பதினோராம் திருமுறையில் இருபத்தைந்தாவது நுாலக திகழும் திருமணிக்கோவை பற்றிய ஆய்வு.

#spiritual #God #Pillaiyar
பதினோராம் திருமுறையில் இருபத்தைந்தாவது நுாலக திகழும் திருமணிக்கோவை பற்றிய ஆய்வு.

சைவத்தின் சொற்கோயிலாய் விளங்குபவை பன்னிரு திருமுறைகள் ஆகும். அவற்றுள் பதினோராம் திருமுறையில் இருபத்தைந்தாவது நூலாக இடம் பெற்றுள்ளது மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை என்பதாம். இதைப் பாடியருளிய அருளாளர் அதிராவடிகள். கல்வி கேள்விகளில் சிறந்தவரான இவர் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாகிய இறைவன் திருவடிகளை இடைவிடாது சிந்தித்து உலகத்தின் துன்பங்களைக் கண்டு அஞ்சாத சிந்தனையுடையவராய் விளங்கியமையால் ‘அதிராவடிகள்’ என ஆன்றோர்களால் போற்றப் பெற்றார்.

எதிர்காலத்தில் வரக்கூடிய துன்பங்களை முன்னரே உணர்ந்து அதனைத் தடுக்கவல்ல நல்லறிவு உடையார்க்கு அவர் நடுங்கும்படி துன்பம் வருவது இல்லை என்பதனைத் திருவள்ளுவர்,
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லைஅதிர வருவதோர் நோய்எனக் குறிப்பிடுவார். திருவள்ளுவர் அருளிய இக்குறட்பாவிற்கு ஏற்ப விநாயகப் பெருமானாகிய மூத்த பிள்ளையாரை வணங்கி பின்வரும் துன்பங்களை முன்னறிந்து காத்துக் கொண்ட அதிராவடிகள் தான் பெற்ற பயனை இறையன்பர்கள் அடையும் வண்ணம் அருளிய நூலே மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை என்பதாகும். இந்நூல்  அகவற்பா, வெண்பா கட்டளைக் கலித்துறை என்னும் மும்மணிகளால் இயற்றப்பெற்றமையால் ‘மும்மணிக்கோவை’ எனப் பெயர் பெற்றது.

மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை என்னும் இந்நூல் 30 பாடல்களைக் கொண்டமைந்ததாகும். இந்நூலின் ஓலைச்சுவடிகள் சிதைவுற்றமையால் 24 முதல் 30 வரையிலான பாடல்கள் கிடைக்கப் பெறவில்லை. இந்நூலுள் அதிராவடிகள் விநாயகரின் தோற்ற வருணனையையும் அவரின் அருட்திறத்தினையும் போற்றியுரைக்கின்றார். மூத்தபிள்ளையாரின் தும்பிக்கையானது காற்றை உடையது. அவரின் கண்ணோ தீயை உடையது. மதநீர் மேலதாய் அமைந்திருக்கின்ற வாயினின்று பொழிவது. முந்நூல் மதநீர் பொழியும் கபோலத்தின் கீழதாய் அமைந்த மலைபோலும் மேனியின் திகழ்ந்து சிறப்புச் செய்வது. இத்தகைய சிறப்பினை உடைய மூத்தபிள்ளையார் பால், தேன் எனும்படியான மெல்லிய மொழியையுடைய பாவையாகிய வல்லபையைத் தன்னுடன் கொண்டு அருள் செய்பவர் என்று குறிப்பிடுகின்றார். இதனை விளக்கும் பாடலாக,

காலது கையது கண்ணது தீயது கார்மதநீர்
மேலது கீழது நூலது வெற்பது பொற்பமைதீம்
பாலது தேனது தானது மென்மொழிப் பாவைமுப்பூண்
வேலது வாளது நான்மறைக் கீன்ற விடுசுடர்க்கே

என்பது அமைந்துள்ளது. தமிழகத்தில் வழிபடப்பெறும் விநாயகர் வடிவங்கள் பெரும்பான்மையும் தேவியருடன் இருப்பவை அல்ல. ஆனால் அதிராவடிகள் வல்லபையைத் தன்னுடன்  கொண்டு அருள் செய்பவர் எனக் குறிப்பது அவர்காலத்தே விநாயகரைத் தேவியருடன் சேர்த்து வழிபடும் மரபு தமிழ் நிலத்தில் இருந்தது என்பதற்கு மிகச் சிறந்த சான்று ஆகும்.
கங்கையினைத் தன் தலையில் கொண்டவன் சிவபெருமான்.  அவனது கையில் உள்ள மூவிலைச் சூலமானது பகைவரின் உடலில் பாய்ந்து அழித்தமையால் பகைவரின் குடலோடு கூடிய  ரத்தச் சேற்றொடு  அச்சேறு புலராமையால் ரத்த வாடை தோன்ற நின்றது.

