சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் மற்றும் வலிமையான வாழ்வு தரும் புதன் சிறப்பம்சங்கள்.
சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன் என்பதால், புதனுக்கு சூரிய வெளிச்சம் அதிகமாகக் கிடைக்கும். அதனால் புதன், புத்தி, அறிவு, ஞானம் பெற்றவராக இருக்கிறார். எனவேதான் புதனை ‘புத்தி காரகன்’ என்று ஜோதிட உலகம் அழைக்கிறது. புதனின் நிறம் பச்சை. நாம் பசுமையான இடங்களை காணும்போது, மனம் மிகவும் இதமாக இருக்கும். மனம் குதூகலம் அடையும். எனவே புதன், உணர்வுகளை தூண்டும் கிரகம் என்பதை உணர முடியும். புதனுக்கு, அருகன், பண்டிதன், நற்கோள் என்ற பெயர்களும் உண்டு.
புதன் என்றால் புத்தி. ஒரு மனிதனின் ஞானத்திற்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகமாக அவர் இருக்கிறார். அதனால் அவரை ‘வித்யா காரகன்’ என்றும் அழைப்பர். புதன் வலிமை பெற்றவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள்.
ஜனன ஜாதகத்தில் புதன் பலம் பெற்றவர்கள், இளமைப் பொலிவுடன் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். கணக்கியல், மறைமுகமான, நுணுக்கமான பிரச்சினைகளை தீர்ப்பதில் நிபுணராக இருப்பார்கள். வியாபார தந்திரம் மிகுந்தவராகவும், மதிநுட்பத்தை பயன்படுத்தி இருந்த இடத்திலேயே தொழில் செய்து வருமானம் செய்பவராக இருப்பர். ஒருவருக்கு புதன் வலுப்பெற்றிருந்தால், அவர் எந்த சூழ்நிலையிலும், தன் அறிவின் மூலம் வாழ்க்கையில் முன்னேறி விடுவார்.
பாவ கிரகங்களுடன் சேராமல் இருந்தால், புதன் தனித் தன்மையுள்ள சுபகிரகம் ஆகும். வேறு எந்த கிரகத்துடனும் சேராத புதனுக்கும், அதன் பார்வைக்கும் குரு பகவானுக்கு நிகரான சக்தி உண்டு. அதே நேரத்தில் புதன் இரட்டை தன்மையுள்ள கிரகம். தான் சேரும் கிரகத்திற்கு, இடத்திற்கு தக்கவாறு, பார்க்கும் கிரகத்திற்கு தக்கவாறு ஜாதகரை மாற்றிவிடுவார். புதன் பலம் பெற்றவர்கள், நகைச்சுவை உணர்வு மிகுந்தவராக இருப்பார்கள். யாருக்கும் பயப்படாமல் தனித்து ஜோதிடம், பேச்சாற்றல், கணிதம், கணினித் துறை, கவிதை எழுதுதல், சிற்பம் வடித்தல், சித்திரம் வரைதல், நடிப்பு, நாடகம், எழுத்து கலை, சாஸ்திர ஞானம், நுண்கலைகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
புதன் பலன் பெற்றவர்களுக்கு, இளம் வயதினருடன் நட்பு உருவாகும். தாய் மாமாவின் அன்பு, ஆதரவு பெற்றிருப்பார்கள். முக்கிய நிகழ்வுகள் எல்லாம் புதன் ஓரையில் நடக்கும். மிதுனம் - கன்னி லக்னம் அல்லது மிதுனம் - கன்னி ராசியில் பிறந்தவர்களின் நட்பு ஏற்படும். புதன் தசா புத்தி அந்தரத்தில் பிறந்தவர்களுடன் தொடர்பு உண்டாகும். புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடன் நட்பாக இருப்பார்கள். விஷ்ணு வழிபாட்டில் ஆர்வம் கூடும். பச்சைநிற ஆடைகளை அணிவதில் விருப்பம் உண்டாகும். உல்லாசப் பயணங்கள் செய்ய ஆசைப்படுவார்கள்.
ஜனன ஜாதகத்தில் புதன் பலம் குறைந்தவர்கள், ஒரே வேலையை இரண்டு முறை செய்வார்கள். கடன், நோய், எதிரி தொல்லை அதிகரிக்கும். சொந்த தொழில் செய்பவராக இருந்தால், தொழில் தந்திரம் அற்றவராக இருப்பார்கள். தாய்மாமன் ஆதரவு குறையும். புதன் வலிமை குறைந்தவர்கள், புதன்கிழமை தோறும் சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்து, பச்சைப் பயிறு தானம் தர வேண்டும்.
பச்சைப் பயிறு சாப்பிட வேண்டும். படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, நோட் புக், பேனா வழங்கலாம். விஷ்ணு சகஸ்ஹர நாமம் பாராயணம் செய்ய வேண்டும். வளர்பிறை ஏகாதசி அன்று கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று அவல், பொரி, பாயசம் வைத்து நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கினாலும், புதன் தோஷம் விலகும். புதன்கிழமைகளில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் சென்று வழிபடுங்கள். வெள்ளியில் மரகதப் பச்சை மோதிரம் அணியலாம்.
புதன் கிரகம் பற்றி..
- நிறம் - பச்சை
- குணம் - சவும்யன்
- மலர் - வெண்காந்தள்
- ரத்தினம் - மரகதம்
- சமித்து - நாயுருவி
- தேவதை - விஷ்ணு
- பிரத்யதி தேவதை - நாராயணன்
- திசை - வடகிழக்கு
- ஆசனவடிவம் - அம்பு
- தேசம் - மகதம்
- வாகனம் - குதிரை
- தானியம் - பச்சைப் பயறு
- உலோகம் - பித்தளை
- பிணி - வாதம்
- சுவை - உவர்ப்பு
- ராகம் - நாட்டுகுறிஞ்சி
- நட்பு - சூரியன், சுக்ரன்
- பகை - சந்திரன்
- சமம் - செவ்வாய், வியாழன், சனி, ராகு, கேது
- ஆட்சி - மிதுனம், கன்னி
- மூலத் திரிகோணம் - கன்னி
- உச்சம் - கன்னி
- நீசம் - மீனம்
- நட்சத்திரங்கள் - ஆயில்யம், கேட்டை, ரேவதி
- திசா காலம் - 17 ஆண்டுகள்
- பார்வை - 7-ம் இடம்
- பாலினம் - அலி
- கோச்சார காலம் - 1 மாதம்
- உருவம் - உயரம்
- உறுப்பு - தோல், நரம்பு மண்டலம்
- ஸ்தலம் - திருவெண்காடு