இன்று செவ்வாய்க்கிழமை, செவ்வாய் பகவானை பற்றிய சிறப்பான 60 தகவல்கள்....
1. செவ்வாய்க்கிரகம் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்குகிறார். ஒருமுறை ராசி சக்கரத்தைச் சுற்றிவர 18 மாதங்களாகின்றன.
2. அங்காரகன் நவக்கிரகங்களில் மூன்றாவதாக குறிப்பிடப்படுபவர்.
3. இவருக்கு சக்திதரன், குமாரன், மகாகாயன், மங்கலன், தனப்பிரதன், லோகிதாங்கன், ரத்தாயதேஷணன், ரத்தர்ணன், ஹோமகுண்டலி, ரோகநாசனை, ரக்தவஸ்ரன் என்ற பிற பெயர்களும் உண்டு.
4. பரத்வாஜ முனிவரின் மகனாகப் பிறந்து பூமாதேவியால் வளர்க்கப்பட்டதால் அங்ககாரகன் என்றும், அதுவே சுருக்கமாக அங்காரகன் என்றும் கூறப்படுகிறது.
5. செவ்வாய் கிரகத்துக்கு மாலினி, சுசீலின் என்று இரண்டு மனைவிகள் உண்டு.
6. துர்க்கையை வழிபட்டு வந்தாலும் செவ்வாயின் அருள் பெறலாம்.
7. வைத்தீஸ்வரன்கோயில் சென்று செவ்வாயை வழிபட செவ்வாயின் தீய தசாபுத்தி நடப்பவர்கள் அது நீங்கி சுகம் பெறலாம். மயிலாடுதுறையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது.
8. செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரகன் இரவில் ஆடு வாகனத்தில் வலம் வந்து ஆண்டவனை வணங்குவதாக கூறப்படுகிறது.
9. செவ்வாய் தோசம் வந்தால் சகோதர, சகோதரிகளின் வெறுப்புக்கு ஆளாகுதல், வேலைக்காரர்களால் அவமானப் படுதல், பூர்வீக பூமியை விற்று, குடி, சூது, பெண் என்று அலைதல் போன்றவை களுக்கும் காரணமாகி விடும். குடியிருக்க வசதியான வீடு கூட, செவ்வாய் தோசம் வந்தால் அமையாது.
10. செவ்வாய் தோஷம் பரம்பரையாக வரும் தன்மை கொண்டது.
11. ஒரு மனிதனின் ஆற்றல் செவ்வாய் ஜாதகத்தில் அமைந்த விதத்தில்தான் அமையும்.
12. வெளிநாட்டு ஆதிக்கம் இந்தியாவில் பல நூற்றாண்டுகள் இருந்ததற்கு நாட்டின் செவ்வாய் தோஷமே காரணம் ஆகும்.
13. செவ்வாய் தோஷமுள்ள பெண் ஆண்மைக்குணம் அதிகம் உடையவள். செவ்வாய் தோஷம் உள்ள ஆண், பெண் தன்மை உடையவராவார்.
14. செவ்வாய் தோஷம் 7-ம் இடத்திலிருந்தும், 8-ம் இடத்திலிருந்தும் செயல்பட்டால் திருமணம் ஆனவுடன் செயல்பட ஆரம்பிக்கும். 12-ம் இடம், 2-ம் இடம் என்றால் பிறந்தது முதலே இருக்கும். 4-ம் இடம் செவ்வாய் வீடு வாய்க்கும்போதோ, கல்வி கற்கும்போதோ, பயணம் செய்யும் போதோ, உத்யோகம் பெற்ற பின்பு மட்டும் செயல்படும்.
15. செவ்வாய் தோஷத்தை நீக்குவதற்கு செவ்வாய்க் கிழமைகளில் வள்ளலாரின் ‘தெய்வமணிமாலை’, குமர குருபர சுவாமிகள் எழுதிய திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, அருணகிரி நாதரின் திருப்புகழ், குறிப்பாக கந்தரலங்காரம், பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம், கவிதேவராயன் எழுதிய கந்தர்சஷ்டி கவசம் போன்றவைகளை பாராயணம் செய்யலாம்.
16. விஷ்ணு சகஸ்ரநாமம் ஞாயிறு நண்பகல் பாராயணம் செய்து சர்க்கரை பொங்கல் விநியோகம் செய்தால் செவ்வாய் தோஷம் விலகும்.
17. நவக்கிரகங்களின் சன்னதியில் செவ்வாய் ‘காயத்ரி’ மந்திரத்தை 36 முறை உச்சரித்து 9 முறை வலம் வருதலும் செவ்வாய் தோஷத்தின் கடுமையைக் குறைக்கும்.
18. ஆலயங்களில் நெய்தீபம் ஏற்ற உதவி செய்தலும் ஆலயத் திருப்பணிக்கான கட்டிட புனருத்தாரணப் பணிகளுக்கு பொருள்உதவி செய்வதும் கூட செவ்வாய் தோஷம் நிவர்த்திக்கான பரிகாரங்களாகும்.