இத்தகைய சூலத்தினைக் கையில் ஏந்திய சிவபெருமானின் புதல்வன் விநாயகன் ஆவான். அத்தகையவன் கோபத்தின் காரணமாக மதநீர் பொழியும் கபோலத்தினை உடையவன். மேலும் அவனது வலது தந்தமானது கயமகாசுரனை அழிப்பதற்கு உடைக்கப்பட்டமையால் உடைபடாத இடது தந்தத்தினை உடையவன். மேலும் காண்டக உதரம் எனப்படும் கூடை போன்ற வயிற்றினைக் கொண்டவன். எனவே கதனுடைக் குழவி, கபோலக் குழவி, மருப்பிற்குழவி, உதரத்துக் குழவி எனப் புகழப்பெறும் பேறுகளைத் தன்னகத்தே கொண்டமைந்தவன். அத்தகைய சிறப்புகளை உடைய விநாயகனைத் தொழுவதே சிறப்புடைத்ததாகும் என்பதனை,

ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர்
மும்முகச் செந்நுதி நாலிணர் வௌநிணக்
குடற்புலபு கமழும் அடற்கழுப் படையவன்
மதலை மாமதந் துவன்றிய கதனுடைக்
கடதடக் கபோலத் தோரிட மருப்பின்
கரண்டக உதரத்து முரண்தரு குழவிதன்
சேவடி யுகளம் அல்லது
யாவையும் இலம்இனி இருநிலத் திடையே.

 - என விளக்குவார் அதிராவடிகள். பிள்ளையாரின் வடிவங்களுள் அனைவராலும் விரும்பப்படும் வடிவம் அவரின் குழந்தை வடிவம் ஆகும். அதிராவடிகள் இத்தகைய குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளையும் தன் பாடலில் பதிவு செய்கின்றார். தன்மின் பெரியோர் எனப் பிறர் இல்லாத கடவுளாகிய மூத்த பிள்ளையார் இரு கைகளையும் சேர்த்துத் தட்டிச் சப்பாணி கொட்டி விளையாடுகின்றார். தெய்வக் குழந்தைகளின் விளையாட்டும் கூட உலக உயிர்களுக்கு அருள் செய்யும் வண்ணம் அமைந்தன அன்றோ? மூத்த பிள்ளையார் நிலம் சிறப்புற மேரு மலையானது துளங்க நீண்ட வானிடத்து அமைந்த தலங்கள் எல்லாம் சிறப்புறச் சப்பாணி கொட்டியாடுகின்றார். அவ்வாறு மூத்த பிள்ளையார் சப்பாணி கொட்டி விளையாடும் செயலும் உலக உயிர்களுக்கு இன்பம் செய்வதாய் அமைந்த  திறத்தினை,

நிலத்துளங்க மேருத் துளங்க நெடுவான்
தலத்துளங்கச் சப்பாணி கொட்டும் -
     கலந்துளங்கொள்
காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து
மாமாரி ஈன்ற மணி


என்ற  பாடலில் விளக்குகின்றார்அதிரா
வடிகள். மேலும் இவ்வாறு தேனாட, வண்டாட செங்கீரை ஆடியருளும் சிவபெருமான் பெற்ற திருமகனாகிய மூத்தபிள்ளையாரின் சிறப்பினை,


இக்கயங்கொள் மூவலயஞ் சூழேழ் தடவரைகள்
திக்கயங்கள் பேர்ந்தாடச் செங்கீரை - புக்கியங்கு
தேனாட வண்டாடச் செங்கீரை ஆடின்றே
வானாடன் பெற்ற வரை

என வரும் பாடலில் அதிராவடிகள் சுவைபட விரித்துரைத்துள்ளார். செங்கீரை,  சப்பாணி கொட்டுதல் என்பன  பிள்ளைகளுக்குரிய பருவங்கள் ஆகும். இது பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் பருவங்களாய் அமைந்தவை என்பது ஈண்டு சுட்டுதற்குரியதாகும்.வேதமுதல்வன் பிரம்மனின் சிரத்தினைக் கொய்த சிவபெருமானின் புதல்வனாகப் பிறந்தும் தானே நூலை இயற்றும் ஆற்றல் இல்லாமல் பரதவர் மகளின்  புதல்வனாகிய வேதவியாசன் சொல்லிய கதையினை மேருமலையில் கைவருந்த எழுதிய யானைமுகக் கடவுளை யாம் பெரிதும் போற்றுவது ஏன்? என வினவுகின்றார் அதிராவடிகள். இது பழிப்பது போலத் தோன்றிடினும் புகழ்வதாகும்.

