வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் என்ன? - முழுமையான தகவல்கள்
தமிழக சட்டப்பேரவையில் 2022-23ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார். தமிழகத்தில் வேளாண்மை துறைக்காக 2வது நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது.
2022 - 2023 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் மற்றும் முக்கிய நோக்கங்கள்:
1. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குத் திட்டத்தின் ஒன்றான தமிழகத்தின் நிகர சாகுபடிப் பரப்பினை உயர்த்துவது.
2. அனைத்து வேளாண் சார்ந்த துறைத்திட்டங்களை ஒருங்கிணைத்து. ஒட்டுமொத்த கிராம வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுத்தல்
3. மானாவாரி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது
4. மாற்றுப் பயிர் சாகுபடி மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், பருத்தி, பழங்கள் மற்றும் காய்கறிகளின் சாகுபடிப் பரப்பினை உயர்த்துவது.
5. இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாத்தல்
6. ஆண்டு முழுவதும் வருமானம் ஈட்ட, விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்குதல்
7. இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல்
8. வேளாண் விரிவாக்கத்தில் தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி விவசாயிகளுக்கு விரைவான சேவை அளித்தல்
9. பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தல்
10. வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் மரபுசார் இரகங்களை ஊக்குவித்தல்
11. வேளாண்மை பணிகளை இயந்திரமயமாக்குதல்
12. சூரிய சக்தியினை வேளாண் பணிகளுக்கு பயன்படுத்தல்
13. பண்ணைக்குட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நீராதாரங்களை வலுப்படுத்தல்
14. சந்தை உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தி விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைக்க உதவுதல்