தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 70.
சோழர் வரலாறு - கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சோழர்
1. சிபி
முன்னுரை
இவன், எல்லாச் சங்கப் புலவராலும் பிற்பட்ட புலவராலும் சோழ மரபின் முன்னோரைப்பற்றிய இடங்களில் குறிக்கப்பட்டுள்ளான்.[1] இவன் வரலாறு பாரதம், இராமாயணம் முதலிய நூல்களிற் கூறப்பட்டுள்ளது. இவன், பருந்திற்கு அஞ்சித் தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறவினைக் காக்கக் தன் தசையைக் கொடுத்தவன் என்பது அனைவரும் அறிந்ததேயாகும்.
இவனைக் குறிக்கும் தமிழ் நூல்கள்
புறநானூறு, சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, மூவருலா, பெரிய புராணம் முதலியன இவனைக் குறிக்கின்றன.
“ புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல்
சினங்கெழு தானைச் செம்பியன் மருக!”
- புறநானூறு
“தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி அஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!”
“புறவு நிறைபுக்குப் பொன்னுலகம் ஏத்தக்
குறைவில் இடம்பரிந்த கொற்றவன்.”
- சிலப்பதிகாரம்
“உடல்க லக்கற வரிந்து தசை யிட்டும் ஒருவன்
ஒருதுலைப் புறவொ டொக்கநிறை புக்க புகழும்.”
- கலிங்கத்துப்பரணி
“உலகறியக்
காக்கும் சிறுபுறவுக் காகக் களிகூர்ந்து
நூக்கும் துலைபுக்க தூயோன்.”
- விக்கிரம சோழன் உலா
“துலையிற் புறவின் நிறையளித்த சோழர் உரிமைச்
சோணாடு”
- பெரிய புராணம்
2. முசுகுந்தன்
அரசு
முசுகுந்தன்[2] என்று பெயரையுடைய சோழ மன்னன் கருவூரில் இருந்து அரசாண்டவன். இவன் காலத்தில் கருவூர் சோணாட்டிற் சேர்ந்திருந்தது போலும்! இவன் இந்திரன் என்னும் பேரரசன் ஒருவற்குப் போரில் உதவி செய்து, அவனது நன் மதிப்பைப் பெற்றான்.
சிவப்பணி
இவன் சிறந்த சிவபக்தன். இவன் இந்திரன் பூசித்து வந்த சிவலிங்கம் உட்பட ஏழு லிங்கங்களை இந்திரன் பால் பெற்று மீண்டான்; அவற்றைத் திருவாரூர், திருநாகைக் காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருநள்ளாறு, திருவாய்மூர் ஆகிய ஏழு திருப்பதிகளிலும் எழுந்தருளச் செய்தான். ஆதலின் இந்த ஏழு பதிகளும் ‘சப்த விடங்கத் தலம்’எனப்படுகின்றன.
நாளங்காடிப் பூதம்
இந்திரன் முசுகுந்தனுக்கு மெய்க்காவலாகுமாறு வலிய பூதம் ஒன்றை அனுப்பினான். அது பூம்புகார் நகரம் சென்று, மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்ற இரு பகுதிகட்கும் இருந்த நாள் அங்காடியில் (பகற்காலக் கடைத் தெரு) இருந்து, தன் பணியைச் செய்து வந்தது.[3] அப்பூதம், புகார் நகரில் இந்திர விழாச் செய்யப்படா தொழியின் வெகுண்டு துன்பம் விளைவிக்கும் என்பது மணிமேகலை காலத்து மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையாகும்.[4] இவனைக் குறிக்கும் தமிழ் நூல்கள் முசுகுந்தன் சிலப்பதிகாரம், மணிமேகலை, கலிங்கத்துப்பரணி, கந்தபுராணம், ஒரு துறைக்கோவை முதலியவற்றில் குறிக்கப்பட்டுள்ளான். இக்குறிப்புகளில் சிறப்பாக அறியத்தக்கது - முசுகுந்தன் காலத்திலே காவிரிப்பூம் பட்டினம் நன்னிலையில் இருந்தது என்பதே ஆகும். இத்துடன், ‘கி.மு. 6 அல்லது 7-ஆம் நூற்றாண்டு முதலே தென் இந்தியா மேனாடுகளுடன் சிறக்க வாணிபம் நடத்தி வந்தது’[5] என்று மேனாட்டு ஆராய்ச்சியாளர் கூறும் கூற்றை ஒத்திட்டுப் பார்த்தல் இன்பம் பயப்பதாகும்.
3. காந்தன்
வரலாறு
இவன் காவிரிப்பூம் பட்டணத்தில் இருந்த சோழ வேந்தன்.இவன் அகத்தியரிடம் பேரன்புடையவன்; அவர் அருளால் காவிரி தன் நாட்டில் வரப்பெற்றவன் என ஒரு குறிப்பு மணிமேகலையிற் காணப்படுகிறது. இவன் பரசுராமன் காலத்தவனாம்; அவன் தெற்கே வருதலைக் கேட்டு (அவன் அரச மரபினரைக் கொல்லும் விரதம் உடையவனாதலின்) அஞ்சி அகத்தியர் சொற்படி, தனக்குப் பரத்தைவழிப் பிறந்த காந்தன் என்பானைச் சோழ அரசனாக்கி, எங்கோ மறைந்திருந்தானாம், பரசு ராமனைப் பற்றிய அச்சம் நீங்கியவுடன் மீண்டு வந்து தன் நாட்டைத் தானே ஆண்டானாம்.
தொடரும்...