மகாசிவராத்திரி அன்று ராசிக்கு ஏற்ப பூஜை செய்து சிவனின் அளவற்ற அருளை பெறுவது எப்படி
நாளை மஹாசிவராத்திரி. இந்து சம்பிரதாயத்தில் சிவ பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள விழாக்களில் மகாசிவராத்திரி விழா மிகவும் சிறப்பம்சம் வாய்ந்ததாகும்.
இந்த திருநாளன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சிவபெருமானை பல்வேறு வடிவங்களில், பல்வேறு முறைகளில் வழிபடுகிறார்கள்.
சிவபெருமான் பக்தர்களின் பக்தியால் விரைவில் மகிழ்ந்து அவர்களுக்கு விரும்பிய பலன்களைத் தருகிறார். அனைவரும் சிவபெருமானின் அருளைப் பெற விரும்புகிறார்கள். சிவலிங்கத்திற்கு அபிஷேக அர்ச்சனைகள் செய்வதன் மூலம் எளிதாக சிவபெருமானின் அருளை பெற முடியும்.
அதுவும், ராசிக்கு ஏற்ப சிவலிங்கத்திற்கு பூஜை செய்தால், அதன் பலன் பன்மடங்கு அதிகமாக இருக்கும். இதனால், நாம் விடுக்கும் வேண்டுதல் விரைவில் நடந்தேறும், கேட்டது கிடைக்கும். ராசியின் அடிப்படையில் சிவலிங்க பூஜை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.
மேஷம்:
இந்த ராசிக்காரர்கள் தண்ணீரில் வெல்லம் கலந்து சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். சர்க்கரை அல்லது வெல்லத்தால் இனிப்பு அப்பம் செய்து சிவபெருமானுக்குப் படைக்கவும். சிவப்பு சந்தனம் மற்றும் சிவப்பு மலர்களை அர்ப்பணித்து வழிபடவும்.
ரிஷபம்:
இந்த ராசிக்காரர்கள் தயிர் சாதம் அல்லது தயிர் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்வது மங்களகரமான பலன்களைத் தரும். இது தவிர, வெள்ளை சந்தனம், வெள்ளைப் பூக்கள் மற்றும் அக்ஷதை ஆகியவற்றைக் கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்ய வேண்டும். மற்ற வழிபாட்டு பொருட்களில் வாசனை மலர்கள், பஞ்சாமிருதம் ஆகியவற்றை சேர்க்கலாம்.
கடகம்:
இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு நெய் அபிஷேகம் செய்ய வேண்டும். மேலும், பச்சை பால், வெள்ளை நிற பூக்கள் மற்றும் சங்குபுஷ்பம் ஆகியவற்றை அர்ப்பணித்தும் வழிபடலாம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் சிவனுக்கு வெல்லம் கலந்த நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். வெல்லம் மற்றும் அரிசி கொண்டு செய்யப்பட்ட பாயசத்தை சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்யலாம். மந்தார புஷ்பத்தையும் அர்ப்பணிக்கலாம்.
கன்னி:
இந்த ராசிக்காரர்கள் சிவலிங்கத்திற்கு கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்கு வில்வ இலை, மலர்கள், வெற்றிலை ஆகியவை கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.
துலாம்:
இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு வாசனை திரவியம் அல்லது நறுமண எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்து, தயிர், தேன் மற்றும் ஸ்ரீகண்டம் ஆகியவற்றின் நைவேத்தியம் செய்யலாம். சிவபெருமானுக்கு வெள்ளைப் பூக்களை அர்ப்பணித்து வழிபடுவது விசேஷம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் பஞ்சாமிர்தத்தால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது விரைவான பலனைத் தருவதாகக் கருதப்படுகிறது. மேலும், சிவபெருமானுக்கு சிவப்பு நிற மலர்களை அர்ப்பணிக்க வேண்டும்.
தனுசு:
இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு பாலில் மஞ்சள் கலந்து அபிஷேகம் செய்ய வேண்டும். கடலைமாவு மற்றும் வெல்லம் கொண்டு இனிப்பு செய்து படைக்கலாம். மஞ்சள் அல்லது சாமந்தி பூக்களைக் கோண்டு பூஜை செய்து வழிபடவும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இளநீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பான பலன்களைத் தருகிறது. மேலும், உளுத்தமாவால் செய்யப்பட்ட இனிப்புகளை சிவபெருமானுக்கு நைவேதியமாக படைப்பது நல்லது. தாமரை மலரை அர்ப்பணிப்பது விசேஷம்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் சிவ பெருமானுக்கு நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். உளுந்தில் செய்யப்பட்ட இனிப்புகளை நைவேத்தியம் செய்து, பலவித மலர்கள் மற்றும் வில்வ இலை கொண்டு பூஜிக்கலாம். இதன் மூலம் சனி பகவானால் ஏற்படும் தோஷமும் நீங்கும்.
மீனம்:
இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு வெல்லம், நெய், தேன், சிவப்பு சந்தனம் ஆகியவற்றை பால் அல்லது நீருடன் சேர்த்து அர்ச்சனை செய்ய வேண்டும். இதனால் பல வித சிறப்பு பலன்களை மீன ராசிக்காரர்கள் பெற முடியும்.