உக்ரைன் மீது ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இத்தனை சீற்றம் கொள்ள காரணம் என்ன?

Prathees
2 years ago
உக்ரைன் மீது ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இத்தனை சீற்றம் கொள்ள காரணம் என்ன?

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு உக்ரைன் நாட்டு நகரங்களில் ரஷ்யா குண்டு வீசி வருகிறது. இருநாடுகளுக்கு இடையேயான இந்தப் போருக்கு முக்கிய காரணமாக ஒன்று உள்ளது. அதாவது நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்ததுதான் போருக்கு ‘பிள்ளையார் சுழி’ போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஆகும். 2 ஆம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து படைகளை திரும்பப் பெற மறுத்தது. இதை முறியடிக்கும் வகையில் நட்பு நாடுகள் இணைந்து உருவாக்கியதுதான் இந்த நேட்டோ படைகள்.

தொடக்கத்தில் அமெரிக்கா,பிரிட்டன், பிரான்ஸ், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, ஐஸ்லாந்து, பெல்ஜியம், லக்சம்பேர்க், நோர்வே, போர்த்துக்கல், டென்மார்க் நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. தற்போது நேட்டோவில் 30 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளின் இராணுவ வீரர்கள் நேட்டோ படையில் அங்கம் வகிக்கின்றனர். இதில் இணைவதன் மூலம் இக்கட்டான சூழலில் நேட்டோ இராணுவ உதவிகளைப் பெற முடியும். தொடர்ச்சியாக இந்த அமைப்பில் புதிய நாடுகள் இணைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே தான் 1991 டிசம்பர் 25 இல் சோவியத் யூனியன் 15 நாடுகளாகப் பிரிந்தது. சோவியத் யூனியனில் அங்கம் வகித்த ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், எஸ்டோனியா, ஜோர்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா, மோல்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான் ஆகியவை தனிநாடுகளாகின.

2 ஆம் உலக போர் சந்தர்ப்பத்தில் உலகில் வல்லரசு நாடுகளாக அமெரிக்கா, சோவியத் யூனியன்கள் (ஒருங்கிணைந்த ரஷ்யா) விளங்கிய நிலையில் நாடுகளின் பிரிவால் இது மாறிப் போனது. அமெரிக்கா மட்டுமே உலகில் பலம் வாய்ந்த நாடாக மாறியது. இதை ரஷ்யாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

மேலும் சோவியத் யூனியில் அங்கம் வகித்த எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகள் 2004 இல் நேட்டோவில் இணைக்கப்பட்டன. இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும் ஜோர்ஜியா, உக்ரைன் நாடுகளை இணைக்க உள்ளதாக 2008 இல் உறுதி அளித்தது. இந்த உறுதிமொழி தற்போது வரை நிலுவையில் உள்ளது.

தங்களுடன் எல்லை பகிரும் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என அதன் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நினைக்கிறார்.

இதனால்தான் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகள் நோட்டோ படையில் இணையக் கூடாது. குறிப்பாக உக்ரைனை சேர்க்கவே கூடாது என வலியுறுத்தி வருகிறார். ஆனால் உக்ரைன் செவிசாய்க்கவில்லை.

இதனால்தான் உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விமர்சித்து வருகிறார்.

ஆனால் நேட்டோவில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டுகிறது. ரஷ்யாவின் எதிர்ப்பையும் மீறி நேட்டோவில் உக்ரைன் இணைய விரும்புவதற்கு பின்னணியில் முக்கிய விஷயங்கள் உள்ளன.

அதாவது நேட்டோவில் இணைவதன் மூலம் உக்ரைன் நாட்டிடம் எல்லைப் பிரச்சனையில் வாலாட்டும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுப்பதோடு, கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களை சமாளிக்கலாம் என உக்ரைன் நம்புகிறது.

மேலும் ரஷ்யாவை விட உக்ரைன் இராணுவம் பலத்தில் சிறியது. ரஷ்யாவில் 8.5 இலட்சம்ஈராணுவ வீரர்கள் உள்ள நிலையில், உக்ரைனில் வெறும் 2 இலட்சம் வீரர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் ரஷ்யாவின் தொடர் தொல்லைகளை சமாளிக்க வேண்டும் என்றால் அது நேட்டோ அமைப்பில் இணைவதுதான் என்பதை உக்ரைன் புரிந்து வைத்து காய்நகர்த்தி வருகிறது.

இருப்பினும் அமெரிக்கா உட்பட நேட்டோ அமைப்புடன் மோதுவது ரஷ்யாவுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தலாம். ரஷ்யாவின் இராணுவ பலத்தைக் காட்டிலும் 30 நாடுகளின் கூட்டமபை்பில் உள்ள நேட்டோ இராணுவம் பலமானது. 2021 இல் மட்டும் நேட்டோ பாதுகாப்பு படைகளுக்கு மொத்தம் 1,174 பில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்யப்பட்டுள்ளது.

இது 2020 இல் 1,106 பில்லியன் டொலராக இருந்தது. இதை ஒப்பிடும் போது ரஷ்யா தனது இராணுவத்துக்கு 2020 இல் 61.7 பில்லியன் டொலர்களை மட்டுமே செலவிட்டுள்ளது. இதனால்தான் நேட்டோவில் உக்ரைனை இணைக்க ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து போரை தொடக்கியுள்ளது.

இந்த நிலையில்தான் 40,000 நேட்டோ வீரர்கள் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவை எதிர்த்து போரிடும் வகையில் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேட்டோ நேரடியாகப் ரஷ்யாவுடன் மோதினால் அது உலகப் போராக மாறுவதோடு, ரஷ்யா ஈடுகொடுக்க முடியாத நிலைமை ஏற்படலாம். மேலும் உலக பொருளாதாரத்தை அது கடுமையாக பாதிக்கும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!