அத்தியாவசியப் பொருட்களை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்ப திட்டம்!- முதலமைச்சர்
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுமாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேற்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட முதலமைச்சர், இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து கலந்துரையாடினார்.
இதன்போது, இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது நிலவும் தீவிரப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, வேதனையில் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொண்டார்.
இந்தச் சூழ்நிலையில் இலங்கையில் வசிக்கும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன் கருதி தமிழக அரசு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் விநியோகிக்க உரிய அனுமதியையும் ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.