தமிழ் நாட்டிலும் கடும் விலை உயர்வில் வீட்டு உபயோக சிலிண்டர், பெட்ரோல் டீசல் விலை... முழு விவரம்!
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 137 நாட்களுக்கு பிறகு லிட்டருக்கு 76 காசு அதிகரித்திருக்கிறது. அதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.16 ரூபாய்க்கும் டீசல் 92.19 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது.
சென்னையில் 137 நாட்களுக்குப் பிறகு இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் ஒரு லிட்டர் 76 காசுகள் விலை உயர்ந்து ரூ.102.16 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ. 92.19 விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 2 சதவிகிதம் உயர்ந்து 118 டாலரில் வர்த்தகமாகிறது.
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததால் 5 மாநில தேர்தலுக்கு பிறகு எரிபொருட்களின் விலை அதிகரிக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது அவற்றின் விலை உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் மொத்த விற்பனையில் டீசல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக மாதத்தின் முதல் நாளன்று வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றப்படும் நிலையில், மார்ச் மாதத்திற்கான விலை இன்று மாற்றப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 917 ரூபாய்க்கு விற்கப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை, மேலும் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை அதிகரித்து வருவது நடுத்தர மக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.
அடிப்படை உபயோகப்பொருள்களின் ஆதார விலை உயர்ந்திருப்பது, பணவீக்கத்துக்கான வழியாக அமையக்கூடும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே சமையல் எண்ணெய், காபி தூள், டீ தூள், நூடுல்ஸ் என பல்வேறு வகை உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாமானியர்களின் மாதாந்திர பட்ஜெட் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 6 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 7 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதேபோல, மொத்தவிலை பணவீக்கமும் 13.11 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கோதுமை, பாமாயில் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக அவற்றை கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலையை 10 சதவிகிதம் வரை நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக விநியோக சங்கிலி தடைப்பட்டதே சமையல் எண்ணெய் போன்றவற்றின் விலை கணிசமாக உயரக் காரணமாக கூறப்படுகிறது.