உலகின் கையாலாகாத்தனத்தின் விளைவு உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு!

Prathees
2 years ago
உலகின் கையாலாகாத்தனத்தின் விளைவு உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு!

சிறிதளவேனும் எதிர்பார்த்திராத வேளையில் ரஷ்யா பெரும் எடுப்பில் உக்ரைன் மீது கடந்த வியாழக்கிழமை படையெடுப்பை ஆரம்பித்தது. ஆகாயம், கடல் மற்றும் தரை வழி ஊடாக முடுக்கி விடப்பட்டுள்ள இப்போரினால் முதல் நாள் தொடக்கம் கடும் சேதங்களுக்கும் அழிவுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றது உக்ரைன். இந்நிலையில் உக்ரைன் மீதான போர் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

 கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், சோவியத் ரஷ்யாவில் இருந்து 1991இல் பிரிந்து தனிநாடுகளான நாடுகளில் ஒன்றாகும். ரஷ்யாவுக்கு அடுத்த பெரிய நாடு இது. 41மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் இந்நாட்டின் வடக்கில் பெலாரஸும், மேற்கில் போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி ஆகிய நாடுகளும், தெற்கில் மோல்டோவாவும், ருமேனியாவும் கிழக்கிலும் வடகிழக்கிலும் ரஷ்யாவும் எல்லை நாடுகளாக அமைந்திருக்கின்றன. இந்நாடு ரஷ்யாவில் இருந்து பிரிந்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுடன் நெருங்கிச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.  

 ஆனால் மொழி, கலாசார அடையாளங்கள் என்பவற்றில் உக்ரைனின் சில பிரதேசங்கள் ரஷ்யாவுடன் ஒத்துப்போகின்றன. அதனால் உக்ரைனைத் தன்னுடைய அங்கமாக ரஷ்யா கருதுகிறது. ஆனால் அந்நாட்டு மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்திடவே விரும்புகின்றனர்.  

 இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலும், நேட்டோ அமைப்பிலும் இணைவதற்கான முயற்சிகளை உக்ரைன் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும் அளித்து வரும் ஊக்குவிப்புகளும் உசுப்பேற்றல்களும் காரணமாக உள்ளன.  

 ஆனால் உக்ரைனின் இந்நடவடிக்கைகளையும் நேட்டோவில் இணையும் முயற்சியையும் ரஷ்யா விரும்பவில்லை. அதனை ரஷ்யா பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவே எடுத்துக் காட்டியது. இருந்தும் அவற்றை உக்ரைன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மேற்குலக நாடுகளின் ஊக்குவிப்பு வார்த்தைகள் அந்தளவுக்கு உக்ரைனின் கண்களை மறைத்தன.  

 இந்நிலையில் உக்ரைய்னின் ஒரு பகுதியான கிரீமியாவை 2014இல் ரஷ்யா தனதாக்கிக் கொண்டது. இருந்தும் கூட உக்ரைன் தன் செயற்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பக்கம் சாயவும், நேட்டோவில் இணையவும் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. குறிப்பாக 2021_2022 - நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் தீவிரம் காட்டத் தொடங்கியது.

இதற்கு உக்ரைனின் தற்போதைய ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலன்ஸ்கி மேற்குலக சார்பு மனப்பான்மையைக் கொண்டவராக இருப்பது இதற்குப் பெரிதும் உதவியது. இந்நடவடிக்கைகளுக்கும் ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால் அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் நம்பி ரஷ்யாவை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் உக்ரைன் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்தது.  

 ஆனால் ரஷ்யா தமக்கு அருகிலுள்ள நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடுகளில் இருந்து நேட்டோ படைகளை திரும்பிப் பெறுமாறு 1997இன் பின்னர் கோரத் தொடங்கியது. அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் அக்கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றன.  

