ரயிலில் இருந்து கீழே விழுந்த நபரை காப்பாற்றிய போலீசார்: ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!
அரியலூரில் ரயிலில் அடிப்பட்டு இறந்ததாக கருதப்பட்ட நபரை 2 கிலோ மீட்டர் தூரம் காட்டுப் பாதையில் தூக்கிச் சென்று ஆம்புலன்சில் ஏற்றி போலீசார் உயிரை காப்பாற்றினர்.
கரூர் மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மேகவண்ணன். இவர், சென்னையில் இருந்து விரைவு ரயிலில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அரியலூர் மாவட்டம் ஓட்டகோவில் ரயில்வே நிலையம் அருகே கூத்தூர் கிராம அக்கரைகாடு என்ற இடத்தில் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில் ரயில் பாதை அருகே இறந்த நிலையில் ஒரு நபர் கிடப்பதாக அரியலூர் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு சென்றஅரியலூர் நகர காவல் நிலைய தலைமை காவலர் சுகுமார், காவலர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு அந்த நபர் உயிரோடு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நடுக்காட்டில் இருந்து கிராம இளைஞர்கள் உதவியுடன் 2 கிலோமீட்டர் தூரம் வரை இளைஞரை தூக்கி வந்து ஆம்புலன்சில் ஏற்றினர். இதையடுத்து அவர் அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இளைஞரின் உயிரை காப்பாற்றிய காவலர்கள் மற்றும் கிராம இளைஞர்களை அனைவரும் பாராட்டினர்.