்கேஷ்கர் மரணம் அடைந்ததாக  டாக்டர் சந்தானம் தெரிவித்தார்.

இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா' உட்பட அனைத்து முக்கிய விருதுகளையும் பெற்றுள்ளார் லதா மங்கேஷ்கர்.

பொதுமக்களின் அஞ்சலிக்காக லதா மங்கேஷ்கர் உடல் தாதர் சிவாஜி பார்க்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பொதுமக்களின் அஞ்சலியை தொடர்ந்து நேற்று மாலை இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

இந்தியாவின் நைட்டிங்கேலாக கருதப்படும் லதா மங்கேஷ்கர் 1929 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் திகதி பிறந்தார். லதா மங்கேஷ்கர் தனது தந்தையிடம் இளம் வயதிலேயே இசை கற்றுக் கொண்டார்.

கடந்த 1942 ஆம் ஆண்டு முதன் முதலாக 'கிதி ஹசால்' என்ற மராத்தி பாடலைப் பாடினார். அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்து விடவே குடும்பம் கடுமையான நிதி நெருக்கடிக்குள்ளானது.

அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் 'மஜ்பூர்' என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார்.

இது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். இதனைத் தொடர்ந்து வந்த ‘மகால்’, ‘அந்தாஸ்’, ‘பர்சாத்’, ‘துலாரி’ போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தன.

தந்தை இறந்த பிறகு மும்பை வந்த லதா மங்கேஷ்கர் 80 ஆண்டுகளாக இசைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். 1942 முதல் சினிமா துறையில் பாடத் தொடங்கிய அவர் அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நவ்ஷத், எஸ்.டி. பர்மன், சி. ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார், சலீம் சவ்திரி, கய்யாம், ரவி, சஜ்ஜத் ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், மற்றும் உஷா கன்னா, ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனு மாலிக், ஆனந்த் மிலிந்த், ஷிவ் ஹரி, ராம் லட்சுமண், ஏ.ஆர் ரஹ்மான், இளையராஜா என சுமார் எல்லா இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.

36 பிராந்திய மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடியிருக்கும் லதா மங்கேஷ்கர் திருமணமே செய்து கொள்ளாமல் இசைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தமிழில் இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடித்த சத்யா படத்தில் 'வளையோசை' பாடல் மிகப் பிரபலமானது.

1974- ஆம் ஆண்டு அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த லதா மங்கேஷ்கருக்கு அவரின் 90வது வயதில் 'இந்திய மகள்' விருதை கொடுத்து மத்திய அரசு கௌரவித்தது.

லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து நாடு முழுவதும் நேற்றும் இன்றும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுகிறது. அரசு மரியாதையுடன் நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றது.

 

 

பிரதிபண்ணப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!