சனி பகவான் என்றால் அச்சம் தேவையில்லை. சனிபகவானுக்குரிய சிறப்பியல்புகள்....
''சனி என்ற வார்த்தையைக் கேட்டாலே எல்லோருக்கும் ஒரு பயம். அந்த அளவுக்கு நாம் சனி பகவானைப் பார்த்துப் பயந்திருக்கிறோம். ஆனால், உண்மையில் சனி பகவான் இந்த அளவு பயமுறுத்தக்கூடியவரா என்று பார்த்தால், நிச்சயமாகக் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.
நாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை தந்து நம்மை நல்வழிப்படுத்துபவர் சனி பகவான்தான். வேகமாகச் செல்லும் நம் வாழ்க்கைச் சக்கரத்தைத் தடுத்து நிறுத்தி, நாம் எதற்காக இந்த பூமிக்கு வந்தோம், நம் இலக்கு எது என்பதை நமக்கு உணரவைப்பவர்.
எல்லோரும் ஏழரைச் சனியைக்கண்டுதான் அதிகம் பயப்படுகிறார்கள். உண்மையில் அஷ்டம சனிதான் ஒருவருக்கு அவமானங்களையும் அலைச்சல் திரிச்சலையும் தேடித்தரும்.
வாழ்க்கையின் எந்தவிதமான பிரச்னையையும் எதிர்கொள்வதற்குரிய துணிச்சலையும், இயல்பாகக் கையாள்வதற்குரிய அனுபவத்தையும் தருவாறே தவிர சனி பகவான் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு மனிதனைக் கீழே போகச் செய்யமாட்டார்.
சனி பகவான்தான் சித்தர்கள், பாசாங்கற்ற உண்மையான ஆன்மிகவாதிகள், கடைநிலை ஊழியர்கள், தொண்டர்கள், சமூக சேவகர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் வழியாக மக்கள் சேவை செய்பவர்களுக்கு காரணகர்த்தாவாக திகழ்பவர். சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் பாசாங்கு செய்யாமல் உண்மையாக உழைக்கக் கூடியவர்கள்.
மகரம், கும்பம் ஆகிய இரண்டு லக்னங்களுமே சனியின் ஆட்சி வீடுகள். அருகிலேயே இருக்கும் இரண்டு லக்னங்களில் ஆட்சி பெறும் கிரகம் சனி மட்டுமே. துலாம் ராசியில் உச்சமடையும் இவர், மேஷ ராசியில் நீசம் அடைகிறார்.
ஒருவரின் ஜாதகத்தில் சனி நீசம் அடைவது ஒருவிதத்தில் யோகப் பலனாகவே பார்க்கப்படுகிறது. கடினமான உழைப்பையும் அலைச்சலையும் தரக்கூடிய கிரகம். இவர் நீசம் அடைந்து பலமிழந்து போனால், அந்த ஜாதகர் சொகுசான வாழ்க்கை வாழக்கூடிய வாய்ப்புப் பெற்றவராக இருப்பார். சனி நீசமாகி குருவின் பார்வை பெற்ற பலர் பெரிய கோடீஸ்வர்ரகளாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
வெளியில் செல்லத் தயங்கக்கூடிய தொழில்களுக்குச் சனி காரகத்துவம் பெறுகிறார். இவைதவிர கறுப்பு தானியங்கள், பெட்ரோல், சினிமா போன்றவற்றுக்கும் சனி காரகத்துவம் பெறுகிறார். சனி வலு குறைந்திருந்தால் ஜாதகருக்கு ஆயுள் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சனியின் வலு குறைந்து இருப்பவர்கள் திருநள்ளாறு சென்று சனி பகவானைத் தரிசிக்கலாம். சனி பகவானை தரிசிக்கும்போது ஓரமாக நின்றுதான் அவரை தரிசிக்க வேண்டும். நேருக்கு நேர் நின்று அவரை வணங்கக்கூடாது.
சென்னையிலிருப்பவர்கள் பொழிச்சலூரில் இருக்கும் அகத்தீஸ்வரர் கோயில் சென்று சனிபகவானை வணங்கலாம். இந்தத் திருத்தலத்தை 'வட திருநள்ளாறு' என்றே அழைக்கிறார்கள்.
சனி பகவானை ஆலயங்களுக்குச் சென்று வணங்குவதைவிட நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்தும் சனி பகவானின் அருளை மிகப்பெரிய அளவில் பெறலாம்.