மனித உயிர்களை பலி கொண்டு எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது - ஐ.நா. பேரவையில் இந்தியா கருத்து
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 8-வது நாளாக நடத்தி வருகிறது. இதற்கிடையே, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வு கடந்த பிப்ரவரி 28ம் தேதியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் முதல் 3 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
நடைபெற்ற 4-வது கூட்டத்தில் உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உரை நிகழ்த்தப்பட்டது. அந்த உரையில் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது;-
உக்ரைனுக்கு மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற தேவையான பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை இந்தியா ஏற்கெனவே வழங்கி உள்ளது. உக்ரைனுக்கு வரும் நாட்களில் இன்னும் அதிகமான உதவிகளை செய்ய உள்ளோம்.
இந்த விவகாரம் அவசரமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். உக்ரைனில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.
உக்ரைன் மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் மதிக்கப்பட வேண்டும் என்பதற்கு அழைப்பு விடுக்கிறோம்.
உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். மனித உயிர்களை பலி கொண்டு எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.
பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கை மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண இருக்கும் வழிகளாகும்.
இவ்வாறு இந்தியா தனது நிலைப்பாடடை தெரிவித்துள்ளது.