19. செவ்வாய் கிரகத்தை பலரும் கடவுளாக வணங்குகின்றனர். அவ்வாறு வணங்கினால் தைரியமும், அரச சபையில் பேசும் ஆற்றலும், தோள் வலிமையும், போரில் வெற்றியும் கிடைக்கும்.
20. செவ்வாய் என்று நாம் குறிப்பிடும் அங்காரக பகவான் பூசித்த தலங்கள் பல. அவற்றுள் முக்கியமானவை மூன்று. அவை: 1. திருச்சிறுகுடி, 2. வைத்தீஸ்வரன் கோவில், 3. பழனி.
21. ஜாதகத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் அமைந்திருந்தால், அங்காரகன் கடன் தொல்லையின்றி, பூமியையும், செல்வத்தையும், வாகன யோகம் மற்றும் புகழையும் அள்ளிக்கொடுப்பார்.
22. 9, 18, 27-ந் தேதிகளில் பிறந்தவர்களுக்கு அங்காரகன் உரிய கிரகமாகும்.
23. ஜாதகத்தில் ஒருவரை சிறந்த தலைவனாக்கக்கூடிய ஆற்றல் உடையவர் அங்காரக பகவான். இவர் அருள் இருப்பவரை யாரும் எளிதில் வெல்ல முடியாது.
24. அவரவர்கள் தங்கள் ஜாதகப்படி செவ்வாய் எந்நிலையில் உள்ளது என்பதை அறிந்து பரிகாரம் செய்துகொள்வது நல்லது.
25.பிரபல நடிகை ஐஸ்வர்யாராய்க்கு செவ்வாய் தோஷத்தால் ஏற்பட உள்ள தீய தாக்கங்களுக்கு தீர்வு காண, அபிஷேக் பச்சனை திருமணம் செய்வதற்கு முன்பு அவர் ஒரு மரத்தை திருமணம் செய்ய வேண்டியிருந்தது.
26.தமிழகத்தை தாண்டி வேறு எந்த மாநிலத்திலும் செவ்வாய் தோஷத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
27. புராதன யுத்தக் கடவுள் என செவ்வாயைப் போற்றி வணங்குகிறார்.
28. செவ்வாய் கிரகத்துக்கு சுய ஒளி கிடையாது. சூரிய ஒளியையே பெற்று பிரதிபலிக்கிறது.
29. செவ்வாய் தாது கிரகம். பூமி நிலை கிரகம், வெப்பம் பொருந்தியது. பஞ்ச பூதங்களில் செவ்வாய் நெருப்பு கிரகமாகும்.
30. செவ்வாய் சிவப்பு நிறம். ஏழு கிரகணங்களைக் கொண்டது.
31. தீயுள்ள இடங்கள், தீயினால் இயக்கப்படும் எந்திரங்கள். மற்றுமுள்ள சாதனங்கள், கொல்லன் பட்டறை, எந்திரக் கருவிகள், ஆயுதக் கிடங்குகள், சூளை, கொலை நடக்குமிடம், போர் மைதானம், போர்ப் பயிற்சிப் பள்ளிகள், பொறியியல் கூடங்கள், அறுவை சிகிச்சை செய்யும் இடங்கள் செவ்வாய் கிரகத்தின் வாசஸ்தலமாகும்.
32. மனித உடலில் முகம், ரத்தம், சுரப்பிகள், விரை, கல்லீரல் இடது காது, எலும்புகளுக்குள்ளிருக்கும் சத்துப் பொருள் இவற்றில் ஆதிக்கம் செலுத்துபவன் செவ்வாயே.
33. செவ்வாய் சகோதரர்களுக்குக் காரகம் பெற்றவன். அதனால் சகோதர காரகன் என்பர்.
34. செவ்வாயால் உஷ்ணக் காய்ச்சல், ரத்தக் கொதிப்பு, ரத்தப் போக்கு, விரைகளில் வலி, வீக்கம், சொறி சிரங்குகள், குஷ்டம், அடிபடுதல், விரோதிகளால் தாக்கப்பட்டுக் காயம் உண்டாகுதல், அங்ககீனம் ஏற்படுதல், பில்லி, சூன்யம், போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாதல், தீ விபத்துக்குள்ளாதல் அறுவை சிகிச்சை செய்து கொள்வதனால் தொல்லைக் குள்ளாதல் போன்றவை ஏற்படும்.
35. பன்னிரண்டு ராசிகளில் முதல் வீடான மேஷமும் அதற்கு எட்டாமிடமான விருச்சிகமும் செவ்வாய் ஆட்சி பெறும் ஸ்தானங்களாகும்.
36. இருபத்தேழு நட்சத்திரங்களில் மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்றும் செவ்வாய்குரியன.
37. லக்னத்தில் செவ்வாய் இருந்தால் விரும்பிய வாழ்க்கை அமையாது. எடுக்கும் காரியங்களில் தோல்விகளைச் சந்திக்க நேரும்.
38. செவ்வாய்க்கு சூரியன், சந்திரன், குரு நட்பு, கிரகங்களாகும். சுக்கிரன், சனி சமம். புதன், ராகு, கேது பகையாகும்.
