தொப்புள்கொடி உறவு பற்றி பேசும் தமிழ்த் தலைமைகள் மௌனம் காப்பது ஏன்?
தமிழகத்திலுள்ள தமிழர்கள் எமது 'தொப்புள்கொடி உறவுகள்' எனக் கூறும் தமிழ் தேசியம் பேசுகின்ற வடக்கு, கிழக்கு அரசியல் தமிழ்த் தலைமைகள் எவருமே அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்ற தமிழக_ இலங்கை மீனவர்கள் மோதிக் கொள்ளும் விடயத்தில் வாய் திறக்காது மௌனம் காப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கை தமிழர் விடயம் தொடர்பாக கவனம் செலுத்துமாறு கோரி தயாரித்து அனுப்பிய ஆவணத்திற்கு உந்துசக்தியை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நாடகமாகவே அண்மைக்கால மீனவர் மோதல் சம்பவங்கள் அமைந்துள்ளனவோ எனும் சந்தேகம் எழுவதில் நியாயம் உள்ளது.
இந்திய - இலங்கை மீனவர்கள் கடற் பிராந்தியத்தில் மோதிக் கொள்ளும் விடயம் இன்று நேற்று எழுந்த ஒரு பிரச்சினை அல்ல. கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் செயலில் இரு தரப்பினருமே ஈடுபட்டு கைதாகி, அவர்களது வள்ளங்கள், படகுகள் கைப்பற்றப்படும் சம்பவங்கள் இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகின்றன.
யுத்தகாலத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மீனவர்கள் தமது கடல் பிராந்தியத்தில் ஒரு குறிக்கப்பட்ட தூரத்திற்கு அப்பால் சென்று மீன்பிடிக்க முடியாத நிலைமை காணப்பட்டது. அவ்வாறு செல்லும் மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
இதன் காரணமாக மீதமாக இருந்த இலங்கை கடற்பரப்பினுள் இந்திய மீனவர்களது வருகை யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் சுதந்திரமாகவும் தாராளமாகவும் காணப்பட்டது.
இலங்கை கடற்படையினர் அவ்வப்போது இலங்கை கடல் எல்லைக்குள் மீறி வருகின்ற இந்திய மீனவர்கள் மீது சிறுசிறு தாக்குதல்களை நடத்தியதும், அவர்களது வளங்களை விரட்டி அடித்தமையும் வரலாற்றுப் பதிவுகளில் உள்ளன.
ஆனால் யுத்தம் முடிந்து நிலைமை வழமைக்கு திரும்பியதும் இலங்கை மீனவர்கள் தமது கடற் பிராந்தியத்தில் சுதந்திரமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட பின்னர் இந்திய மீனவர்களுக்கு அது ஒரு தடங்கலான செயலாக அமைந்துள்ளது.
தமிழக மீனவர்கள் சுதந்திரமாக ரோலர் படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் இலங்கை கடல் எல்லைக்குள் வந்து நமது நாட்டு மீன் வளங்களை சூறையாடி மீன்பிடித்த செயற்பாடுகளை இலங்கை மீனவர்கள் முடக்கி விட்டனர்.
இத்தகைய வரலாற்றுப் பின்னணியில் தற்போது இரு தரப்பு மீனவர்களுக்குமிடையே மோதல் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன என்றும் கூறலாம். இவற்றை தடுத்து நிறுத்த இரு நாட்டு அரசாங்கங்களும் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டன. இரு நாட்டு மீனவ சமூகங்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்தன. ஆனால் அவை எவற்றாலும் இரு தரப்பு மோதலையும் இன்றுவரை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை.
இன்றுவரை முடிவுக்கு கொண்டு வர முடியாத மீனவர் மோதல் பின்னணியில் அரசியல் காய்நகர்த்தல்கள் ஏதேனும் உள்ளதோ எனும் சந்தேகம் எழுவதில் நியாயம் உள்ளது. இந்த இரு தரப்பு மீனவர்கள் மோதிக் கொள்ளும் விடயத்தில் இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
அவர் இலங்கை மீனவர்களுக்கு சார்பாக எத்தனையோ கருத்துகளை முன்வைத்துள்ளார். ‘ஆயிரம் படகுகளுடன் சென்று நடுக்கடலில் இந்திய மீனவர்களுக்கு பாடம் புகட்டுவோம்’ என்று கூட அவர் இலங்கை மீனவர்களுக்கு அழைப்பு விடுத்து உறுதியளித்திருந்தார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இது தொடர்பாக பேச்சுக்களையும் நடத்தி இருக்கின்றார். ஆனால் இது தொடர்பாக இந்தியத் தரப்பிலிருந்து சாதகமான சமிக்ஞை எதுவும் வரவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.
அதேசமயம் அமைச்சரது முயற்சிகளுக்கு செவிசாய்க்காது இலங்கை மீனவர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். இந்நிலையில் இந்த போராட்டங்களின் பின்னணியில் அரசியல் காய்நகர்த்தல்கள் உள்ளனவா என்ற சந்தேகம் எழுவதில் நியாயம் உள்ளது.
அதனை விடவும் பிரதான காரணமாக அமைவது என்னவெனில், இந்த ‘தொப்புள்கொடி உறவுகள்’ பற்றி அடிக்கடி அறிக்கை விட்டு பேட்டிகள் கொடுத்து வரும் தமிழ் தேசியம் பேசுகின்ற வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் தலைமைகள் மௌனம் காப்பது ஏன்?
இந்திய அரசின் கவனத்தை தமது பக்கம் திருப்புவதற்காக தமிழ் அரசியல் தலைமைகள் இந்த விடயத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனவா எனும் சந்தேகமும் உள்ளது.
உண்மையில் அவர்கள் மீனவர்களை மோதவிடும் செயலை செய்வார்களேயானால் அதனை விடவும் துரோகத்தனமான செயல் வேறு எதுவுமாக இருக்க முடியாது.
இரு நாட்டு மீனவர்களுமே தமது அன்றாட வாழ்வாதாரத்திற்காக தொழில்ரீதியாக மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இரு நாட்டிலுமே அவர்களை நம்பி பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அவர்களது எதிர்கால வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல் தலைமைகள் ஒருபோதும் ஈடுபடக் கூடாது.
இலங்கையில் கடற்றொழில் அமைச்சராக இந்த அரசாங்கத்தில் டக்ளஸ் தேவானந்தா இருக்கின்றார். அதேபோன்று தமிழகத்திலே இலங்கை தமிழர் விடயத்தில் அதிக அக்கறை கொண்டு செயல்படும் முதல்வராக மு.க ஸ்டாலின் இருக்கின்றார்.
எனவே இந்த மீனவர் பிரச்சினையை இருநாட்டு மத்திய அரசாங்கங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லாமலேயே தமக்குள் பேசி முடிக்கக் கூடிய ஒரு சூழல் இருக்கின்றது. அதனை இருதரப்பும் சரியாகப் பயன்படுத்தி இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழ் தேசியம் பேசுகின்ற வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைமைகள் இவ்விடயத்தில் இருநாட்டு மீனவர்களுக்கும் அறிவுரை கூறி அவர்களை முன்னரைப் போன்று தொப்புள்கொடி உறவுகளாக மாற்றி அமைப்பது காலத்தின் தேவையாகும்.
பிரதிபண்ணப்பட்டது.