வேத முதல்வனாகிய பிரம்மனையே வெற்றிபெற்ற சிறந்த பேராற்றல் மிக்க முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானின்  திருமகனாய்த் தோன்றியவர் மூத்த பிள்ளையார். வேதப் பொருளாக விளங்கும் பெற்றியினை உடையவர். இத்தகைய சிறப்புகளை உடைய மூத்த பிள்ளையார் தன்னை வழிபடும் மெய்யடியார் வியாச முனிவருக்கும் எளிவரத் தோன்றி அவர் சொல்லிய மகாபாரதக் கதையினை மேரு மலையில் எழுதினார் என மூத்தபிள்ளையாரின்  அருமையில் எளிமையான அழகினை அதிராவடிகள் போற்றிப் புகழ்ந்து உரைக்கின்றார். இதனை விளக்கும் பாடல்,

மின்னெடுங் கொண்டல் அந்நெடு முழக்கத்து
ஒவற விளங்கிய துளைக்கைக் கடவுளை
யாம்மிக வழுத்துவ தெவனோ அவனேல்
பிறந்ததிவ் வுலகின் பெருமூ தாதை
உரந்தரு சிரமரிந் தவற்கே வரைந்தது
மேருச் சிமையத்து மீமிசை
வாரிச் செல்வன் மகள்மகன் மொழியே
என்பதாகும்

இதனுள் குறிக்கப்படும் வாரி என்பது கடலினைக் குறிப்பதாகும். வாரிச் செல்வன் மகள் என்றது வியாசரின் தாயாகிய மச்சகந்தியைக் குறித்ததாகும்.
மனிதர்களின் எண்ணமும் மொழியும் செல்லாத இயலாத நிலையில் அப்பாற்பட்டதாய், ஞாயிறு, திங்கள், நெருப்பு என்பனவற்றைத் தனது முக்கண்களாகக் கொண்டு உலகிற்கு விளக்கம் தருதல் போன்றவற்றைக் கொண்டவர் சிவபெருமான். மேலும், கல்லால மரத்தின் நிழலில் இருந்து சனகாதி முனிவர் நால்வர்க்கு அறம் முதலாகிய அருமறைப் பொருளே தெளிய அறிவுறுத்தியவரும் சிவபெருமானே ஆவார். இத்தகைய சிவபெருமானுக்குரிய இயல்புகளை எல்லாம் மூத்த பிள்ளையாருக்கு உரியதாகக் குறிக்கின்றார் அதிராவடிகள்.

மொழியின் மறைமுதலே முந்நயனத் தேறே
கழிய வருபொருளே கண்ணே - செழிய
கலாலயனே எங்கள் கணபதியே நின்னை
அலாலையனே சூழாதென் அன்பு
இதன் மூலம் சிவபெருமானும் அவரின்
 

பிள்ளையாகிய மூத்த பிள்ளையாரும் ஞானம், செயல், அடியாருக்கு அருளல் போன்றவற்றால் ஒத்த தன்மையுடையவர்களாய் அமைந்திருத்தலை அறிய முடிகின்றது. பொதுவாக சிவபெருமானின் சிறப்பியல்புகளை முருகப் பெருமானுக்கே ஏற்றிக் கூறுதல் என்பது மரபாகும். அதிராவடிகள் இப்பாடலில் மூத்த பிள்ளையாருக்கு ஏற்றிக் கூறுவது சிறப்புடைய செயலாகும். மேலும், அதிராவடிகள் பிறிதோர் பாடலில், விநாயகர் கயிலை மலையில் உறைபவர் என்பதனை,

கவவுமணிக் கேடகக் கங்கணக் கவைவல்நா
அறைகழல் அவுணரொடு பொருத  ஞான்றுநின்
புழைக்கரம் உயிர்த்த அழற்பேர் ஊதை வரைநனி கீறி மூரி
அஞ்சேறு புலர்த்தும் என்பர்
மஞ்சேறு கயிலை மலைகிழ வோயே.