 ரஷ்யா உலகில் ஒரு பலம் மிக்க அணுவாயுத வல்லரசாக இருப்பதையும் கருத்தில் கொள்ளாது உக்ரைன் தனது நகர்வுகளை முன்னெடுத்தது. இதற்கு அமெரிக்காவினதும் ஐரோப்பிய நாடுகளதும் வார்த்தைகள் பக்கபலமாக அமைந்தன.  

 இந்த நிலையில் உக்ரைனின் எல்லைப் பிரதேசங்களில் கடந்த டிசம்பராகும் போது தனது படைகளை ரஷ்யா குவிக்கத் தொடங்கியது. ஆனாலும் இது உக்ரைய்ன் மீது படை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை அல்ல என்று ரஷ்யா தரப்பில் பல சந்தர்ப்பங்களில் கூறப்பட்டது.

ஆனால் உக்ரைன் மீது ரஷ்யப் போர் ஆரம்பமானதும் கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய உக்ரைன் தூதர் செர்கி கிஸ்லிட்ஸியா, ரஷ்ய தூதர் நெபன்ஸியாவை நோக்கி இவ்வாறு குறிப்பிட்டார்.  

 "உக்ரைன் மீது படையெடுப்பு நடக்காது என்று இதே அரங்கில் எத்தனை முறை கூறியிருப்பீர்கள். ஆனால், இன்று என்ன நடக்கிறது? நாஜிப் படைகள் போல் தாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வார்த்தைகள் மதிப்பற்றவை" என்றார் உக்ரைன் தூதுவர்.  

 அதேநேரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், உக்ரைன் மீதான போருக்கான உத்தரவை விடுத்ததும் உக்ரைன் ஜனாதிபதி உடனடியாக ரஷ்ய அதிபருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.  

 இந்நிலையில், தாம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தயார் எனப் பகிரங்கமாக அறிவித்த உக்ரைன் ஜனாதிபதி, தம் நேச ஐரோப்பிய நாடுகளோடும் ஏனைய நாடுகளோடும் நேரடியாக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி யுத்தத்தை நிறுத்துவதற்கான உதவிகளைக் கோரினார். ஆனால் அவற்றை ரஷ்யா கண்டு கொள்ளாது போரை ஆரம்பித்து முன்னெடுத்து வருக்கின்றது.  

 இந்த நிலையில் ரஷ்யா முன்னெடுத்திருக்கும் இப்போரை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகளிடம் உக்ரைன் ஜனாதிபதி பல சந்தர்ப்பங்களில் உதவி கேட்டு அபயக்குரல் எழுப்பினார்.    ஆனால் அவர் இணைய முயற்சித்த நேட்டோவோ, ஐரோப்பிய ஒன்றியமோ நேரடியாக உதவ முன்வரவில்லை. 'நீங்கள் எங்கள் உறுப்பு நாடு இல்லை' எனக் கூறி உதவ மறுத்து விட்டன.

அமெரிக்க ஜனாதிபதி ஜே பைடன் 'உக்ரைய்ன் நேட்டோ உறுப்பு நாடு இல்லை. அதனால் நேட்டோ படைகளை அனுப்ப முடியாது' எனப் பகிரங்கமாகக் கூறினார். இதே போன்ற அறிவிப்பை நேட்டோ அமைப்பும் விடுத்தது.  

 உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, யாரை நம்பி ரஷ்யாவை ஆத்திரமூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டாரோ அவர்கள் எவரும் உதவிக்கு முன்வராத நிலையில் 'ரஷ்யாவுக்கு எதிராக நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லோருக்கும் பயம்' என்று உருக்கமாகத் தெரிவித்தார்.  

 இதேவேளை உக்ரைனின் இந்தியாவுக்கான தூதுவர், ரஷ்ய ஜனாதிபதியுடன் பேசி உக்ரைன் மீதான யுத்தத்தை நிறுத்தி பேச்சுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்தார். அதற்கேற்ப இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய ஜனாதிபதியுடன் பேசினார். ஆனால் ஆக்கபூர்வமான பதிலை ரஷ்யா அளிக்கவில்லை.  