39. செவ்வாயின் ஆட்சி வீடுகள் மேஷமும் விருச்சிகமுமாகும். இவற்றில் மேஷத்தில் செவ்வாய் இருக்க நேர்ந்தால் உடல் பலம், மன உறுதி, துணிச்சல் மிக்கவராக இருப்பர். வீரதீர சாகசச் செயல் புரிவதில் வல்லவர். நினைத்தபடி முடிக்கும் ஆற்றல் பெற்றிருப்பர்.
40. செவ்வாய் அங்காரகன்- குஜன்- சேய் எனவும் அழைக்கப்படுகிறார். செவ்வாய் ரத்தக்காரகன், சகோதர காரகன், வீரதைரியகாரகன், நவக்கிரக பரிபாலனத்தில் சேனாதிபதி என்ற பட்டத்தை பெற்றவர்.
41. காவல் துறை, ராணுவம் இவற்றில் ஒருவர் பணிபுரிய வேண்டுமெனில் செவ்வாய் பலம் பெற்று இருக்க வேண்டும்.
42. செவ்வாய்க்குரிய நிறம் சிவப்பு. நம்முடைய காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நிறம் சிவப்புதான். தீயணைப்பு நிலையங்களிலும் சிவப்புதான் பயன்படுத்தப்படுகிறது.
43. சூரியனி டமிருந்து சுமார் 15 கோடி மைல் தூரத்தில் செவ்வாய் உள்ளது. இதன் குறுக்களவு 4200 மைல்கள். இது சூரியனை 687 நாட்களில் சுற்றி வருகிறது.
44. செவ்வாய் ஒரு ஆண் கிரகம். முக்கோண வடிவம் கொண்டது. செந்நிற மேனி கொண்டவர். தெற்கு திசை நோக்கி அமர்ந்து இருப்பவர்.
45. செவ்வாய் முருகப்பெருமானை தனது அதிதேவதையாக கொண்டவர். செண்பக மலர் இவருக்கு உகந்த மலர். துவரை இவருக்கு மிகவும் பிடித்த தானியம்.
46. செவ்வாய்க்கு துவர்ப்புச் சுவை பிடிக்கும். செம்பு, உலோகம் செவ்வாயின் உலோகம்.
47. செந்நிற ஆடையையே செவ் வாய் பகவான் விரும்பி அணிவார்.
48. நவரத்தினங்களில் இவருக்கு உரியது பவளம் ஆகும்.
49. செவ்வாய்க்கிழமை இவரின் கிழமை, இது இரு கண்களும் இல்லாத குருட்டு கிழமை எனப்படுகிறது. எனவே சுபகாரியங்களுக்கு செவ்வாய்க்கிழமை உகந்தது இல்லை.
50. செவ்வாய் தோஷத்தால் பெற்றோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் மாமனார், மாமியாரையும் செவ்வாய் தோஷம் பாதிக்காது.
51. தினமும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தல் செவ்வாய் தோசத்திற்க்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம் ஆகும்.
52. திருமண தாமதத்திற்கு , செவ்வாய் தோஷம் மட்டுமே காரணம் ஆகாது.
53. செவ்வாய் கிழமைக் கும்,செவ்வாய் தோசத்திற்கும் சிறிது கூட சம்பந்தமில்லை.
54. செவ்வாய் தோஷக்காரர்கள் செவ்வாய்க் கிழமையன்று, காலையில் எழுந்ததில் இருந்து 1 மணி நேரம் மவுனம் இருக்க வேண்டும். அப்படி மவுனத்தைக் கடைப்பிடிப்பவர்கள் செவ்வாய் தோஷத்தில் இருந்தே விரைவில் விடுபடுவார்கள்.
55. செவ்வாய் தோஷக் காரர்கள் காலையில் முருகனையும், இரவில் வயிரவனையும் வழிபடுவது சாலச் சிறந்தது.
56. தண்டபாணியாக முருகன் விளங்கும் கோலம் உள்ள ஆலயங்கள் செவ்வாய் தோஷத்தை விரைவில் தீர்க்கும்.
57. செவ்வாய்க் கிரகம் அவரவருடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்துக்குரிய கிரகங்களின் நாட்களில் பரிகாரம் செய்வது சிறப்பு.
58. தம்பதியருக்கு மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் நான்கு, எட்டு, பன்னிரண்டு நட்சத்தி ரங்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக்கூடாது.
59. செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கலாம். துவரை சேர்ந்த பலகாரம், பட்சணம், துவர்ப்பு பச்சடி, துவையல் ஆகியவற்றுடன் வெண்ணை சேர்ந்த சாதம், பழம், பாக்கு வெற்றிலை ஒரு தட்டில் வைக்கவும். செவ்வாய் கிரகத்தை மனதில் நினைத்து வானத்தை நோக்கி நைவேத்தியம், சூடம், சாம்பிராணி காட்டவும். நவக்கிரகக் கட்டம் இருந்தால் அதை வைத்து பூஜிக்கலாம்.
60. சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்ற பல மாமன்னர்கள், சர்வாதிகாரிகள், மாவீரர்கள் ஆகியோர் செவ்வாயின் தீவிர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான்.