இன்று சனிக்கிழமை சனி பகவான் பற்றிய சில சிறப்பியல்புகளை தெரிந்துகொள்வோம்...
சனியின் சன்னிதியில்..
கிரகங்களில் சனியின் பார்வைக்கு அதிகமான வலிமை உண்டு. அதனால் தான் சனி, பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. பொதுவாகச் சனியின் சன்னிதியில் நின்று வழிபடும் பொழுது, நேரில் நின்று வழிபடுவதைக் காட்டிலும் ஏதேனும் ஒரு பக்க ஓரத்தில் நின்று வழிபட வேண்டும்.
எனவே தான் ‘சனியை சாய்வாய் நின்று வழிபடு’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த முறையில் சனியை வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்ளலாம். சகல தோஷங்களும் நீங்கி தரணியிலேயே வாழ்க்கை நடத்தச் சனிபகவான் நமக்கு அருள் புரிவார்.
எந்த மோதிரம்..
ஜாதகத்தில்.. சனி யோககாரகனாக அமைந்தவர்கள், ரிஷபம், விருச்சிகம், மகரம், கும்பம் ராசிக்காரர்கள், பாக்யாதிபதியாக சனி இருந்து உச்சம் பெற்றவர்கள், எட்டு எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆகியோர் காக மோதிரம் அணியலாம். சர்ப்பக் கிரகம் பலம் பெற்றிருந்தால் நாக மோதிரம் அணியலாம். சனியின் ஆதிக்கம் பெற்றவர்கள், நீலக்கல் மோதிரம் அணிவது சிறப்பு தரும்.
முறைப்படி பாக்யாதிபதி பலம் பார்த்து, ரத்தினங்களை நாம் பிறந்த தேதி, உடல் எண், உயிர் எண், நட்சத்திரம், ராசி, திசாபுத்தி அனைத்தும் பார்த்து ஆராய்ந்து மோதிரம் அணிவதே மிகுந்த நன்மை தரும்.
மகத்தான அபிஷேகம்
சனிக்கிழமை அன்று நல்லெண்ணெயில் சனீஸ்வரருக்கு குளிர, குளிர அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம் அணிவித்து, எள்ளோதரை நைவேத்தியம் படைக்க வேண்டும். பின்னர் சனி பகவானின் கவசத்தை பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியத்தை நினைத்த படியே செய்து முடிக்கும் ஆற்றலைச் சனிபகவான் வழங்குவார்.
கதவுகள் இல்லாத வீடுகள்
சனி சிங்கனாப்பூரில் உள்ள எந்த வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களின் கட்டிடங்களுக்கும் கதவுகள் இல்லை என்பது ஆச்சரியமான சிறப்பம்சமாகும். வாசலில் நிலைக் கதவுகள் காணப்படுகின்றன. ஆனால் கதவுகள் இல்லை. இதற்கு அங்கே திருடினால் சனி பகவான் தண்டித்து விடுவார் என்ற பயம் தான் காரணமாம். இந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இதுவரை எந்த ஒரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறுகிறார்கள்.
2011-ம் ஆண்டில் இங்கு தொடங்கப்பட்ட யூகோ வங்கியின் பாதுகாப்பு பெட்டகங்கள் மட்டுமே கதவு கொண்டு மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.