தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 78.
சோழர் வரலாறு - சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும்
சங்ககால நிலைமை:
தொல்காப்பியம், வடமொழியாளர் தமிழகத்தில் வேரூன்றிவிட்டதை நன்கு அறிவிக்கிறது; அவர் தம் பழக்க வழக்கங்களையும் ஒரளவு தெரிவிக்கிறது. அக்கால முதல் சங்கத்து இறுதிக் காலமாகிய கி.பி. 3-ஆம் நூற்றாண்டுவரை சிலப்பதிகார காலம் வரையுள்ள தமிழ்ப்பாக்களைக் கானின், வடமொழியாளருடைய வேதவேள்விகள், சமயக் கோட்பாடுகள் இன்னபிறவும் படிப்படியாகத் தமிழர் வாழ்க்கையில் கலந்து வந்த நிலைமையை நன்கு உணரலாம்.
எனினும், இந்தப் புதுமை நகர மக்களிடமே காணப்பட்டதாகும். திணை மக்களாக இருந்தவரிடம் இவை வேரூன்றில, இஃது எங்ஙனமாயினும், தமிழ் அரசர் தம்மைக் கதிரவன்வழி வந்தவர் என்றும், மதிவழி வந்தவர் என்றும் வடநாட்டு அரசரைப் போலக் கூறத் தலைப்பட்டு விட்டனர்; வேத வேள்விகளில் விருப்புக் கொண்டனர், வேதங்களில் வல்லாரைத் தமக்கும் புரோகிதராகக் கொள்ளத் தலைப்பட்டனர் என்பன நன்கு விளங்குகின்றன. வடவர் கூட்டுறவால் பழந்தமிழர் மணவாழ்க்கை, பிற சடங்குகள், சமயக் கொள்கை முதலியவற்றுள் வடவர்கொள்கைகள் சிறிது சிறிதாகப் புகத் தொடங்கின என்பதும் நன்கு அறியக் கிடக்கிறது.
எனினும், கூர்த்தஅறிவு கொண்டுகாணின், ‘பழந்தமிழர் நாகரிகம் இது’ என்பதைச் சங்க நூற்களைக் கொண்டு எளிதில் உணரலாம். இதனை உணர விரும்பாதாரும் உணர அறிவற்றாருமே, ‘இரண்டையும் பிரித்துணரல் இயலாது’ என்பர்.
நாடு: சோழநாடு என்பது தஞ்சை, திருச்சிக் கோட்டங்களைக் கொண்ட நிலப்பரப்பாகும். வடக்கும் தெற்கும் வெள்ளாறுகள்; கிழக்கே கடல், மேற்கே கோட்டைக் கரை இதற்கு எல்லைகள் ஆகும். ‘கோட்டைக் கரை’ என்பது ஆற்றங்கரை மீதமைந்த கோட்டை, அஃதாவது ஆற்றங்கரையை மிகவுயர்த்திக் கோட்டை போலக்கட்டப்பெற்ற அரண் அமைப்பாகும்.
இஃது திருச்சிக் கோட்டத்தில் உள்ள குழித்தலை நாட்டில் உள்ளது. கோட்டையின் சிதைவுகள் இன்றும் காணக்கிடக்கின்றன.[1] இந்நாடு தட்டையான சமவெளி மலைகள் அற்றது; காவிரியாறு தன் பல கிளையாறுகளுடன் பரந்து பாயும் செழுமையுடையது.
இச்சமவெளி மேற்கே சிறிது உயர்ந்தும் கிழக்கே சிறிது தாழ்ந்தும் இருக்கின்றது. காவிரி கடலருகில் பல கிளைகளாகப் பிரிந்து கடலை அடைகின்றது. அந்த இடத்தில் காவிரியால் தேக்கப்படும் வண்டல், நாட்டைச் செழுமைப்படுத்துகிறது. காவிரியும் அதன் கிளைகளும் கடலோடு கலக்கும் இடம் நீண்ட சமவெளியாகும்.
