பாகிஸ்தானில் விழுந்த இந்திய ஏவுகணை வெறும் விபத்தே.. அமெரிக்கா சுட்டிக்காட்டுகிறது....

#India #Pakistan #United_States
பாகிஸ்தானில் விழுந்த இந்திய ஏவுகணை வெறும் விபத்தே..  அமெரிக்கா சுட்டிக்காட்டுகிறது....

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் மீது ஏவுகணை ஏவப்பட்டது விபத்துதான் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியாவின் ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் மீது எதிர்பாராதவிதமாக ஏவப்பட்டு அது பாகிஸ்தானில் விழுந்தது. பாகிஸ்தானில் தரையிறங்கிய ஏவுகணை தற்செயலாக வீசப்பட்டதாகவும், வழக்கமான பராமரிப்பின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இந்த தவறு நிகழ்ந்ததாகவும் இந்தியா விளக்கம் அளித்தது."ஆழ்ந்த வருந்தத்தக்க" சம்பவம் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்துவிட்டது என இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்கா தனது கருத்தை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது விபத்தே தவிர வேறொன்றுமில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் , “சமீபத்தில் இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்தது தற்செயலானது தவிர வேறு எதுவும் இல்லை. இந்த சம்பவம் ஒரு விபத்தைத் தவிர வேறொன்றுமில்லை. என்ன நடந்தது என்பது தொடர்பான துல்லியமான அறிக்கையை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதற்கு மேல் எங்களிடம் எந்த கருத்தும் இல்லை" என்று செய்தியாளரிடம் தெரிவித்தார்.