முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அரசுமுறை பயணமாக துபாய் பயணமாகிறார்.

#Tamil Nadu #M. K. Stalin
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அரசுமுறை பயணமாக துபாய் பயணமாகிறார்.

உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரசுமுறை பயணமாக துபாய் புறப்பட்டுச் செல்கிறார். தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அபுதாபிக்கும் அவர் செல்லவுள்ளார்.

துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய உலக எக்ஸ்போ கண்காட்சி வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் மார்ச் 25 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படவுள்ளது. இதையொட்டி, உலக எக்ஸ்போ கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் செல்கிறார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், உலக கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரங்கை வரும் 25 ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், தொழில் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதுல் என முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்து காட்டும் வகையில், இந்த அரங்கில் காட்சிப்படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக கண்காட்சியில் பங்கேற்றுள்ள 192 நாடுகளுக்கும் பிரத்யேகமாக அரங்குகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், சுமார் இரண்டரை கோடி பேர் இதனை பார்வையிடுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

துபாய் மட்டுமின்றி அபுதாபிக்கும் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களையும், துபாயில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார். இவை தவிர புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!