அந்த இடம், பார்க்கத்தக்க பண்புடையது. சோழநாட்டில் நெல்வயல்கள் மிக்குள்ளன. மாமரங்கள்,தென்னைமரங்கள், பழமரங்கள் என்பன நன்றாக செழித்து வளருகின்றன. சோணாட்டில் காடுகளே இல்லை.[2] ‘யானை படுக்கும் அளவுள்ள இடத்தில் விளையும் பயிர் எழுவரை உண்பிக்கும் வளமுடைய சோணாடு என்று ஆவூர் மூலங்கிழார் அறைந்துளர்.[3] ஒரு வேலி நிலத்தில் ஆயிரம் கலம் நெல் விளைந்ததென்று பொருநர் ஆற்றுப்படை ஆசிரியர் கூறியுள்ளார்.[4]
நாட்டின் பிரிவுகள்: சங்க நாளில் நாட்டின் பிரிவுகட்குக் கூற்றம், கோட்டம், நாடு என்னும் பெயர்கள் வழங்கின. குறிச்சி, பாடி, ஊர், குடி, பதி, பாக்கம், பட்டினம், நகர் முதலியன ஊர்கட்கு வழங்கிய பெயர்களாகும். இவற்றுள் பட்டினம், நகர் என்பன பேரூர் அல்லது அரசன் உறையும் ஊரைக் குறிக்கும். இவ்விரண்டினுள் பட்டினம் என்பது கடற்கரையில் உள்ள நகராகும்.[5]
காவிரியாறு: காவிரியாறே சோணாட்டின் செழுமைக்குக் காரணமானது. ஆதலின் அதனைப்பற்றிப் பிற்காலத்தே பல கதைகள் எழுந்தன. அவற்றை மணிமேகலையிற் காண்க. காவிரி, ‘செவிலித்தாய் என்ன ஒம்பும் தீம்புனற் கன்னி’ என்று சிவஞானமுனிவரும் பாராட்டத்தக்க சிறப்புடையது.
அது பொன்னைக் கொழித்தலாற் பொன்னி எனவும், சோலைகளைத் தன் இருபுறங்களிலும் விரிந்திருக்கப் பெற்றமையின் காவிரி எனவும் பெயர் பெற்றன.இதன் சிறப்பை நன்குணர்ந்தே கி.பி. 12ஆம் நூற்றாண்டினரான சேக்கிழார் “வருநா ளென்றும் பிழையாத் தெய்வப் பொன்னி” என்றார்.
இங்ஙனம் பிற்காலப் புலவரும் போற்றுந்தகைமை உடையதாய அக்காவிரி, சோணாட்டுக் குடிகட்குச் செவிலித்தாயாக அமைந்ததில் வியப்பில்லை அன்றோ? ஆண்டுதோறும் புது நீர்ப் பெருக்கம் வரும்பொழுது பதினெட்டுப் படிகளும் நீரில் மறையுமாம்.
அந்த நாளே ‘பதினெட்டாம் பெருக்கம்’ என்று பண்டையோர் காவிரியாற்றுக்கு வணக்கம் செய்து வந்தனர். இக்காவிரியைப் பெண்ணாக உருவகப்படுத்திப் பாடப்பெற்ற காவிரிப்பாக்களைச் சிலப்பதிகாரத்திற் கண்டு மகிழ்க.
நகரங்கள்: பண்டைச் சோழநாட்டின் துறைமுகப் பட்டினமாக இருந்த பெருமை பெற்றது காவிரிப்பூம் பட்டினம். அந்த இடம் மணிமேகலை காலத்திற் கடல் கொண்டது. அந்த இடத்தை உணர்த்த இன்று காவிரிப் பட்டினம் என்ற பெயருடன் அங்கு ஒரு சிற்றூர் இருக்கிறது.
அந்த இடத்திற் கிடைத்த கல்வெட்டுகள் அங்குதான் புகார் இருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன.[6] தவிர, நாகப்பட்டினமும் சிறந்த துறைமுக நகரமாகும். இன்று சிற்றூராகக் கிடக்கும் உறையூர் பண்டைச் சோழர் கோ நகரங்களில் ஒன்றாகும். குடந்தை அல்லது கும்பகோணம் சோணாட்டுப் பழைய நகரங்களில் ஒன்றாகும்.
தொடரும்...