பெண்மை தொடர்பான மருத்துவத் தகவல். பெண்கள் கருத்தரிப்பதற்கு ஏற்ற காலம் .....

#Health #Women #Disease
பெண்மை தொடர்பான மருத்துவத் தகவல். பெண்கள் கருத்தரிப்பதற்கு ஏற்ற காலம் .....

பெண்மை தொடர்பான மருத்துவத் தகவல் என்றதும், உங்கள் பெண்மையைப் பற்றி ஆராய்வதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் கருத்தரிப்பதற்கு ஏற்ற வாய்ப்புகள் எப்போது இருக்கும் என்பதை ஆராய்வதற்காக, உங்கள் மருத்துவக் குறிப்புகளைத் திரட்டி தகவல் சேகரிப்பதைத்தான், பெண்மைத் தொடர்பான தகவல் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

மாதவிலக்கின் முதல் நாளன்று உங்கள் பீரியட் ஆரம்பிக்கிறது. இந்த நாளை முதல் நாளாகக் கொண்டுதான் கருவுற்ற நாள் கணக்கிடப்பட வேண்டும். பலர் இதைக் கவனத்தில் கொள்வது கிடையாது.

சமீபத்தில் ஒரு தம்பதியர் வந்தார்கள். மாதவிலக்கு நின்ற நாள் முதல் பதினான்கு நாள்களை எண்ணி, அந்த நாளில் உடலுறவு வைத்துக்கொண்டோம் என்று சொன்னார்கள். முட்டை வெளியாவது மாதவிலக்குத் தொடங்கிய 14- வது நாள் வாக்கில் என்றால், இவர்கள் உடலுறவு கொண்டது இருபதாவது நாள் வாக்கில். அதாவது, முட்டை வெளியான ஆறு நாள் கழித்து . எப்படிக் கருத்தரிப்பு நிகழும்?

மாதவிலக்காவது, பெண்ணுக்குப் பெண் வேறுபடுகிறது. சிலருக்கு 26 நாள்கள். சிலருக்கு 35 நாள்கள் கூட ஆவது உண்டு. இந்த நிலையில், கருத்தரிக்க வாய்ப்பு உள்ள நாளைக் கணக்கிடும்போது, கடைசியாக மாதவிலக்கு ஆக ஆரம்பித்த நாளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதில் இருந்து பதினான்கு நாள்களைக் கழிக்க வேண்டும்.

இவ்வாறு, 35 நாள்கள் மாதவிலக்குச் சுற்று உள்ள பெண்ணுக்கு, 20 அல்லது 21- வது நாளும் 26 நாள்கள் சுழற்சி உள்ள பெண்ணுக்கு, 11 முதல் 12- வது நாளும் முட்டை வெளியாகும். முட்டை வெளியாகி 24 மணி நேரம் வரை காத்திருக்கும். இதுதான், உடலுறவுக்கும் கருவுருவதற்கும் ஏற்ற காலமாகும்.

இதை, எடுத்துச் சொல்லும்போது முதலில் அவர்களுக்குப் புரியாது. ஓரிரு மாதச் சுழற்சிகளுக்குப் பிறகுதான் தெளிவாகப் புரியும். ஆகவே, அத்தனை மாதங்கள்வரை, குழந்தைப் பேறுக்காக வருபவர் மட்டுமல்ல, நாங்களும் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

மருத்துவர் கேட்கும் அனைத்துத் தகவல்களையும் விறல் நுனியில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான், உங்களுக்குக் குழந்தைப் பேறு வாய்க்கும்.