எனக் குறிப்பிட்டுரைப்பார். இத்தகைய குறிப்புகள் மூலம் அதிராவடிகள் சிவபெருமானும் மூத்த பிள்ளையாரும் ஒரு பரம்பொருளின் வடிவங்கள் என்ற உண்மையை உணர்ந்து வழிபட
ஆற்றுப்படுத்துகின்றார் என்பது விளங்கும்.

சிவபெருமான் தன் கையில் உள்ள மாங்கனியைப் பெற மூவுலகங்களையும்; விரைவில் சென்று சுற்றி வர வேண்டும் என மூத்த பிள்ளையாரிடமும் முருகப் பெருமானிடமும் கூறினார். அதனைக் கேட்ட முருகப் பெருமான் மயில் மீதமர்ந்து மூவுலகங்களையும் விரைவில் சுற்றி வரச் சென்றார் என்றும் அந்நிலையில் விநாயகப்பெருமான் எல்லா உலகங்களுமாகிய தன் தாய், தந்தையரை வலம் வந்து மாங்கனியைப் பெற்றார் என்றும் புராணக் கதை குறிப்பிடும். அதிராவடிகள் இச்செய்தியினை,

சுடர்ப்பிழம்பு தழைத்த அழற்றனி நெடுவேல்
சேய்மூ வுலகமும் வலம்வர வேஅக்
கொன்றையம் படலை துன்றுசடைக் கணிந்த
ஓங்கிருந் தாதையை வளாஅய் மாங்கனி
அள்ளல் தீஞ்சுவை அருந்திய
வள்ளற் கிங்கென் மனங்கனிந் திடுமே
என்ற பாடலில் எடுத்துரைக்கின்றார்.

கொடிய அசுரர்களின் தோள்களை முன்னே பற்றி அறுத்தெறிந்து அவர்களைக் கொன்றழித்தவர் விநாயகப் பெருமான். அதன் பின்னர் அவர்களுக்குத் தலைமை பூண்டு வந்த  யானையாகிய கயமுகாசுரன் மேல் பார்வையைத் திருப்பி, அவனைத்  துண்டுகளாக்கி வீசிக் கொன்றழித்த ஆண் சிங்கம் போன்றவர் விநாயகப் பெருமான். அத்தகையவர்  தனக்கு உறவாகப் பொருந்தினமையால் தளர்ச்சி வந்தமையாது எனக் குறிப்பிடுகிறார், அதிராவடிகள்.,

கேளுற்றி யான்தளர ஒட்டுமே கிம்புரிப்பூண்
வாளுற்ற கேயூர வாளரக்கர் - தோளுற்
றறுத்தெரிந்து கொன்றழித்தவ் அங்கயக்  
கண் மீண்டே
இறுத்தெறிந்து கொன்றழித்த ஏறு

இத்தகைய மேன்மைகளை உடைய மூத்த பிள்ளையாரினை வழிபடுவோர் பெரும் சிறப்புகளைப் பெறுவர். அவரை எண்ணிச் சிந்திப்போர்க்குச் செயல்கள் அனைத்தும் வெற்றியாகும். விநாயகப் பெருமானை மறந்தோர் தேவரேயாயினும் அவர்கள் நினைத்த செயல் ஈடேறாது என்பதனைச் சிவபெருமான் திரிபுரத்தினை எரிக்கச் சென்ற பொழுது அவரின் தேர் அச்சு முறிந்ததனைக் காட்டி நிறுவுவார் அதிராவடிகள்.

எனவே, சிவபெருமானின் புதல்வராகிய, யானைமுகக் கடவுளாகிய மூத்த பிள்ளையார் அன்றி உயிர்களுக்கு வேறு துணை இல்லை. தன்னை அன்பினால் வழிபடும் அடியார்களின் பிறவிப் பிணியைப் போக்க வல்லவர் அவர். அவருடைய திருவடியைச் சிந்தித்து வாழ்வார்க்கு மனக்கவலை இல்லை என அதிராவடிகள் மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவையில் கூறும் கருத்துக்கள் மூத்த பிள்ளையார் வழிபாட்டினால் மக்கள் அடைவதற்குரிய திறன்களை எடுத்துரைக்கின்றன. எனவே, விநாயகர் சதுர்த்தித் திருநாளில் மூத்த பிள்ளையாரை வணங்கி அவரின்அருளினைப் பெற்று வளமும் நலமும் பெறுவோமாக!!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!