கொரோனாவால் ஏற்படும் முடி உதிர்வு! கொரோனாவுக்கு பிந்நைய காலக்கட்டத்தில் இது உண்டாகலாம்!!
கொரோனா வைரஸ் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கிறது. கொரோனாவுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் இது முடி உதிர்தல் உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. கோவிட் 19 தொற்றுநோயால் ஏற்படும் பொதுவான பக்கவிளைவுகளில் ஒன்றாக மன அழுத்தமானது உள்ளது. இந்த மன அழுத்த காரணியாலும் முடி உதிர்வு அதிகரிக்கிறது.
பொதுவாக மயிர்க்கால்களின் வளர்ச்சி மற்றும் ஓய்வானது சுழற்சி முறையில் நடைபெறுகிறது. சாதாரணமாக உச்சந்தலையில் 90 முதல் 95 சதவீதம் பகுதியில் முடி வளரும்போது, சுமார் 5 முதல் 10 சதவீத இடத்தில் முடி வளராமல் இருக்கும். எந்தவொரு மன அழுத்தத்தின்போதும் உடல் அத்தியாவசிய செயல்பாடுகளில் கவனம் செலுத்தத் தொடங்குகிறது. அப்போது உடலில் வளர்சிதை மாற்றங்கள் ஏற்பட்டு முடி அதிக அளவில் உதிரத் தொடங்குகிறது.
கொரோனா தொற்றானது உடல் மற்றும் உளவியல்ரீதியாக பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அப்போது எடுத்துக்கொள்ளும் சில ஊட்டச்சத்து உணவுகளும், நோய் பாதிப்பின்போது ஏற்படும் பயமும் மன அழுத்தமும் முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமாக அமைகின்றன. இதன் காரணமாக முடி உதிர்தலை நிறுத்த 3 முதல் 6 மாதங்கள் ஆகும். அதன் பிறகு 3 முதல் 6 மாதங்களில் மீண்டும் புதிய முடி வளரும். சிகை அலங்காரத்திற்கு ஏற்ற குறிப்பிடத்தக்க முடி வளர்ச்சிக்கு 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகலாம்.
முடி உதிர்வதைத் தடுக்க நாம் சுய கட்டுப்பாடுடன் கவலைப்படுவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், மன அழுத்தமானது முடி உதிர்தலை தீவிரப்படுத்தும். அத்துடன் நீண்டநேரம் உட்கார்ந்திருப்பதை தவிர்ப்பதும் மிகவும் நல்லது. அடுத்து புரதம் நிறைந்த உணவு மிகவும் அவசியானதாகும். குறைந்தபட்சம் 3 மாதங்கள் ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முடி வளர்ச்சியில் மாற்றத்தைக் காண முடியும்.
மேலும் உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் மற்றும் முடிக்கு தடவும் எண்ணைகளையும் பயன்படுத்த வேண்டும். இதன் காரணமாக முடி உதிர்வு தவிர்க்கப்படும். இந்த காலக்கட்டத்தில் உச்சந்தலைக்கு அதிக வெப்பம் ஏற்படுத்தும் மற்றும் முடி அலங்காரத்திற்கான அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் நீண்ட காலம் முடி உதிர்வு பிரச்னைக்கு ஆளாகி இருந்தாலும், தலையில் அரிப்பு மற்றும் புண் போன்றவை ஏற்பட்டாலும் அது குறித்து மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
தற்காலிக முடி உதிர்வு
டெலோஜென் எப்ளூவியம் (Telogen effluvium) என்னும் மன அழுத்தத்தால் ஏற்படும் முடி உதிர்வானது கொரோனா பாதிப்பின்போதும் ஏற்படுகிறது. இது தற்காலிகமான முடி உதிர்வே ஆகும். எனவே, கவலை வேண்டியதில்லை.