கண்ணை ஆரோக்கியமாக வைத்திருங்கள். கண் பரிசோதனையில் என்ன நடக்கிறது?

#Health #Eye #Test
கண்ணை ஆரோக்கியமாக வைத்திருங்கள். கண் பரிசோதனையில் என்ன நடக்கிறது?

கண் மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்கு செல்லும்போது முதற்கட்டப் பரிசோதனையை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள். அதன்பின் கண்ணாடி அணிந்திருந்தால் அதற்குத் தேவையான பரிசோதனையைச் செய்வார்கள். இறுதியாக ஒரு சொட்டு மருந்தினைக் கண்களில் ஊற்றிக் கண்ணை மூடி அமர வைத்துவிடுவார்கள்.

அந்த அனுபவம் இருக்கிறதா?

ஒரு மணி நேரம் வரை கூட அப்படி பொறுமையுடன் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியிருக்கும்‌. அதன்பின் ஒரு கருவி மூலமாக உங்கள் கண்ணுக்கு நெருக்கமாக வந்து பரிசோதனை செய்வார்கள்.

அது என்ன பரிசோதனை? அப்படி காத்திருந்து செய்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன?

ஃபண்டஸ் எக்ஸாமினேஷன் (Fundus examination) எனப்படும் விழித்திரை பரிசோதனைக்காகத்தான் அப்படி அமர வைக்கிறார்கள். இதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வோம்

* விழித்திரையில் நேரடியாக நடுவில் காணப்படுவது ஆப்டிக் டிஸ்க் என்னும் பகுதி. இதுதான் கண் நரம்பின் ஆரம்பப்புள்ளி. அதன் வடிவம், அளவு, ரத்த நாளங்கள் அமைந்திருக்கும் விதம் எல்லாம் கணக்கிடப்படும். கண் அழுத்த நோயின் அறிகுறியையும் இதில் கண்டறிய முடியும்.

* தலையில் உள்ள நீர் அழுத்தம் அதிகரிப்பதையும் டிஸ்கின் ஓரங்கள் மூலமாகக் கண்டறியலாம். உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள், முற்றிய சர்க்கரை நோயின் அறிகுறிகள், சிறுநீரக செயலிழப்பு, கர்ப்ப கால உயர் ரத்த அழுத்தம் இவற்றையும் ஆப்டிக் டிஸ்க் பகுதியின் பரிசோதனை மூலமாகக் கண்டறியலாம்.

* எதிர்பாராத பார்வையிழப்பின் பல காரணங்கள் விழித்திரை பிரச்னையினாலேயே உருவாகின்றன. அதனால் விழித்திரை பரிசோதனை அத்தகைய பிரச்னைகளின் காரணத்தைக் கண்டுபிடிக்க மிகவும் உதவியாக இருக்கிறது. கண்ணின் உட் புறம் ஏற்படக்கூடிய புற்றுநோய்கள், விழித்திரை விலகல் போன்ற பிரச்னைகள், மற்றும் பல கிருமித்தொற்றுகளையும் விழித்திரை பரிசோதனை மூலமாகக் கண்டுபிடிக்க முடியும்.                  

மேக்குலா பரிசோதனையின் அவசியம்

பார்வை வட்டத்தின் நடுப்பகுதிப் பார்வையை சாத்தியமாக்குவது விழித்திரை நரம்புகள் நிறைந்த மேக்குலா என்னும் பகுதி. இது முக்கியமாகப் பரிசோதனை செய்ய வேண்டிய ஒன்றாகும். சர்க்கரை நோயின் பெரும்பான்மையான பாதிப்புகள் இந்தப் பகுதியில் தென்படுகின்றன. வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்னையான இந்தப் பகுதியில்தான் ஏற்படுகிறது.

மேற்கத்திய நாடுகளில் பார்வை இழப்பின் முதல் முக்கிய காரணமாக இது அமைகிறது.  இத்தகைய மாற்றங்களை எளிதில் காணும்போது ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்க முடியும்.