இந்தியாவில் சில்லறை விற்பனைக்கான பண வீக்கம் அதிகரிப்பு!

Mayoorikka
2 years ago
இந்தியாவில் சில்லறை விற்பனைக்கான பண வீக்கம் அதிகரிப்பு!

கடந்த 3 மாதமாக சில்லறை விற்பனைக்கான பண வீக்கம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஆர்பிஐ நிர்ணயித்துள்ள 6 சதவீதம் என்ற நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணின் இலக்கையும் தாண்டியுள்ளது.

இந்தியாவில், கடந்த மார்ச் மாதத்தில் மொத்த விலை பண வீக்கம் 14.55 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் கச்சா எண்ணெய் மற்றும் சரக்கு விலையின் உயர்வே என கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கடந்த 12 மாதங்களாக இரட்டை இலக்கு எண்களில் மொத்த விலை பண வீக்கம் பதிவாகி வருகிறது. 

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் பணவீக்கம் 14.87 சதவீதமாக இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 13.11 சதவீதமாகவும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7.89 சதவீதமாகவும் பணவீக்கம் இருந்தநிலையில், இந்த ஆண்டு மார்ச் மாத பணவீக்கம் 14.55 ஆக கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.

அதேநேரம் உணவு பொருட்களுக்கான பணவீக்கம் பிப்ரவரியில் 8.19 சதவீதமாக இருந்தது, இந்த மாதம் 8.06 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று காய்கறி பணவீக்கம், கடந்த பிப்ரவரியில் 26.93 சதவீதமாக இருந்தது 19.88 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் பணவீக்கம் உயர்ந்ததற்கு காரணம் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, கனிம எண்ணெய், உலோகங்கள் ஆகியவற்றின் விலை உயர்வே ஆகும். ரஷியா- உக்ரைன் போரினால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

தயாரிக்கப்பட்ட பொருட்களின் பணவீக்கம் கடந்த மாத 9.84 சதவீதத்தில் இருந்து 10.71 சதவீதமாக உயர்ந்துள்ளது. எரிபொருள் மற்றும் ஆற்றலுக்கான விலை 34.52 சதவீதம் உயர்ந்துள்ளது. கச்சா பெட்ரோலுக்கான பணவீக்கம் 83.56 சதவீதமாக மார்ச் மாதம் உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனைக்கான பண வீக்கம் 6.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 3 மாதமாக சில்லறை விற்பனைக்கான பண வீக்கம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஆர்பிஐ நிர்ணயித்துள்ள 6 சதவீதம் என்ற நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணின் இலக்கையும் தாண்டியுள்ளது.