அமைச்சராகும் நடிகை ரோஜா - அரசியல் வட்டாரத்தில் பரபரபப்பு தகவல்
ஆந்திர மாநில அமைச்சரவையில் நடிகையும், சட்டமன்ற உறுப்பினருமான ரோஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று, அம்மாநில அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலுடன், ஆந்திர மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு, அனைத்து எம்எல்ஏக்கள் வாய்ப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி, அமைச்சரவையில் 24 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர். கடந்த டிசம்பர் மாதம் அமைச்சரவை மாற்றி அமைக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்திருந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக அமைச்சரவை மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை நேற்று கூண்டோடு கலைக்கப்பட்டது. 24 அமைச்சர்களிடம் இருந்தும் ராஜினாமா கடிதங்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பெற்றுக்கொண்டார்.
சுமார் மூன்று ஆண்டுகளில் மக்கள் பணியில் நன்கு சேவை புரிந்த 5 அல்லது 6 பேரை மட்டுமே மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், புதிதாக இருபத்தி மூன்று அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.