நாளை நிலவை மோதவிருக்கும் 3 டன் விண்வெளி குப்பைகள் - விளைவுகள் என்ன?

Prasu
2 years ago
நாளை நிலவை மோதவிருக்கும் 3 டன் விண்வெளி குப்பைகள் - விளைவுகள் என்ன?

பல உலக நாடுகளால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் உள்ளிட்டவை காலாவதியான பின் விண்வெளி குப்பையாக சுற்றி வருகின்றன.

இப்படி விண்வெளியில் சுழன்று வரும் இத்தகைய குப்பைகள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்துவது ஒருபுறம் இருக்க, எதிர்கால விண்வெளி முயற்சிகளையும் மிகவும் கடினமாக்கும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுமார் 3 டன் எடைகொண்ட விண்வெளி குப்பை மார்ச் 4-ந்தேதி நிலவின் மீது மோதும் என கடந்த ஜனவரி மாதம் நாசா அறிவித்தது.

கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் அனுப்பப்பட்ட ‘பால்கன்9’ ராக்கெட்டின் மேல்பகுதியான ‘பூஸ்டர்’ தான் நிலவின் மீது மோத இருப்பதாக நாசா முதலில் தெரிவித்தது.

பின்னர், நிலவில் மோதும் ராக்கெட் ஸ்பேஸ் எக்ஸ் உடையது அல்ல என்றும், அது நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்து வருவதற்காக சீன விண்வெளி ஆய்வு மையத்தால் 2014-ம் ஆண்டு அனுப்பப்பட்ட ராக்கெட்டின் ‘பூஸ்டர்’ என்றும் நாசா அறிவித்தது.

ஆனால் அதை மறுத்த சீனா, “நிலவில் மோதும் ராக்கெட் எங்களுடையது கிடையாது” என தெரிவித்தது.

இந்த குழப்பத்துக்கு மத்தியில் 3 டன் எடை கொண்ட அந்த விண்வெளி குப்பை நாளை (வெள்ளிக்கிழமை) நிலவில் மோதவுள்ளது. அது மணிக்கு 9,300 கி.மீ. வேகத்தில் நிலவின் மீது மோத இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் இந்த விண்வெளி குப்பையானது விண்வெளியில் உள்ள தொலைநோக்கிகளின் கண்களில் இருந்து விலகி நிலவின் பின்புறத்தில் மோத உள்ளதாகவும், இதனால் செயற்கைக்கோள் படங்கள் மூலம் பாதிப்பை உறுதிப்படுத்த வாரங்கள், மாதங்கள் கூட ஆகலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இருந்த போதிலும் கைவிடப்பட்ட ராக்கெட் உள்ளிட்ட விண்வௌி குப்பைகள் நிலவில் மோதுவது இது முதல் முறை அல்ல என்பதால் இந்த நிகழ்வால் பெரிய அளவில் விளைவுகள் எதுவும் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதே வேளையில் மணிக்கு 9,300 கி.மீ. வேகத்தில் 3 டன் எடை கொண்ட குப்பை மோதுவதால் நிலவில் 33 அடி முதல் 66 அடி வரையில் பெரிய பள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் நிலவில் இருந்து நூற்றுக்கணக்கான கி.மீ. தொலைவுக்கு தூசி பரவும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!