 இதேவேளை இப்போர் ஆரம்பமானதும் போப்பாண்டவர் பிரான்சிஸ், ரோமிலுள்ள ரஷ்ய தூரதரகத்திற்கு நேரில் சென்று உக்ரைய்ன் மீதான போரை நிறுத்தி சமாதான வழிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொண்டார். அது ஒரு முன்மாதிரி மிக்க நடவடிக்கையாகும். யுத்தம் இரத்தம் சிந்துதலுக்கும், மனித அழிவுகளுக்கும் மாத்திரமல்லாமல் சேதங்களுக்குமே வழிவகுக்கும். அதனால் யுத்தத்தை நிறுத்திடவும் அனைத்து விடயங்களுக்கும் சமாதான வழிகளில் தீர்வுகளைத் தேடவுமே ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதுவே தார்மீகமானது. அந்த வகையில் போப்பாண்டவரின் நடவடிக்கை பெரிதும் வரவேற்கப்பட வேண்டியதாகும்.  

 ஆனால் உக்ரைன் நம்பி நின்ற எந்தவொரு நாடும் இவ்வாறான நடவடிக்கையை முனனெடுக்கவில்லை. ரஷ்யாவை சமாதான வழிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் தவறிவிட்டன. அதனால் உக்ரைய்ன் ஜனாதிபதி மற்றொரு சந்தர்ப்பத்தில் உரையாற்றும் போது, 'ரஷ்யாவின் முதல் இலக்கு நானே. இரண்டாவது எனது குடும்பம். நானும் எனது குடும்பத்தினரும் இன்னும் தலைநகரில் தான் இருக்கிறோம். ரஷ்யப் படைகளின் இலக்கு நாங்கள்தான் என்று தெரிந்தும் இங்கேயே இருக்கிறோம்' என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டார்.    மேலுமொரு சந்தரப்பத்தில் உரையற்றும் போது 'உலகம் என்னைப் பார்க்கும் இறுதி சந்தர்ப்பமாக இது இருக்கும்' என்று கூட கூறினார்.  

 ஆனால் உக்ரைன் நம்பி நின்ற நாடுகள் ரஷ்யாவுக்கு கோபமூட்டும் செயற்பாடுகளிலும் இக்கோர யுத்தத்திற்கு மேலும் எண்ணெய் ஊற்றும் வகையிலுமே செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன.  

 ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிப்பதால் ரஷ்யா உடனடியாக யுத்தத்தை நிறுத்தி விடும் என எதிர்பார்க்க முடியாது. பொருளாதாரத் தடையின் தாக்கம் உடனடியாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கவும் முடியாது. அதேநேரம் உக்ரைனுக்கு ஆயுத ரீதியாக உதவுவதாலோ ஆயுதக் கொள்வனவுக்கு நிதி வழங்குவதாலோ ரஷ்யா யுத்தத்தை நிறுத்தி விடும் என எதிர்பார்க்கவும் முடியாது.    இவ்வாறான நடவடிக்கைகளின் விளைவாக பேரழிவு யுத்தம் தொடரும். இரத்தம் சிந்துதலும் அழிவுகளும் நீடித்துக் கொண்டிருக்கும்.

யுத்தம் நீடிப்பதால் ஆயுத உற்பத்தி நிறுவனங்கள்தான் இலாபமடையுமேயொழிய மக்கள் அல்ல.  

ஆகவே உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ரஷ்யாவை யுத்தநிறுத்த நிலைக்கும் சமாதான வழிக்கும் கொண்டு வருவதே உலகின் முன்பாக இருக்கும் பாரிய பொறுப்பாகும். இருந்தும் இப்போர் உருவாவதைத் தவிர்க்கத் தவறிய உலகம் இனியாவது விரைவாக செயற்பட்டு உடனடியாக யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளவும் சமாதான வழிக்கு இரு தரப்பையும் கொண்டு வரவும் முயற்சிக்க வேண்டும். அதுவே அமைதி சமாதானத்தை விரும்பும் அனைத்து மனிதநேயர்களதும் எதிர்பார்ப்பாகும்.  


பிரதிபண்ணப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!